`20 ஆண்டுகளுக்கு முன் வரை, கூட்டுக்குடும்பமாக வசித்ததால், வீட்டுப் பெரியவர்கள் கருவுற்ற பெண்களின் தேவையறிந்து செயல்பட்டார்கள். இதனால் பெரும்பாலும் சுகப்பிரசவங்களே நிகழ்ந்தன. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது மூன்று முதல் பத்துக் குழந்தைகள் இருந்தனர்’’ என்று சொல்லும் ஆயுர்வேத மருத்துவர் எஸ்.சௌரிராஜன், கரு உருவாவது முதல் பிரசவ காலம் வரை பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், அதற்கேற்ற உணவுமுறைகள் பற்றியும் கூறுகிறார்.
“கருவுற்ற பெண்ணுக்கு முதல் மாதத்தில் சோர்வு அதிகமாக இருக்கும். காலை நேரத்தில் உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும். தூக்கம் அதிகமாக வரும். சிலருக்கு முதல் மாதம் தொடங்கும்போது வாந்தி உண்டாகும். அப்போது, நாடியில் மாற்றங்கள் தென்படும். அந்தக் காலத்தில், இந்த அறிகுறிகளைக் கொண்டே கர்ப்பம் உண்டாகி இருப்பதை அறிந்துகொள்வார்கள்.
இரண்டாவது மாதத்தில் வாந்தி, மயக்கம் அதிகமாக இருக்கும். நீர்ச்சத்து குறைவதால் உடல் பலவீனமாகி தலைச்சுற்றல் ஏற்படும். இதைச் சரிசெய்ய நீர்ச்சத்து அதிகமுள்ள ஆகாரங்கள், பழச்சாறுகளை எடுத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக, மாதுளைச்சாறு அருந்துவதால் கர்ப்பப்பை வலுப்பெறும்ஸ கருச்சிதைவு ஏற்படாமலிருக்கவும் இது உதவும். இந்தக் காலகட்டத்தில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நலம்.
முதல் மூன்று மாதங்கள் சற்று கவனமாகவும், அதிக எடை தூக்காமலும் இருப்பது நல்லது. மூன்றாவது மாதம் முதல் புரதம் மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மீன், முட்டை போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். காலையில் 10 வேர்க்கடலையும் மாலையில் 10 வேர்க்கடலையும் உண்டுவந்தால், அதிலுள்ள வைட்டமின், தாதுக்கள், இயற்கையான ஃபோலிக் அமிலம் ஆகியவை கிடைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு ஏற்படும். அதைத் தவிர்க்க, கடலையுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து உட்கொள்ள வேண்டும். சர்க்கரையில் உள்ள இரும்புச்சத்து, தாய் சேய் இருவருக்கும் பயனளிக்கும்.
நான்காவது மாதத்தில் இதயம் நன்றாக வளர்ச்சியடையும். இந்தக் காலகட்டத்தில், புளிப்புச் சுவையை – குறிப்பாக, மாங்காயை விரும்பிச் சாப்பிடுவார்கள். வயிற்றில் வளரும் குழந்தை தாயின் ரத்தத்தை அதிகமாக எடுத்துக்கொள்வதால், அம்மாவின் உடலில் ரத்தம் குறையும். இதனால், பித்தம் குறையும். பித்தம் குறைந்தால், புளிப்புச் சுவையை (அம்லரசம்), மாங்காயை விரும்பிச் சாப்பிடுவார்கள். சிலர் புளி, புளியங்காய், சாம்பல் ஆகியவற்றை விரும்பித் தின்பார்கள். நம் ரத்தத்தில் ஆறு சுவை சத்துகளும் உள்ளன. அவற்றில் குறைவு ஏற்படும்போது அதைச் சரிசெய்துகொள்ள, உடல் அதை விருப்பமாகக் கேட்கும். இந்த மாதங்களில் ரத்தசோகை ஏற்படும். அதனால் இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சை, கீரை போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.
ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிக்குப் பிடித்த உணவுகளோடு, ஐந்து வகை சாதங்களும் (மாங்காய், தேங்காய், புளி, எலுமிச்சை, கறிவேப்பிலை) சமைத்துக்கொடுத்து, மகிழ்ச்சியூட்டுவார்கள். இதுபோன்ற செயல்களால், தாய் – குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஐந்தாவது மாதத்தில் குழந்தையின் தசை அதிகமாக வளர்ச்சியடைவதுடன் ரத்தம் அதிகமாக ஊறும். இதயமும் நன்றாக வளர்ச்சியடையும். இதனால்தான் கிராமங்களில், இன்றைக்கும் ஐந்தாவது மாதத்தில் மருந்து கொடுக்கும் சடங்கு நடக்கிறது. வெற்றிலையுடன் குங்குமப்பூ, மிளகு, வேப்பிலை, துளசி, பூண்டு ஆகியவற்றை ஒன்று சேர்த்துச் சாப்பிட வேண்டும். இந்த மருந்து தொற்று நீக்கியாகச் செயல்படுவதோடு, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு உதவுவதாகவும் இருக்கும்.
ஆறாவது மாதத்தில், குழந்தைக்கு அறிவு வளர்ச்சி ஏற்படும். தினமும் நடைப்பயிற்சி செய்தால், தாய்க்கும் சேய்க்கும் நல்லது. ஏழாவது மாதத்தில் கர்ப்பப்பை விரிவடைந்து மூத்திரப்பை அழுத்தப்படும். இதனால் நீர் சரியாகப் பிரியாமல், சிலருக்கு கால்களில் வீக்கம் ஏற்படும். இதைத் தவிர்க்க, உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். தினமும் 15 மில்லி அளவு காலை, மாலை நீர்முள்ளிக் கசாயம் அருந்திவந்தால், கால் வீக்கம் குறைவதுடன் ரத்தஅழுத்தமும் சீராக இருக்கும்.
எட்டாவது மாதத்தில், குழந்தைக்கு `ஓஜஸ்’ உற்பத்தி ஆகும். `ஓஜஸ்’ என்பது சப்த தாதுக்களான ரசம். ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் போன்றவற்றின் எசென்ஸ் ஆகும். இந்த மாதத்தில், ‘மஹாதன்வந்திர குளிக்கா’வை தினமும் காலை, மாலை சாப்பிடுவதால் வயிற்றிலுள்ள வாய்வு குறைந்து, சிரமம் இல்லாமல் சுவாசிக்க உதவியாக இருக்கும். ஒன்பதாவது மாதத்தில், மகப்பேறு சுலபமாக நடக்க தினமும் குளிப்பதற்குமுன், தன்வந்திரத் தைலத்தை வயிற்றைச் சுற்றிலும் தடவி வர வேண்டும். சுகப்பிரசவம் காண இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.
வளைகாப்பின்போது தேங்காய் சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், புதினா சாதம் மற்றும் பொரிவிளங்காய் உருண்டை கொடுப்பார்கள். பொரிவிளங்காய் உருண்டை என்பது, வறுத்த பச்சரிசி மாவில் வெல்லப்பாகு, ஏலக்காய், வறுத்த நிலக்கடலை ஆகியவற்றைச் சேர்த்து, உருண்டையாகப் பிடித்து கர்ப்பிணிக்குக் கொடுப்பார்கள்.
அடுத்துஸ ஒன்பதாவது மாதம் ஏழு நாள்களுக்குப் பிறகு, மகப்பேறு இனிதே நடக்கும்!’’ .