சில ஞாபகங்கள்
17 Jul,2019
ஊருக்குள் எல்லா இயக்கங்களும் உலவி திரிந்த ஒரு காலம் இருந்தது.
விரும்பிய இயக்கத்துக்கு போவதுவும் வீண்பழி சுமத்தி யார்மீதும் குண்டுகள் பாயாத வாழ்வும் இருந்தது.
அதுவெல்லாம் ஒரு நல்ல கனவு போல பின்னாளில் கலைந்து போனது.
இந்திய இராணுவம் குடியிருந்த காலை பொழுதொன்றில் தம்பசெட்டியில் இருக்கிற ரவியின் வீட்டுக்குள் துப்பாக்கிகள் சுமந்த ஐந்து இளைஞர்கள் நுழைகிறார்கள். ரவியின் கைகளையும் கண்களையும் துணியால் கட்டி அவனை அழைத்துக் கொண்டு நடைதூரத்தில இருக்கிற குகனின் வீட்டுக்கு போகிறார்கள். ரவியின் மூலமாக குகனை கூப்பிடுகிறார்கள். வெளியில் வருகிற குகனையும் பிடித்து கைகளை கட்ட முயற்சிக்கிறார்கள். இளைஞர்களை தள்ளிவிட்டு குகன் பாய்ந்து ஓடிவிடுகிறான். தங்கள் பிடியில் இருந்த ரவியை சுட்டுவிட்டு அந்த இளைஞர்கள் போய்விடுகிறார்கள். தலையில் குண்டுபட்ட ரவி அந்த இடத்திலேயே இறந்துபோகிறான்.
இப்படிதான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஹாட்லியில் கூடப் படித்த ஒரு அப்பாவியின் மரணத்தை கடக்க நேர்ந்தது.
எந்த இயக்கமும் உரிமை கோரமலும் எந்த அமைப்பும் அஞ்சலி செலுத்தாமலும் ஒரு அநியாயம் நடந்தேறியது.
இந்த துயர் நடப்பதற்கு இரண்டு கிழமைக்கு முன்னர் மருதடியில் தற்செயலாக அவனை சந்திக்க கிடைத்தது.
உயர்தர பரீட்சை திருப்தியாக செய்திருப்பதாக சொன்னான். எந்த இயக்கமும் விமர்சனங்களை சகித்துக் கொள்ள தயாரில்லை என்றும் தேவையில்லாமல் அரசியல் கதைக்கவேண்டாம் என்றும் சொல்லிவிட்டு போனவன்.
மருத்துவதுறைக்கு போவதுக்கு போதுமான பரீட்சை பெறுபேறு வந்தபோது அவன் உயிருடன் இல்லை.
கறுப்பும் வெள்ளையும் மட்டும் கண்ணுக்கு தெரிந்தவர் துரோகி என்றோ அல்லது தியாகி என்றோ சொல்லியிருக்ககூடும். வழமைபோல மௌனம் காத்து உயிர் காவிய உறுத்தல் இப்போதும் இருக்கிறது .
இப்போதெல்லாம் இல்லாமல்போன எல்லா நண்பர்களையும் நினைவுகூர்வதும் தோற்றுபோனவரின் நியாயங்களை பேசுவதும் வாழ்க்கையாகிப்போனது.
தொண்ணூறுகளின் மத்தியில் பேராதனை படிப்பு முடிந்து போனது. வேலை தேட வசதியாக கொழும்புக்கு நகர வேண்டியிருந்தது. வெள்ளவத்தையிலோ பம்பலப்பிட்டியிலோ தங்குவதற்கு வெளிநாட்டு காசோ அல்லது கொழுத்த சம்பளம் தருகிற தொழிலோ வாய்க்கவில்லை. கொஞ்சம் தள்ளி கல்கிசையில் மலிவாக அறையொன்று வாடகைக்கு கிடைத்தது. பெரிய வசதிகள் இல்லையென்றாலும் விரும்பிய நேரத்தில் 100 அல்லது 101 பஸ்சில் தொற்றி புறக்கோட்டை வரை பயனிக்கலாம் என்பதால் அதுவே சிலகாலம் இருப்பிடமானது.
ஓடியன் தியேட்டருக்கு எதிராக காலி வீதியில் இருந்த அறையின் கீழ்தளத்தில் வீட்டு உரிமையாளரும் அதற்கு கீழே பழக்கடை ஒன்றும் இருந்தது. மாத்தறையை சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவர் பழக்கடையை நடத்தினார். அதற்கு பக்கத்தில் இரண்டு தமிழ்க்கடைகள் இருந்தது. ஒன்று பலசரக்கு கடை , மற்றையது கொமினிகேசன்.
காரைநகரை சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் அந்த கடைகளை நடத்தினார்கள்.
வெளியில் கொட்டிக்கிடக்கிற சந்தோசங்களிலோ பொழுதுபோக்குகளிலோ அவர்கள் தலை காட்டுவது கிடையாது.
தவம் செய்வதை போல கடையும் வியாபாரமும் என மூழ்கிக் கிடப்பார்கள்.
விடுமுறை நாட்களிலும் பின்னிரவுகளிலும் அந்த கடைகள் திறந்திருக்கும்.
சிலசமயங்கலில் குடித்துவிட்டு வந்து யாரேனும் சிகரெட் கடனுக்கு கேட்பார்கள். அவர்கள் தர முடியாது என்பார்கள். போதை தலையில் தாண்டவமாட கடன் கேட்டவன் பற தெமலா என்றும் கொட்டியா என்றும் கத்துவான். அவர்கள் காதில் வாங்கிகொள்ளாமல் தங்கள் வேலையை பார்பார்கள். ஆச்சரியமாக இருக்கும்.
அவர்களின் கடின உழைப்பையும் பணம் சம்பாதிபதையும் பார்த்து பொறாமை படுகிற அயலவர் பேச்சை பல தடவைகள் கேட்டிருக்கிறேன் .
வெளிநாட்டுக்கு தொலைபேசி அழைப்பெடுக்கும் நம்மவர் புண்ணியத்தில் அந்த காலத்தில் கொமினிகேசன் வியாபாரமும் கொடிகட்டி பறந்தது.
ஒரு நாள் காலை கொமினிகேசன் மூடியிருந்தது. அதற்கு முன்னால் சின்னதாக கூட்டம் இருந்தது. அந்த தமிழ் இழைஞனை போலீஸ் கைது செய்ததாகவும் அவனிடம் தூள் இருந்ததாகவும் அவர்கள் பேசிகொண்டார்கள். வழமையை போல அந்த சம்பவமும் மனிதர்களும் மறந்து போனது.
அண்மையில் பத்திரிகையில் தூக்குத் தண்டனைக்கு காத்திருகப்பவர் பட்டியலை பார்க்க கிடைத்தது. அந்த தமிழ் இளைஞனின் பெயரும் அதில் இருந்தது