சமீபத்தில், ஒரு தம்பதி, தம் குழந்தையை என்னிடம் அழைத்து வந்தனர். மூச்சுத் திணறல் இருப்பதாக சொன்னார்கள்; பரிசோதனைகளை செய்தோம்; எந்தப் பிரச்னையும் இல்லை; எல்லாம் சரியாகவே இருந்தது.
குழந்தையிடம் மெதுவாகப் பேசிப் பார்த்ததில், அவளுக்கு பள்ளி செல்வது, பாடம் படிப்பது பிடிக்கவில்லை என்று தெரிந்தது. வகுப்பு ஆசிரியர், கேள்வி கேட்டபோதெல்லாம், மூச்சு திணறல் வந்ததைப் போல நடித்திருக்கிறாள்.
இன்னொரு சம்பவம் சொல்கிறேன்ஸ
பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள்; மகளுக்கு தலைவலி என்று அழைத்து வந்தனர். குழந்தையின் நடவடிக்கையில் எந்தக் குறையும் இல்லாமல் வளர வேண்டும் என்பதற்காக, அவளை சுதந்திரமாக செயல்பட விடாமல், பாதுகாப்புடன் வளர்த்தனர்.
தனக்கு சுதந்திரம் இல்லை என்பதைச் சொல்லத் தெரியாமல் பதற்றம் ஏற்படும்போதெல்லாம், தலைவலி எனச் சொல்லி சமாளித்திருக்கிறாள். இரு குழந்தைகளுமே, மனப் பதற்றத்தை தான், மூச்சுத் திணறல், தலைவலியாக வெளிப்படுத்தியுள்ளனர்.
காரணங்கள்
* எந்த வேலையையும் குழந்தையை தன்னிச்சையாக செய்ய விடாமல், அதீத பாதுகாப்புடன் வளர்ப்பது.
* அப்பெண்ணின் தாயிடம் பேசியபோது, தனக்கும், தன் மகனுக்கும், மூச்சிழுப்பு பிரச்னை இருக்கிறது என்றும், அது ஏற்படும் பொழுதெல்லாம், மற்றவர்களின் கவனம் முழுவதும் தங்கள் மீதே இருக்கும் என்றும் கூறினார். அப்போது தான் எனக்கு பொறி தட்டியது, இந்த சிறுமி பாடம் படிப்பதைத் தவிர்க்க இது போன்று நடிக்கிறாள் என்பது.
* பெற்றோரிடையே பரஸ்பர அன்பு, நம்பிக்கை இல்லாமல் இருப்பது.
* கர்ப்ப காலத்தில், தாய்க்கு பதற்றம், மன அழுத்தம் இருந்து, அதற்கான சிகிச்சை தராத பட்சத்தில், கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும்.
* சில குழந்தைகளுக்கு, இயல்பாகவே, கூச்சம், தயக்கம் இருக்கலாம். இவர்களால், எந்த வேலையிலும் முழுமையாக திறனை வெளிப்படுத்த இயலாது. பிரச்னையை யோசித்து, அதிலிருந்து வெளியே வர முடியாது; வேலைகளை செய்யாமல் தவிர்ப்பர்.
குழந்தைகளுக்கு, மனப் பிரச்னைகள், எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. கூட்டுக் குடும்பங்களாக இருந்த போது, தாத்தா, பாட்டி, மற்ற உறவினர்கள் என்று, யாராவது ஒருவர், குழந்தையுடன் இருப்பர். பெற்றோர் இல்லாவிட்டாலும், குழந்தையின் பிரச்னைகளை, காது கொடுத்துக் கேட்பர். இன்று, பெரும்பாலான நேரங்களில், தனிமையில் இருக்கும் குழந்தையால், தன் பிரச்னைகளை பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.
ஏதோ, ஒரு விஷயத்தில் குழந்தை பயப்படுகிறது, பதற்றப்படுகிறது என்று தெரிந்தவுடன், பெற்றோர் கவனித்து சரி செய்து விட வேண்டும். ஆனால், பிரச்னை பெரிதாகி, பள்ளியில், வெளியிடங்களில் யாராவது கவனித்து சொன்ன பிறகே, மருத்துவ உதவிக்கு வருகின்றனர்.
இது தான், உண்மையிலேயே மிகப் பெரிய பிரச்னை