வீதியில் கட்டிவைத்து தாக்கப்பட்ட பெண்? வைரல் வீடியோவின் உண்மை பின்னணி!
21 Jun,2019
இறைச்சி வைத்திருந்ததற்காக வீதியில் கட்டிவைத்து பெண் தாக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.
சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வார காலமாக ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. முஸ்லிம் பெண் ஒருவர் இறைச்சி வைத்திருந்ததற்காக தாக்கப்படுவதாக கூறி அந்த வீடியோவை பரப்பி வருகின்றனர். ஐம்பது நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் கட்டிவைக்கப்பட்ட நிலையில், பொது மக்கள் முன்னிலையில் தாக்கப்படும் பகீர் காட்சிகள் இருக்கின்றன.
‘பொதுவெளியில் பெண் ஒருவர் கட்டிவைக்கப்பட்ட நிலையில் தாக்கப்படுகிறார். மோடியின் இந்து இந்தியா இறைச்சி வைத்திருந்த முஸ்லிம் பெண்ணுக்கு எதிராக குற்றம் செய்கிறது. உலகில் எத்தனை பெரிய மனித உரிமை மீறல் இது? உலக ஊடகம் இந்திய மனித உரிமை மீறல்களை கண்டுகொள்ளவில்லை’ எனும் தகவலுடன் வாட்ஸ்அப் செயலியில் இதே வீடியோ பகிரப்படுகிறது.
வீடியோ காட்சிகளை கூகுளில் தேடிய போது திடுக்கிடும் உண்மை விவரம் வெளியானது. அதில் இந்த வீடியோ உத்தர பிரதேச மாநிலத்தின் புலந்சாகர்ர் பகுதியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த வீடியோவில் இருக்கும் பெண் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டுக்காக இவ்வாறு தாக்கப்பட்டதும் உறுதியாகியுள்ளது.
இந்த சம்பவம் பற்றிய செய்திகள் மார்ச் 10, 2018 இல் வெளியாகியிருக்கின்றன. அவற்றில், சம்பவம் நடந்த பகுதியின் பஞ்சாயத்து உத்தரவின் பேரில் இந்த பெண் பொதுமக்கள் மத்தியில் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ வைரலானதும், தாக்கப்பட்ட பெண்ணை துன்புறுத்தியதற்காக அவரின் கணவர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது மகன் ஆகியோரை கைது செய்திருப்பதாக புலந்சாகர் காவல் அதிகாரி பிரவீன் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.
ஆனால் இதே வீடியோவை கடந்த வாரம் தவறான தகவல்களுடன், அதாவது முஸ்லிம் பெண் தாக்கப்படுவதாக பரப்பி உள்ளனர். இது மக்கள் மனதில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. இவ்வாறான போலி செய்திகள் அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பல சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.