இரத்த நாளங்களை பாதிக்கும் உணவு பொருட்கள்
04 Nov,2019
இன்றைய திகதியில் எம்மில் பலரும் மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை நடைமுறையால், பசிக்கும் பொழுது நிறைய உணவு வகைகளை வேகமாக உண்கிறோம். அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், மைதா, வெள்ளை சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை நாளாந்தம் சாப்பிடுகிறோம்.
இதன் காரணமாகத்தான் எம்முடைய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது என்றும், அதனாலேயே மாரடைப்பு, உடற்பருமன் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் உண்டாகிறது என்றும் தெரிவிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களான சமையல் எண்ணெய், மைதா, வெள்ளை சர்க்கரை என அனைத்து வகையினதான சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களால் எம்முடைய ரத்தநாளங்களில் சிதைவு, அடைப்பு, அழிவு, இரத்த கசிவு போன்றவை உண்டாகின்றன.
எம்முடைய உடலமைப்பும், செரிமான மண்டலமும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களுக்காக வடிவமைக்கப்பட்டவையல்ல. இதனை உணர்ந்து நாம் இத்தகைய உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். அதையும் கடந்து சாப்பிட்டால், செரிமான மண்டலம் இதற்கு எதிர்வினை ஆற்றாமல், சுத்திக்கரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை, கொழுப்பாக மாற்றி உடலின் பல பகுதிகளில்.. குறிப்பாக வயிறு, கை, கால், தொடை போன்ற பகுதிகளில் சேமித்து வைத்து விடும். உடல் பருமனுக்கு இதுவே பிரதான காரணம். அத்துடன் அதிக அளவிலான கொழுப்புகள் சேர்வதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் செயல்பாட்டிற்கு பெரும் தடை ஏற்படுகிறது. நாளடைவில் உடலில் சேகரிக்கப்பட்ட கொழுப்புகளும் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்துவிடும். இதனால் உடல் பருமன் மட்டுமல்ல, கண்டறிய இயலாத உடல் ஆரோக்கிய சீர்கேடுகளும் உருவாகும். அதனால் சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களான வெள்ளை சர்க்கரை, மைதா, சமையல் எண்ணெய் ஆகியவற்றை முற்றாக தவிர்ப்போம். உடல்நலம் காப்போம். இதய ஆரோக்கியத்தை பேணுவோம்.