சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை – பக்கத்து வீட்டு பாதகன் செய்த செயல்!
10 Nov,2019
நாகை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்த பக்கத்து வீட்டு பாதகனை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டின் கொல்லைப் புறத்திற்குச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதறிப் போன பெற்றோர், மகளைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது, ஒரு இடத்தில் மாணவி மயங்கிய நிலையில் கிடந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொண்டு வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். மாணவியின் உடலில் நகக் கீறல்கள் இருப்பதைக் கண்ட அவரது தந்தை, இதுதொடர்பாக திருவெண்காடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி வீட்டின் அக்கம்பக்கத்தில் வசிப்போரிடம் விசாரணையை தொடங்கினர்.
அப்போது, மாணவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்யாண சுந்தரம் என்ற இளைஞன் முன்னுக்குப் பின் முரணாக பேசியதாகக் கூறப்படுகிறது. மாணவி மீட்கப்பட்ட இடத்திற்கு அருகே அவனை பார்த்ததாக ஒருவர் போலீசிடம் தகவல் சொன்னதும், அவன் பதற்றம் அடைந்து, சந்தேகத்திற்கு இடமாக பதில் அளிக்கவே போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவனிடம் உரிய முறையில் விசாரித்த போது உண்மை வெளிச்சத்திற்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.
கொல்லைப் புறத்திற்குச் சென்ற மாணவியை பின் தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை கல்யாண சுந்தரம் ஒப்புக் கொண்டதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து அவனைக் கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.