சிறுவர்களின் வீடு
14 Jul,2019
சுற்றுச்சுவரில் ஒரு சிறுவன்
பச்சிலையால் ஸ்டம்ப் வரைகிறான்.
வாசலில் ஒரு சிறுவன்
பாண்டி விளையாடுகிறான்.
முற்றத்தில் ஒரு சிறுவன்
மழையிலாடுகிறான்.
கூடத்தில் ஒரு சிறுவன்
பல்லாங்குழி விளையாடுகிறான்.
சமையலறையில் ஒரு சிறுவன்
சாமிக்குப் படைப்பவற்றை ருசிபார்க்கிறான்.
கழிப்பறையில் ஒரு சிறுவன்
கதவைத் திறந்துவைத்துப் போகிறான்.
குளியலறையில் ஒரு சிறுவன்
சத்தமாகப் பாடுகிறான்.
படுக்கையறையில் ஒரு சிறுவன்
அம்மாவின் மேல் கால்போட்டுத் தூங்குகிறான்...
ஞாபகங்களால் வேய்ந்த என் வீட்டில்
சிறுவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள்!