உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம்!
26 Oct,2019
உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவன இணை நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
போர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் முதல் இடத்தை அமேசான் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான ஜெஃப் பேஜோஸ் ((Jeff Bezos)) வகித்து வந்தார். அண்மையில் அமேசான் நிறுவனம் 3ஆவது நிதி காலாண்டில் பங்கு சந்தையில் 7 பில்லியன் டாலர் அளவுக்கு பெரும் இழப்பை சந்தித்தது. அமேசான் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
இதனால் பேஜோஸின் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் டாலராக குறைந்தது. இதையடுத்து 105.7 பில்லியன் டாலர் சொத்துகளை கொண்ட பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்துக்கு வந்தார். பேஜோஸ் 2ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
போர்ப்ஸ் பத்திரிகையின் உலக பணக்காரர்கள் பட்டியலில் 24 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸ், 2018ம் ஆண்டில் 2ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தை பேஜோஸ் 160 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது