நாடுகடத்தப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர் ஹீத்ரோவில் கைது
15 Nov,2019
துருக்கியில் இருந்து நாடுகடத்தப்பட்ட இஸ்லாமியப் பயங்கரவாத சந்தேகநபர் ஹீத்ரோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான சந்தேகநபர், பயங்கரவாத தடைச்சட்டம் 2006 இன் 5 வது பிரிவின் கீழ் சிரியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யபட்டதாக ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு விவரங்களையும் வெளியிட மறுத்துள்ள உள்துறை அமைச்சு அலுவலகம், தனிப்பட்ட வழக்குகள் குறித்து கருத்துத் தெரிவிக்கமுடியாது என்று கூறியுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த பயங்கரவாத சந்தேகநபர் லண்டனுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சகம் இன்றையதினம் தெரிவித்திருந்தது.
மேலும் அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு இவ்வாறான பயங்கரவாத சந்தேகநபர்களை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது.
ஒரு குழந்தை உட்பட இரு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் ஆகியோர் இன்றையதினம் இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பேர்லினுக்குச் செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டதாக துருக்கிய அரசின் அனடோலு (Anadolu) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது