அ.தி.மு.க. எம்.பி.யின் மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
30 Jul,2019
அதிமுக முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த அவரது மகன் பிரவீன், 3 மாதங்களுக்குப் பின் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்செங்கோடு தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தைவேலு கடந்த 4 ஆண்டுக்கு முன் வயது மூப்பின் காரணமாக காலமானார். அதன் பின் 63 வயதான அவருடைய மனைவி ரத்தினம், சென்னை சாஸ்திரி நகர் 6-வது அவென்யூவில் உள்ள சொந்த வீட்டில் மகன் பிரவீனுடன் வசித்து வந்தார். மேல் படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டு, சில மாதங்களுக்கு முன்பு பிரவீன் சென்னை திரும்பினார்.
சொத்து தகராறு காரணமாக, தாய் ரத்தினத்துக்கும், மகன் பிரவீனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கடந்த ஏப்ரல் 14-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த ரத்தினத்தின் கை, கால்களை கட்டியும், கழுத்தை நெறித்து, மார்பில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்து விட்டு பிரவீண் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இந்த கொடூர கொலை குறித்து, வழக்குப்பதிவு செய்த சாஸ்திரிநகர் போலீசார், கொலையாளியை பிடிக்க உதவி ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையில், மூன்று தனிப்படைகள் அமைத்து பிரவீனை தேடி வந்தனர். மேலும் பிரவீன் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவனது பாஸ்போர்டை முடக்கி இருந்தனர்.
பிரவீன் தனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதை ஆய்வு செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக பாலவாக்கம் ஜீவரத்தினம் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சத்தியஜோதி, மற்றும் அவருடைய மனைவி ராணி ஆகிய இருவரையும் மே மாதம் கைது செய்தனர்.
இந்நிலையில் தலைமறைவானது முதல் பிரவீண் இன்டர்நெட் உதவியுடன் நண்பர்களுடன் செல்போனில் பேசி வந்ததால் அவனை பிடிப்பதற்கு சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர். அதன் அடிப்படையில் பிரவீன் டெல்லியில் இருப்பதை கண்டறிந்து, சாஸ்திரி நகர் காவல்நிலைய ஆய்வாளர் பலவேசம் தலைமையிலான தனிப்படையினர், பிற்பகலில் அவனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிரவீன், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நாளை சென்னை அழைத்து வரப்பட இருக்கிறான். போலீஸ் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவான்.