நாகர்கோவில், நாகர்கோவிலை அடுத்த கரியமாணிக்கபுரம் பகுதியில் பழையாற்றையொட்டி உள்ள சுடுகாட்டின் தகனமேடையில் நேற்று முன்தினம் காலை ஆண் பிணம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அங்கு ஆண் ஒருவது உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. உடலில் ஆங்காங்கே கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர்.
அடையாளம் தெரிந்தது
போலீசார் நடத்திய விசாரணையில், சுடுகாட்டில் உடல் எரிக்கப்பட்டு கிடந்தவர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர் தெருவைச் சேர்ந்த ரெசி (வயது 40), புகைப்படக்காரர் என்பதும் தெரிய வந்தது.
ரெசி கடந்த 5-ந்தேதி மாலை கன்னியாகுமரி பெருமாள்புரத்தில் இலங்கை அகதிகள் முகாமில் உறவினர் கேத்தீஸ்வரன் (26) என்பவரை பார்க்கச் சென்றுள்ளார்.
அப்போதுதான் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு பெருமாள்புரம் அகதிகள் முகாமில் இருந்த கேத்தீஸ்வரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
திடுக்கிடும் தகவல்கள்
விசாரணையில் ரெசி கொலை செய்யப்பட்டது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
ரெசி இலங்கையைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோருடன் தமிழகத்துக்கு வந்துள்ளார்.
முதலில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சமூக ரெங்கபுரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக ரெசியும், அவருடைய அண்ணனும் வள்ளியூரில் குடியிருந்து வந்தனர். பெற்றோர் மட்டும் அகதிகள் முகாமில் உள்ளனர்.
மனைவியை பிரிந்தவர்
புகைப்படக்காரரான ரெசி ஆர்டரின்பேரில் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
கேத்தீஸ்வரனும் புகைப்படக்காரர் என்பதாலும், இருவரும் உறவினர்கள் என்பதாலும் ரெசி, கேத்தீஸ்வரன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார்.
அப்போது கேத்தீஸ்வரனின் உறவுக்கார பெண்ணுக்கும் (கேத்தீஸ்வரனின் அக்காள்), ரெசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவரம் கேத்தீஸ்வரனுக்கு தெரிய வந்தது.
குத்திக்கொலை
அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. எனவே கேத்தீஸ்வரன், ரெசியை கண்டித்தார்.
ஆனாலும் ரெசி அந்த பெண்ணுடனான தொடர்பை விடவில்லை. எனவே ரெசியை தீர்த்துக்கட்டி விட கேத்தீஸ்வரன் முடிவு செய்தார்.
ரம்ஜான் பண்டிகை அன்று ரெசியை கன்னியாகுமரிக்கு வருமாறு கேத்தீஸ்வரன் அழைத்துள்ளார். ரெசி ஒரு காரில் கன்னியாகுமரிக்கு வந்தார். இருவரும் காரில் அமர்ந்து மது குடித்துள்ளனர்.
அப்போதும் தனது உறவுக்கார பெண்ணுடன் பழகுவதை நிறுத்திக்கொள் என்று ரெசியிடம் கேத்தீஸ்வரன் கூறியுள்ளார்.
அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கேத்தீஸ்வரன் தான் வைத்திருந்த கத்தியால் ரெசியின் கழுத்து, முதுகு, கன்னம் போன்ற பகுதிகளில் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
உடல் எரிப்பு
பிணத்தை என்ன செய்வது? எனத் தெரியாமல் திகைத்த கேத்தீஸ்வரன், தன்னுடைய நண்பர்களான சுசீந்திரம் சன்னதி தெருவைச் சேர்ந்த பழனி (26), பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த முகமது பைசல் (25) ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளார்.
பின்னர் 3 பேரும் ஆலோசனை செய்து அதன்படி கரியமாணிக்கபுரம் சுடுகாட்டில் பிணத்தை எரிக்க முடிவு செய்தனர்.
ரெசி வந்த காரிலேயே அவரது உடலை ஏற்றிக்கொண்டு கரியமாணிக்கபுரம் சுடுகாட்டுக்கு கொண்டு வந்தனர்.
அங்கு தகனமேடை குழியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பிணம் எரிய தொடங்கியவுடன் 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் ரெசியின் உடல் முழுவதுமாக எரியாமல் கிடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
கைது
இதையடுத்து போலீசார் கேத்தீஸ்வரனின் நண்பர்கள் பழனி, முகமது பைசல் ஆகிய 2 பேரையும் பிடித்தனர்.
பின்னர் 3 பேரையும் கைது செய்து கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ரெசியின் கார் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் நின்றதை போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கொலை செய்யப்பட்ட புகைப்படக்காரரின் காதலி தீக்குளித்தார்
நாகர்கோவில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர் தெருவை சேர்ந்த புகைப்படக்காரர் ரெசி (வயது 33). இலங்கை அகதியான இவர், வள்ளியூர் அருகே உள்ள சமூகரெங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
ரெசியின் நண்பர் குமரி மாவட்டம் கன்னியாகுமரி அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்த புகைப்படக்காரர் கேத்தீஸ்வரன் ஆவார்.
இவரும் இலங்கை அகதிதான். கேத்தீஸ்வரன் வீட்டுக்கு ரெசி அடிக்கடி சென்று வருவார்.
அப்போது கேத்தீஸ்வரனின் அக்காளுக்கும், ரெசிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
கொன்று எரிப்பு
இந்த விவரம் கேத்தீஸ்வரனுக்கு தெரிய வரவே அவர் ரெசியை கண்டித்தார். ஆனாலும் ரெசி கேட்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கேத்தீஸ்வரன் ரெசியை கொலை செய்துள்ளார். பின்னர் தன்னுடைய நண்பர்களான சுசீந்திரம் சன்னதி தெருவைச் சேர்ந்த பழனி (26), பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த முகமது பைசல் (25) ஆகியோருடன் சேர்ந்து ரெசியின் உடலை நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரித்துள்ளார்.
இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேத்தீஸ்வரன், பழனி, முகமது பைசல் ஆகிய 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
காதலி தீக்குளித்தார்
இதற்கிடையே ரெசி கொலை செய்யப்பட்ட விவரம் கேத்தீஸ்வரனின் அக்காள் அனுஷாவுக்கு தெரிய வந்தது. அவர் மனம் உடைந்து வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்ததாக தெரிகிறது.
நேற்று காலை 8 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி அனுஷா தீக்குளித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அனுஷாவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அனுஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சை
இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அனுஷாவின் உடலில் 70 சதவீதம் தீக்காயம் இருப்பதால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.