டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்தன
05 Sep,2019
பிரான்ஸில் 22 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்துள்ளன.
டயானாவின் உயிரை காப்பாற்ற போராடிய பரிஸ் தீயணைப்பு வீரர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஊடாக இந்த இரகசியம் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டுள்ள பரிஸ் தீயணைப்பு வீரர் Xavier Gourmelon, ‘1997 ஆம் ஆண்டில் பரிஸில் உள்ள ஆல்மா சுரங்கப்பாதையில் இளவரசி சென்ற விபத்துக்குள்ளான போது, சம்பவ இடத்திற்கு சென்ற அவசர உதவி சேவை வீரர்களில் நானும் ஒருவர்.
கார் விபத்துக்குள்ளாகி இருந்தது, வழக்கமான வீதி விபத்து போலவே நாங்கள் அதைக் கையாண்டோம்.
என்னைப் பொறுத்தவரை அது ஒரு சாதாரண போக்குவரத்து விபத்து, இது வேகம் மற்றும் குடிபோதையில் ஓட்டுநர் என வழக்கமான காரணங்களால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிந்தது.
இளவரசியுடைய வலது தோள்பட்டையில் லேசான காயம் இருப்பதை என்னால் காண முடிந்தது, ஆனால் அது தவிர, குறிப்பிடத்தக்க எதுவும் இல்லை. அவர் மீது இரத்தம் எதுவும் இல்லை.
நான் அவர் கையைப் பிடித்து அமைதியாக இருக்கும்படி சொன்னேன், நான் உதவி செய்ய இருக்கிறேன் என்றும் சொன்னேன், அவருக்கு உறுதியளித்தேன்.
இளவரசி டயானா, ‘என் கடவுளே, என்ன நடந்தது?’ என என்னிடம் கேட்டார்.
நான் அவர் இதயத்தை மசாஜ் செய்தேன், சில நொடிகள் கழித்து இளவரசி மீண்டும் சுவாசிக்க ஆரம்பித்தார்.
இது நிச்சயமாக ஒரு நிவாரணமாக இருந்தது, ஏனெனில், முதலில், அவரின் உயிரைக் காப்பாற்ற நினைத்தேன். அதைத்தான் நான் அங்கு செய்தேன்.
உண்மையைச் சொல்வதென்றால் அவர் வாழ்வார் என்று நினைத்தேன். அம்பியுலன்ஸில் இருந்தபோது எனக்குத் தெரிந்தவரை உயிருடன் இருந்தார், அவர் வாழ்வார் என்று நான் எதிர்பார்த்தேன்.
ஆனால் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்று தகவல் வந்தது. அது மிகவும் வருத்தமாக இருந்தது.
முழு சம்பவமும் இன்னும் என் மனதில் இருக்கிறது. மேலும் அந்த இரவின் நினைவு எப்போதும் என்னுடன் இருக்கும். அது இளவரசி டயானா என்று எனக்கு அப்போது தெரியாது.
அம்பியுலன்ஸில் வைக்கப்பட்டபோது தான் துணை மருத்துவர்களில் ஒருவர் அது இளவரசி என என்னிடம் கூறினார்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.