கள்ளக்காதலியை கொன்று புதைத்த மாற்றுத்திறனாளி!
26 Aug,2019
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கள்ளக்காதலியை கொன்று புதைத்து விட்டதாக அவரது கணவனுக்கே வாட்ஸப்பில் தகவல் அனுப்பிய மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
பொன்னமராவதி அடுத்த பொன்னைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி பாண்டிச்செல்வி. கணவர் பெருமாள் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், மகள் மற்றும் மகனுடன் பாண்டிச்செல்வி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளி ரெங்கையா என்பவருக்கும், பாண்டிச்செல்விக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. ஒருவர் வீட்டுக்கு ஒருவர் செல்வதும், வருவதுமாக அவர்களது உறவு நீடித்து வந்த நிலையில், கடந்த 22ம் தேதி 100 நாள் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு ரெங்கையா வீட்டுக்கு சென்ற பாண்டிச்செல்வி வீடு திரும்பவில்லை.
இதையடுத்து மகளை காணாததால், அவரது தந்தை சோலை முத்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், டி.எஸ்.பி தமிழ்மாறன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சிங்கப்பூரிலுள்ள பாண்டிச்செல்வியின் கணவருக்கு, வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பிய ரெங்கையா, அவரது மனைவியை கொலை செய்து புதைத்து விட்டதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் கூறியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெருமாள் தனது ரெங்கையா அனுப்பிய தகவலை மாமனார் மூலம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரெங்கையாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பாண்டிச்செல்விக்கு தனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்து வாழைக்குறிச்சியில் உள்ள பெரிய கண்மாய் பகுதியில் புதைத்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான்.
இதையடுத்து ரெங்கையாவை அவன் கூறிய இடத்துக்கு அழைத்து சென்ற, டிஎஸ்பி தமிழ்மாறன் தலைமையிலான போலீசார், பொன்னமராவதி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் முன்னிலையில், பாண்டிச்செல்வியின் உடலை தோண்டி எடுத்தனர்.
மேலும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, ரெங்கையாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சரியாக நடக்கக் கூட முடியாத மாற்றுத்திறனாளி தனி ஆளாக பெண்ணை கொலை செய்து, புதைத்திருக்க முடியாது என சந்தேகிக்கும் போலீசார், கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.