ஜெர்மனியில் சோயபீன்ஸ் எனக் கூறி கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.7,733 கோடி போதைப்பொருள்!
04 Aug,2019
ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவுக்கு, சுமார் 7733 கோடி ரூபாய் மதிப்பு கொகைன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உருகுவே நாட்டிலிருந்து ஜெர்மனி வழியாக பெல்ஜியம் நோக்கி செல்லும் கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ஜெர்மன் நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அந்நாட்டின் துறைமுக நகரமான ஹாம்பர்க் வந்த கப்பலை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் சோயபீன்ஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் அதிலிருந்த பார்சல்களை பிரித்து பார்த்ததில், சோயாபீன்களுக்கு பதில் கொகைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சோதனையில், 200 கருப்பு நிற பைகளில் இருந்த 4,200 கொகைன் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கடத்தல் சம்பவத்தை உறுதி செய்துள்ள அந்நாட்டு அதிகாரிகள், சுமார் 7733 கோடி ரூபாய் மதிப்பு போதைப்பொருள் சிக்கியதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு, இதே துறைமுகத்தில் சுமார் 5573 கோடி கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்ததே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது