எல்லாருக்கும் ஏதாவது ஒரு விதத்தில், துயரம் இருக்கும்.
குலிசன் எனும் மன்னர், கேகய நாட்டை, நீதி தவறாது, நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். ஒரு நாள், அந்த மன்னரின் அரசவைக்கு, துர்வாச முனிவர் வந்தார். அவரை முறைப்படி வரவேற்று, வணங்கினார்.
'மன்னா... பல காலம் உண்ணாமல் இருந்து, தவம் செய்து, விரதத்தை இன்று தான் முடித்தேன். இப்போது பசிக்கிறது. உன் மனையில் உணவு உண்ண வந்தேன். எனக்கு தகுந்த உணவு படைப்பாயாக...' என்றார், துர்வாசர்.
மன்னருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. 'அனைவரும் போற்றும் அருந்தவ முனிவர், அடியேன் அரண்மனையில் அன்னம் ஏற்க வந்திருப்பது, அளவிலா ஆனந்தத்தை அளிக்கிறது. இதோ, ஏற்பாடு செய்கிறேன்...' என்றவர், உடனடியாக ஏற்பாடுகளை செய்தார்.
துர்வாசரை வணங்கி, அழைத்து, உணவருந்த அமரச் செய்து, தானே பரிமாறினார். மிதமிஞ்சிய மகிழ்ச்சியில், காய்கறி மற்றும் கனி வகைகள் என, பலவற்றையும் படைத்த, மன்னர், பக்குவமாக சமைக்கப்பட்ட மாமிசத்தையும் வைத்தார்.
அதைக் கவனியாமல், உண்டு முடித்த, துர்வாசருக்கு, பிறகே விபரம் தெரிந்தது; கடுந்தவம் செய்து அடைந்த விரதப் பலன், தன்னை விட்டு விலகுவதை உணர்ந்தார்.
கோபத்துடன், 'மன்னா... பல நாள் பட்டினி இருந்த எனக்கு, தகுந்த உணவை அளிக்குமாறு சொல்லியிருந்தும், மாமிசத்தை படைத்து விட்டாய்... நீ புலியாக மாறக்கடவாய்...' என்று, சாபம் கொடுத்து விட்டார்.
தன் தவறை உணர்ந்த, மன்னர், மன்னிப்பு கேட்க, மனம் இரங்கினார் துர்வாசர்.
'திருவாரூரில் உள்ள சிவலிங்கத்தை தரிசித்ததும், உனக்கு சாப விமோசனம் உண்டாகும்...' என, சாப நிவர்த்திக்கான வழி முறையையும் சொன்னார்.
துர்வாசர் சாபத்தின்படி, புலியாக மாறி, காட்டிலேயே திரிந்தார், மன்னர். பல விலங்குகளையும் கொன்று, உண்டு வந்தார்.
இஷ்டப்படி காட்டில் சுற்றி திரிந்த புலியிடம், நந்தினி என்னும், பசு அகப்பட்டது. வழக்கப்படி அதை நெருங்கிய புலி, பசுவை அடிக்கத் துவங்கியது.
'புலியே... சற்று பொறு... சிவ பூஜையை முடித்து, என் கன்றுக்கும் பால் கொடுத்து, வந்து விடுகிறேன். அதன் பின், என்னை உண்ணலாம். சத்தியம் தவற மாட்டேன்...' என்றது, பசு.
புலியும் சம்மதித்து, பசுவை அனுப்பி வைத்தது.
தான் சொன்னபடியே, சிவ பூஜை முடித்து, கன்றுக்கும் பால் அளித்து திரும்பியது. வாக்கு தவறாத பசுவை கண்டதும், புலிக்கு நல்லறிவு திரும்பியது.
'வா... உன்னுடன் வந்து, நீ பூஜை செய்த சிவலிங்கத்தை நானும் தரிசிக்கிறேன்...' என்றது, புலி.
இரண்டும் சேர்ந்து, சிவலிங்கத்தைத் தரிசிக்க, அதே வினாடியில், மன்னருக்கு பழைய உருவம் திரும்பியது; துர்வாசரின் சாபம் தீர்ந்தது. நந்தினி எனும் பசுவும், புலியாக இருந்த மன்னரும் தரிசித்தது, திருவாரூர் சிவலிங்கத்தை தான்.
பசுவிடம் தன் வரலாற்றைச் சொன்ன மன்னர், பழையபடியே நாட்டை அடைந்தார்.
நல்லவர்களின், சத்தியவான்களின் தொடர்பு, நம் தீவினைகளை நீக்கும்; நல்லவற்றை சேர்க்கும் என்பதை விளக்கும் கதை இது. நல்லவர்களின் தொடர்பை வேண்டி பெறுவோம்; நல்லவைகள் எல்லாம் வந்து சேரும்!