ஷிர்டியிலுள்ள வேப்ப மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தானே வசீகரம் நிறைந்த இளைஞன் ஒருவன்! அவனை மறுநாள் காணோம். அதை அறிந்து, சொந்த மகனைத் தொலைத்தது போல், பாய்ஜா மாயி கண்களிலிருந்து கரகர வெனக் கண்ணீர் வழிந்தது. எங்கே போனான் அவன்? தாயுள்ளம் கொண்ட அந்த பக்தையின் கண்ணீரைக் காலம் தன் பேரேட்டில் குறித்துக்கொண்டது. அழுதால் அவனைப் பெறலாம் என்பதல்லவா சத்திய வாசகம்! இறைவனுக்காக அழுபவரைத் தேடி இறைவன் வராவிட்டால் அப்புறம் அவன் எப்படி இறைவனாவான்? ஷிர்டிக்கு மீண்டும் அந்த இளைஞன் வருவான் என்பதை அவள் கண்ணீரே உறுதி செய்கிறதே! 1854ல் ஷிர்டியில் நடந்த சம்பவம் இதுஸஸ சூரியதேவன் தன் ஏழுவண்ணக் குதிரைகளின் லகானைப் பிடித்துச் சுளீரென்று ஒரு சொடுக்குச் சொடுக்கினான். குதிரைகள் வேகமெடுத்துப் பாய்ந்தன. நான்கு ஆண்டுகள் கிடுகிடுவெனப் பஞ்சாய்ப் பறந்தன. அதன்பின் இன்னொரு கிராமத்தில் இன்னொரு நாள்ஸ நைஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்த அவுரங்காபாத் பகுதியில், தூப்காவன் என்றொரு சிறிய கிராமம்.
சாந்த்படீல் என்ற முஸ்லிம் பெருமகன் அங்கே வாழ்ந்து வந்தார். இறைநம்பிக்கை உடைய நல்ல மனிதர். யாரையும் ஏமாற்றாமல் நியாயமாக வணிகம் செய்து வாழ்பவர். ஐந்துவேளை தொழுகை நிகழ்த்துபவர். அன்பு மயமான அவர், ஒருநாள் சில குதிரைகளுடன் ஒரு வேலை நிமித்தம் அருகேயிருந்த அவுரங்காபாத் நகருக்குச் சென்றார். பார்த்துப் பார்த்துத்தான் பயணம் செய்தார். குதிரைகள் அவரது செல்வம் அல்லவா? அவற்றை மிக எச்சரிக்கையாகத் தான் கூட்டி வந்தார். ஆனால், வந்து சேர்ந்தபின், கணக்கிட்ட போதுதான் தெரிந்தது, அவற்றில் ஒரு பெண்குதிரையைக் காணோம்! என்ன ஆச்சரியம்! எங்கே போயிற்று அது? ஒரு குதிரை தொலைவது என்பது அவரது செல்வத்தின் ஒரு பகுதி தொலைவதுபோல் அல்லவா? மீண்டும் ஒரு குதிரையை விலைக்கு வாங்க அவர் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்? அவர் பதட்டத்தோடு, தான் வந்த வழியே தொலைந்துபோன குதிரையைத் தேடிச் சென்றார். ஆனால், என்ன சோதனை! குதிரை எங்கும் தென்படவே இல்லை. என்ன மாயம் இது! யார் அந்தக் குதிரையை மறைத்தார்கள்? இரண்டு மாதங்கள் மிகுந்த முயற்சியுடன் தேடித் தேடிப் பார்த்தார்.
கண்டுபிடிக்க இயலவில்லை. உண்ணும்போதும் உறங்கும்போதும் தொலைந்துபோன குதிரையைப் பற்றித்தான் அவருக்குச் சிந்தனை. மிகவும் சோர்வடைந்தார். யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், என் குதிரை இப்படித் தொலைவானேன்! என்று அவர் உள்ளம் மருகியது. அவர் உடல் மெலியத் தொடங்கியது. ஒருநாள் இன்று எப்படியும் குதிரையைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னந்தனியாய், மீண்டும் முன்னர் தேடிச் சென்ற பாதையிலேயே நடந்து தேடலானார். காட்டுப் பாதை. கல்லும் முள்ளும் காலைக் குத்திக் கிழித்தன. எங்கேதான் போயிருக்கும் குதிரை? ஏதாவது மரத்தடியில் புல் மேய்ந்து கொண்டிருக்குமோ என்று பல இடங்களில் தேடினார். குளம் குட்டைகளில் தண்ணீர் அருந்திக் கொண்டிருக்குமோ என்று அங்கெல்லாம் போய்ப் பார்த்தார். எங்கு தேடியும் காணவில்லை. நடந்து நடந்து கால்கள் வலிகண்டதுதான் மிச்சம். மிகுந்த ஏமாற்றத்துடன் தளர்ந்த நடையோடு வந்த வழியே திரும்பி நடக்கலானார். இனி, தன் குதிரை மீண்டும் தனக்குக் கிடைக்கும் என்ற எண்ணம் அவர் மனத்திலிருந்து விடைபெறத் தொடங்கியது. அப்போது ஒரு மாமரத்தின் நிழலில் ஒரு பக்கிரி அமர்ந்திருப்பதைப் பார்த்தார். தலையில் ஒரு குல்லாய். நீண்ட அங்கி. கையில் சட்கா என்னும் குட்டையான ஒரு தடி.
ஏ சாந்த்படீல்! என்று கூவி அழைத்தார் பக்கிரி. சாந்த்படீலுக்குத் தூக்கிவாரிப் போட்டது. யார் இவர்? கானகத்தில் தன்னந்தனியே அமர்ந்திருக்கும் இவருக்குத் தன் பெயர் எப்படித் தெரியும்? அந்த அழைப்பில் தென்பட்ட அளவற்ற கம்பீரமும், குரலில் தென்பட்ட இனிமையும், உடனடியாக அந்தக் குரலுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தின. வியந்தவாறே அந்த அதிசயப் பக்கிரியின் அருகே வந்தார் அவர். நெருங்க நெருங்கக் காந்தம் இரும்பை இழுப்பதுபோல் அவர் தன்னை இழுப்பதாக உணர்ந்தார். அவர் பக்கத்தில் செல்லும்போது மனத்தில் ஒரு சாந்தி தோன்றுவதையும், தன் உள்ளச் சுமை குறைந்து இதயமே லேசாவதையும் உணர்ந்தார். அந்தக் கானகத்திற்கு அந்தப் பக்கிரி எப்போது எப்படி வந்தார் என்று தெரியவில்லை. பல ஆண்டுகளாக, ஏன் பல நூற்றாண்டுகளாக அதே கானகத்தில் வசிப்பவர் போல் தோன்றினார். அவரைச் சுற்றி இனம் புரியாத ஒரு புனித ஒளி பரவியிருந்தது. அவரது பால்வடியும் முகத்தைப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஏற்பட்டது. என்ன தூய்மையான முகம்! எந்த மனிதரிடமும் இத்தகைய பளிங்குபோன்ற முகத்தை சாந்த்படீல் பார்த்ததே இல்லை. இந்த முகம் உடையவரைப் பளிங்குச் சிலையாகவே ஆக்கி, பின்னால் மக்கள் வழிபட்டுப் பலன் பெறப் போகிறார்கள் என்றெல்லாம் சாந்த்படீலுக்கு அப்போது தெரியாது. ஹரே சாந்த்படீல்! உன் காணாமல் போன பெண்குதிரையை இங்கே தேடினால் எப்படியப்பா கிடைக்கும்? வடக்குப் பக்கமாகப் போ.
ஒரு பெரிய ஆலமரத்தடியில் நின்று கொண்டிருக்கிறது உன் குதிரை. போய்ப் பார்! சாந்த்படீல் ஏதொன்றும் பேசாமல் அவரை வணங்கிவிட்டு அவர் சொன்னபடியே, விசை முடுக்கப்பட்ட பொம்மை மாதிரி, வடக்குப் பக்கம் நோக்கி நடந்தார். கொஞ்ச தூரம் நடந்ததும் அவர் கண்ட காட்சி! மகிழ்ச்சியில் அவருக்குத் தொண்டை அடைத்தது. அந்தப் பக்கிரி சொன்னது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைதான். குதிரை அங்கேதான் சாதுவாய்த் தன் எசமானனை எதிர்பார்த்துக் காத்திருந்தது! அவரைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் கனைத்தது. தான் முன்னரே இந்த இடத்தில் தேடினோமே? அப்போது குதிரை இங்கே இருந்ததாய்த் தெரியவில்லையே? குதிரை இங்கிருப்பதை இடத்தை விட்டு நகராமலே எப்படிக் கண்டுபிடித்தார் அந்தப் பக்கிரி? அது இருக்கட்டும். தான் யார் என்பதும், குதிரையைத் தான் தேடும் விவரமும் அவருக்கு எப்படித் தெரிந்தன? சந்தேகமில்லாமல் அவர் பெரிய மகானாகத் தான் இருக்க வேண்டும். சாதுவாய்த் தன்னைத் தொடர்ந்த குதிரையை அழைத்துக் கொண்டு, மீண்டும் பக்கிரியை நோக்கி நடந்தார் சாந்த்படீல். தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அவருக்கு பணிவு கலந்த வணக்கம் தெரிவித்தார். அவருக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. வெகுதூரம் நடந்த களைப்பு. கடுமையான தாகம் தொண்டையை வாட்டியது. என்னப்பா! தாகத்தால் தவிக்கிறாய் போலிருக்கிறதே? தண்ணீர் வேண்டுமா உனக்கு? பரிவோடு கேட்டார் அந்த அதிசயப் பக்கிரி. அடுத்த கணம் நடந்த சம்பவத்தைப் பார்த்து ஏறக்குறைய மயங்கிவிழும் நிலைக்கு ஆளானார் சாந்த்படீல்ஸஅருள்மழை கொட்டும்
பகுதி – 5
கானகத்தில் தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அந்த அதிசயப் பக்கிரியை பக்தியோடு வணங்கி எழுந்த சாந்த் படீலுக்கு, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. கடுமையான தாகம். என்னப்பா! தண்ணீர் வேண்டுமா? பரிவோடு கேட்ட பக்கிரி, கையில் இருந்த சிறிய தடியால் தரையில் ஒரு தட்டுத் தட்டினார். அடுத்த கணம் தரையிலிருந்து நீர் ஊற்று குபீரெனப் பொங்கியது! பஞ்சபூதங்களும் அவர் கட்டளைக்குப் பணிவதைப் பார்த்து சாந்த்படீலுக்கு மயக்கமே வந்தது. தங்களைப் படைத்தவருக்குத்தான் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற அந்தப் பஞ்சபூதங்கள் கட்டுப்படுகின்றன என்னும் ரகசியத்தை அவரால் உணர இயலவில்லை. ஆனால், தன் முன்னே அமர்ந்திருப்பவர் மாபெரும் ஆற்றல் படைத்த மெய்ஞ்ஞானி என்பதை மட்டும் அவர் புரிந்துகொண்டார். ம்ஸ தண்ணீரைக் குடி! முதலில் உன் தாகம் தீரட்டும்! என்றார் பக்கிரி. சாந்த்படீல் விழிகளால் புனிதப் பக்கிரியின் தெய்வீக அழகைப் பருகியவாறே, கைகளால் அள்ளி நீரைப் பருகினார். அது தண்ணீரா இல்லை அமிர்தமா? அப்படித் தித்தித்தது அது.
சாந்த்படீல் உடலில் புத்துணர்ச்சி தோன்றியது. முன் எப்போதும் இல்லாத நிம்மதியும் சாந்தியும் மனத்தில் எழுந்தன. அந்த அதிசயப் பக்கிரியைப் பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல் ஓர் ஏக்கமும் ஏற்பட்டது. காந்தம் இரும்பை இழுப்பதுபோல் பரமாத்மா, ஜீவாத்மாவை இழுப்பது இயல்புதானே! மனித வடிவில் இருக்கும் மூலப் பரம்பொருள் தான், தன்னிடம் பக்தி செய்யச் சொல்லித் தன்னை ஈர்க்கிறது என்ற உண்மையை சாந்த்படீலால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதேநேரம், அவரை தரிசித்துக்கொண்டே இருக்க வேண்டுமென்ற ஆவலையும் அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. சுவாமி! என் இல்லத்திற்கு வாருங்களேன்! மிகுந்த பணிவோடும் பரம பக்தியோடும் அழைத்தார். தன் மனைவிக்கும் குடும்பத்தினர்க்கும் இவரது தரிசனத்தால் மங்கலங்கள் உண்டாகவேண்டும் என ஆசைப்பட்டார். பகட்டே இல்லாத எளிமையும், அப்பழுக்கற்ற தூய பக்தியும் குன்றாத ஆர்வமும் எங்கிருக்கிறதோ அந்த இடம்நோக்கித் தன்னிச்சையாக இறைவனின் திருப்பாதங்கள் நடக்கும் என்பது உண்மைதானோ! சாந்த்படீல் தம்மை அழைத்ததும், அதற்கென்ன! போகலாமே! என்றவாறே அவருடன் நடந்தார் பக்கிரி.
சாந்த்படீல் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. யசோதையின் இல்லத்தில் வெண்ணெய் திருடப் பதுங்கிப் பதுங்கி நடந்த பாதங்கள், கைகேயியின் கட்டளைப்படி வனத்தில் பதினான்கு ஆண்டுகள் கல்லிலும் முள்ளிலும் நடந்த பாதங்கள், இன்று அன்போடு அழைத்த சாந்த்படீலின் அழைப்பையும் ஏற்றுக்கொண்டன. தன்னுடன் வருவது தன்னிகரற்ற பரம்பொருளின் மானிட வடிவம் என்பதை அறியாவிட்டாலும் அவர் ஒரு புண்ணிய புருஷர் என்ற பக்தி உணர்வோடு அவரைத் தம் இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார் சாந்த்படீல். கோயிலில் இறைவன் உறைவான் என்றால், இறைவன் உறையும் இடமெல்லாம் கோயில் தானே! அன்று அந்த எளிய இல்லம் கோயிலாயிற்று. விதுரர் வசித்த குடிசைக்குக் கிருஷ்ணர் வருகை தந்ததுபோல், அந்தப் பக்கிரியும் அந்த இல்லத்திற்கு வருகை தந்தார். அவருக்கு விருந்துபசாரம் செய்து மகிழ்ந்தாள் சாந்த்படீலின் மனைவி. சாந்த்படீல் தூப்காவன் என்ற அந்த கிராமத்தின் அதிகாரி. அங்கிருந்த மக்களெல்லாம் வியப்போடு அவர் இல்லத்திற்கு வந்து அந்த அதிசயப் பக்கிரியை தரிசித்தார்கள். அவரைப் பார்க்கும்போது மனத்தில் இனந்தெரியாத சாந்தி பிறப்பதை உணர்ந்தார்கள்.
தாம் பெற்ற புண்ணியம் மற்றவர்களுக்கும் கிட்டட்டும் என எல்லோரிடமும் சாந்த்படீல் இல்லத்திற்கு ஒரு யோகி வந்திருப்பதை அறிவித்தார்கள். அக்கம் பக்கமிருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது. வைரக்கல்லைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து மூட முடியுமா? அந்தப் பக்கிரி அந்த இல்லத்திற்குள் இருந்தாலும், அவரது புனிதப் பிரகாசம் சுற்றுப்புறத்தைஎல்லாம் வெளிச்சப்படுத்தியது. அவர் அருட்செல்வம் படைத்த ஆண்டவனின் மனித வடிவம் அல்லவா! அவர் படங்கள் இருக்கும் இல்லத்திலேயே இன்று ஏராளமான மங்கலங்கள் நடைபெறுகின்றன என்றால், அவர் மானிட உரு எடுத்துக் கொஞ்சகாலம் தங்கிய அந்த இல்லத்திற்கு மங்கலச் சேதிகள் உடனே வந்து எட்டாமல் இருக்குமா? அப்படியொரு சேதி மிக விரைவில் அந்த இல்லத்தாரை எட்டியது. சாந்த்படீலின் மைத்துனனுக்குத் திருமணம் நிச்சயமாயிற்று. பல காலமாகத் தள்ளிப் போன திருமணம் இப்போது உடனடியாகக் கூடிவந்தது, பக்கிரியின் அருளால்தான் என்று சாந்த்படீல் எண்ணினார். திருமணத்திற்கு வண்டி கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். ஏராளமான உறவினர்கள் கூட்டம் தூப்காவன் கிராமத்திலிருந்து திருமணத்தில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்டது. அந்தப் பக்கிரியையும் தங்களோடு வரவேண்டும் என சாந்தபடீல் பக்தியோடு வேண்டினார். முக்காலமும் உணர்ந்த பக்கிரி, எதுவுமே தெரியாதமாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, திருமணம் எங்கு நடக்கிறது என்று விசாரித்தார்.
மணப்பெண் ஷிர்டியைச் சேர்ந்தவள். திருமணம் ஷிர்டியில்தான் நடக்கிறது என்றார்கள் அவர்கள். இதைக் கேட்டவுடன் சப்தம் போட்டுச் சிரித்தார் அவர். அந்தச் சிரிப்பின் பொருள் யாருக்கும் புரியவில்லை. தம்மை ஷிர்டி நிரந்தரமாக அழைக்கிறது என்ற ரகசியம், அவருக்குத் தெரிந்ததுபோல் மற்றவர்க்குத் தெரிய வாய்ப்பில்லையே! ஷிர்டி கிராமத்தின் எல்லையில், கண்டோபா தெய்வத்திற்கான ஆலயம் இருந்தது. திருமண கோஷ்டி சென்ற மாட்டு வண்டிகள், கண்டோபா கோயிலுக்கு வந்து சேர்ந்தன. ஒரு பெரிய ஆலமரத்தடியில் வண்டிகளை நிறுத்தி, ஷிர்டியின் உள்ளே செல்வதற்காக அனைவரும் இறங்கினார்கள். அந்தப் பக்கிரி தானும் ஷிர்டி எல்லையில் கால்பதித்து கம்பீரமாக நின்றார். அப்போது கண்டோபா கோயிலில் மங்கல ஆரத்தி நடந்து கொண்டிருந்தது. ஆரத்தித் தட்டைக் கையில் ஏந்தியவாறு கோயிலுக்கு வெளியே வந்தார் கோயிலின் பூஜாரியான மகல்சாபதி. பக்கிரியைப் பார்த்த மாத்திரத்தில் அவர் விழிகளில் கரகரவென ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. இந்தப் பெருமகனை வாழ்வில் இன்னொரு முறை தரிசிப்பேனா என்று தவமிருந்தேனே! சில ஆண்டுகளுக்கு முன் ஷிர்டியில் வேப்ப மரத்தடியில் தோன்றிய அதே பால யோகியல்லவா இவர்! ஆகாஸ! மறுபடியும் ஷிர்டி வந்துவிட்டார்! இவரின் வருகையால் ஷிர்டி புனிதமடையப் போகிறது! இறைவனுக்கான மங்கல ஆரத்தியை அந்தப் பக்கிரிக்குக் காட்டி, ஆவோ சாயி ஆவோ! என ஆனந்தக் கண்ணீர் மல்க வரவேற்றார் அவர். சாயி என்றால் சுவாமி. பாபா என்றால் அப்பா என்ற பொருள்தரும் சொல். சாயிபாபா மீண்டும் ஷிர்டி வந்துள்ள செய்தி ஒரு கணத்தில் ஷிர்டி ஊர் முழுவதும் பரவியது. எல்லோரும் ஷிர்டி எல்லைக்கே வந்து வரவேற்றார்கள். திருமண வீட்டிற்குள் சாயிபாபா சென்றதும், அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சாந்த்படீல், தங்கள் இல்லத்தில் தங்கியவர் முன்னரே ஷிர்டிக்கு வந்த யோகிதான் என்றறிந்து வியப்பில் ஆழ்ந்தார். தூப்காவன் மக்களும் ஷிர்டி மக்களும் சாயிபாபா கி ஜெய்! என முழக்கமிட்டார்கள். அன்று தொட்டு அவர் சாயிபாபா ஆனார். அன்று அளவற்ற நிறைவில் ஆழ்ந்த சாந்த்படீல், திருமணம் முடிந்த பின்னர் எதிர்பாராத ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டு ஜீரணிக்க வேண்டியிருந்ததுஸ
பகுதி – 6
சாயிபாபாவை தமது தூப்காவன் கிராமத்திலிருந்து ஷிர்டிக்கு அழைத்துவந்தசாந்த்படீல், எதிர்பாராதஒரு விஷயத்தைஏற்றுக்கொண்டு ஜீரணிக்க வேண்டியிருந்ததுஸ. பாபா, தாம் தூப்காவன் திரும்பப் போவதில்லை என்றும், ஷிர்டியிலேயே நிரந்தரமாய்த் தங்கப் போவதாகவும் உறுதிபடத் தெரிவித்துவிட்டார். ஷிர்டி செய்தஅதிர்ஷ்டத்தைஎண்ணி சாந்த்படீல் ஆச்சரியம் அடைந்தார். இனி கைலாசமாகவும், வைகுண்டமாகவும், கோகுலமாகவும், அயோத்தியாகவும் விளங்கப் போவது ஷிர்டி தான் என்பதைஅவர் உள்மனம் புரிந்துகொண்டது. அதனால் என்ன? இனி வாய்ப்புதகிட்டும்போதெல்லாம் அடிக்கடி ஷிர்டி வந்து இந்தவிந்தையான யோகியைத் தரிசிக்க வேண்டியதுதான். அருகில்தானே இருக்கிறது ஷிர்டி? அதல்லாமல் தம் மனத்தில், பாபாவைப் பிரதிஷ்டை செய்து, அவரை நாள்தோறும் மனக்கண்ணால் கண்டு வழிபடுவதையார்தான் தடுக்க இயலும்? ஓடிப்போன தம் குதிரையை ஞான திருஷ்டியால் கண்டு பிடித்துதகொடுத்தவரும், உட்கார்ந்த இடத்திலிருந்தேதாம் பருகத் தேவையான தண்ணீரை மண்ணிலிருந்து ஊற்றாய்ப் பெருகச் செய்தவருமான சாயிபாபாவின் பாதங்களில் தலைவைத்து வணங்கி விடைபெற்றார் சாந்த்படீல். தாய்ப்பசுவைப் பிரிந்தகன்றைப் போல அவர் கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருகியது.
ஆனால், நான் எப்போதும் உன்னுடன் தானே இருக்கிறேன்! என்பதுபோல் கையுயர்த்தி, ஆசி கூறிய பாபாவின் திருக்கரம் அவர் துயரத்தைத் துடைத்தது. துறவிகள் ஒரே ஊரில் இருப்பதில்லை. பந்தபாசம் ஏற்படாமல் இருக்கவேண்டி ஊர்ஊராய்ச் சுற்றுவது வழக்கம். ஆனால், பாபா ஷிர்டியை விட்டு எந்தஊருக்கும் செல்லவில்லை. காரணம் அவர் துறவியல்ல. பகவான்! கடவுளால் ஒரே இடத்தில் இருக்கவும் முடியும். அப்படி இருந்துகொண்டே எல்லா இடங்களிலும் காட்சி தரவும் முடியும். அவ்விதம் எங்கும் நிறைபரப்பிரம்மம் ஷிர்டியில் மனிதஉரு எடுத்துத் தங்கியது. ஷிர்டியில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்றில் தண்ணீர் வற்றி விட்டது. அதுதான் நல்ல தண்ணீர் தந்தகிணறு. இன்னொரு கிணற்று நீரோ கடல் நீரை விட அதிகமாக உப்புதகரித்தது. அந்ததகிணற்றில் நீர் எடுத்தபெண்கள் அதன் உப்புச் சுவையைதகண்டு திகைத்தனர். இதுபற்றி பாபாவிடம் சொன்னால் என்ன? சில பெண்மணிகள் பாபாவைத் தேடிப் போனார்கள். பஞ்ச பூதங்களையும் பாபா தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்பது அவர்களின் நம்பிக்கை. அப்படியிருக்க உப்பாய் இருக்கும் கிணற்றின் நீரைத் தித்திப்பாய் மாற்ற அவரால் முடியாதா என்ன? குடங்களோடு தம்மைத் தேடி வந்தபெண்மணிகளிடம் பாபா, குடம் நிறையப் பிரச்னையோடு வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே? என்று சொல்லிச் சிரித்தார்.
பிரச்னை என்னவென்று பாபாவுக்குத் தெரியாதா? முக்காலமும் உணர்ந்தவர் அல்லவா அவர்! ஆனாலும், பக்தர்கள் கடவுளிடம் நேரடியாகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதல்லவா அவர் விருப்பம்? தம்மை முற்றிலும் சரணடைந்திருப்பவர்களும், எளியவர்களுமான அந்தப் பெண்மணிகளின் மேல் பாபாவுக்குதகருணை பொங்கியது. பல மூட்டை உப்பை அள்ளி யாரோ கிணற்று நீரில் கலந்ததுபோல் நீர் உப்புதகரிக்கிறதேபாபா? நீங்கள் ஏதாவது செய்யதகூடாதா? அவர்களின் அன்பான வேண்டுகோளை பாபா ஏற்றார். அருகே உள்ள நந்தவனத்தில்இருந்து கொஞ்சம் மலர்களைப் பறித்துவரச் சொன்னார். மலர்களைதகையில் வைத்துதகொண்டு கண்மூடிச் சற்றுநேரம் பிரார்த்தனை செய்தார். வாருங்கள்! என்று அவர்களை அழைத்துக்கொண்டு உப்புதகிணற்றை நோக்கிப் புறப்பட்டார். கையிலுள்ள மலர்களைதகிணற்று நீரில் அர்ச்சிப்பதுபோல் தூவினார். உடனே காற்று வெளியில் வருண பகவான் தோன்றியிருக்க வேண்டும். வருணனிடம் இந்ததகிணற்று நீரை நன்னீராக மாற்று என்று பாபா கட்டளையிட்டிருக்க வேண்டும். ஆனால், என்ன நடந்தது என்பதைஅந்தப் பெண்கள் அறியவில்லை. அவர்கள் கண்மூடிப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.
இனிமேல் என்ன? உங்கள் பிரார்த்தனைதான் நிறைவேறிவிட்டதே? என்றவாறே நகைத்தார் பாபா. பெண்மணிகள் ஆச்சரியத்தோடு கிணற்று நீரைதகுடங்களில் எடுத்தார்கள். கொஞ்சம் வாயில் விட்டு பார்த்தார்கள். அடடா! முன்னர் பல மூட்டை உப்பு கலந்தகிணற்றில், இப்போது பாபா பல மூட்டை கல்கண்டை அல்லவா கலந்திருக்கிறார்! ஜெய் சாயிநாத்! என்றவாறே பெண்மணிகள் பாபாவை வணங்கினார்கள். பாபா புன்முறுவல் பூத்தவாறே பேசலானார்: என் பக்தர்களது இல்லங்களில் உணவு உடை இவற்றிற்கு எந்ததகுறைவும் வராது. உங்கள் மனத்தைஎன்னிடமே எப்போதும் செலுத்துங்கள். அடியவர்களின் நலன்களை கவனிப்பதேஎன் வேலை. கீதையில் கிருஷ்ணரும் இதைத் தானே சொல்கிறார்! தாம் தங்கியிருந்தமசூதி நோக்கி நடந்தார் பாபா. அந்தப் பெண்மணிகள் நன்றிப் பெருக்கில் கண்கள் பளபளக்க தண்ணீர்தகுடத்தைத் தூக்கிக்கொண்டு திரும்பித் திரும்பி பாபாவைப் பார்த்தவாறே இல்லம் நோக்கி நடந்தார்கள். கண்ணனைப் பிரிய முடியாமல் தவித்தபக்தைகளான கோபிகைகளின் நிலையைப் போன்றிருந்தது அவர்கள் மனநிலை. இவ்விவரம் கிராமம் முழுவதும் விறுவிறுவென்று பரவியது. அக்கம்பக்கத்துதகிராமங்களிலும் கூட இந்தச் செய்தி பரவலாயிற்று. செய்தியின் உண்மைத் தன்மைக்குச் சாட்சியாக நேற்று வரை உப்புதகரித்தகிணற்று நீர் அன்று தொட்டுத் தித்தித்தது.
பாபாவை தியானித்தஅடியவர்களின் மனமெல்லாம், அவரது அருட்கருணையை எண்ணி எண்ணித் தித்தித்தது. பாபாவின் தீவிர பக்தரான கோபால்ராவ் குண்ட் என்பவருக்கு குழந்தைப் பேறு இல்லாதிருந்தது. அவர் பாபாவை மனமாரப் பிரார்த்தித்து மக்கட்செல்வம் அடையப் பெற்றார். தம் நன்றியைத் தெரிவிக்கும் முகமாக பாபா தங்கியிருந்தமசூதியில் உருஸ் விழா கொண்டாட விரும்பினார். உருஸ் விழாவை ராமநவமி அன்று கொண்டாடச் சொல்லி பாபா அனுமதி அளித்தார். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற உண்மையைச் சொல்லி இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்ப்பதுதான் பாபா அப்படிச் சொன்னதன் பின்னணியாக இருக்க வேண்டும். சந்தனதகூடு விழாவாகிய உருஸ் விழா விமரிசையாக நடந்தது. பாபாவின் மசூதியில் சுவரெல்லாம் சந்தனம் அரைத்துப் பூசப்பட்டது. பாபாவின் இந்து பக்தர்கள், ராமநவமி உற்சவத்தையும் கொண்டாட விரும்பினார்கள். பாபா சிரித்துக்கொண்டே அதற்கும் அனுமதி அளித்தார். ராம ஜனனத்தைஉணர்த்தும் வகையில், பாபா முன்னிலையில் ஒரு தொட்டிலைதகொண்டு வைத்தார்கள். ராமக்குழந்தைஎன்ற அந்ததகருநீல மாணிக்கம் அவதரித்து, அந்தத் தொட்டிலில் படுத்திருப்பதான பாவனையில் ராம சரிததகீர்த்தனைகளை உணர்ச்சியோடு பாடலானார்கள். தொட்டிலையே பார்த்தவாறுஇருந்தபாபாவின் விழிகள் திடீரெனதகோவைப் பழமாகச் செக்கச் செவேல் எனச் சிவந்தன. அவரிடமிருந்து அளவு கடந்தசீற்றத்தோடு உலகையே நடுங்கச்செய்யும் ஒரு கர்ஜனை புறப்பட்டது. அந்தகர்ஜனை சுற்றுப் புறங்களில் எல்லாம் எதிரொலித்தது. தாங்கள் என்ன தவறு செய்தோம், எதனால் பாபாவுக்கு இத்தகைய சீற்றம்? என்றறியாமல் அடியவர்கள் திகைத்தார்கள்
பகுதி – 7
பாபவின் அனுமதியின் பேரில் உருஸ் விழாவும், ராமநவமி விழாவும் சேர்ந்து கொண்டாடப்பட்ட நாள் அது. இந்து பக்தர்கள் ராம ஜனனத்தை உணர்த்தும் வகையில் பாபா முன்னிலையில் ஒரு தொட்டிலைக் கொண்டுவந்து வைத்தார்கள். ராம சரிதக் கீர்த்தனைகளைப் பாடலானார்கள். தொட்டிலையே பார்த்தவாறிருந்த பாபாவின் விழிகள் செக்கச் செவேலெனக் கனலாய்ச் சிவந்தன. அவரிடமிருந்து உலகையே நடுங்கச் செய்யும் ஒரு கம்பீரமான கர்ஜனை புறப்பட்டதுஸஸ.. அண்ட பகிரண்டங்களும் அந்த கர்ஜனையைக் கேட்டு நடுநடுங்கின. பூமி நடுங்கி பூகம்பம் வருமோ என்ற அச்சம் ஏற்பட்டது. பக்தர்கள் திகைத்தார்கள். தாங்கள் செய்த தவறென்ன? ராம நவமி கொண்டாட்டத்திற்கு அனுமதி கொடுத்தவர் பாபா தானே? அப்படியிருக்க அவருக்கு ஏன் இத்தனை கோபம்? மெல்ல மெல்லத்தான் அவர்களுக்கு விஷயம் விளங்கியது. தொட்டிலில் ராமக் குழந்தை படுத்திருப்பதாகக் கருதி, அவர்கள் பாடிய பாடல்களின் பொருள்தான் பாபாவின் சீற்றத்தைத் தூண்டியிருக்கிறது. கிருஷ்ணக் குழந்தையைப் போல் ராமக் குழந்தைக்கு பால லீலைகள் என்று அதிகம் எதுவுமில்லையே? கண்ணன் என்றால் கோகுலத்தில் அவன் நிகழ்த்திய ஏராளமான விளையாட்டுகளைப் பாடலாம்.
காளியமர்த்தனத்தையும், கோவர்த்தன கிரியை அவன் தூக்கியதையும் பாடலாம். கண்ணன் வெண்ணெய் திருடியது உள்பட இன்னும் எத்தனையோ செயல்களைச் சொல்லி அவனைத் தாலாட்டலாம். ஆனால், ராமக் குழந்தைக்குத் தாலாட்டுப் பாட வேண்டுமானால் கூட, ராமன் பிற்காலத்தில் செய்த ராவண வதம் உள்ளிட்ட சாகசங்களைச் சொல்லித்தானே தாலாட்ட வேண்டியிருக்கிறது? அப்படியெல்லாம் அசுரர்களை வதம் செய்யப் போகிறாய் நீ என்றுதானே எதிர்காலத்தை முன்வைத்து நிகழ்காலத்தில் பாட வேண்டியிருக்கிறது? ராமனுக்குத் தாலாட்டுப் பாடிய குலசேகர ஆழ்வார் கூட, மன்னுபுகழ் கோசலை மணிவயிறு வாய்த்தவனே! என்று பாடியபின், தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் என்று ராவண வதம் குறித்துச் சொல்லித்தானே தாலாட்டுகிறார்! பக்தர்கள் பாடிய பாடல்களில் ராவண வதம் உள்ளிட்ட செய்திகள் வருவதைக் கூர்ந்து கேட்டார் பாபா. அதையெல்லாம் நிகழ்த்தக் கூடிய ராமக் குழந்தை தொட்டிலில் படுத்திருப்பதாகவே உணர்ந்தார். பாடல்களைக் கேட்கக் கேட்கச் சற்றுநேரத்தில் அவர் ராம பாவனையில் தோய்ந்து ராமனாகவே மாறிவிட்டார். ராவண வதம் நிகழ்த்தப் போகிறவனே! என்று பக்தர்கள் பாடியவுடன் பாபா ராமனாக மாறி ராவண வதம் நிகழ்த்தத் தயாராகிவிட்டார். ராவண வதத்தின் முன்பாக ராமனுக்கு ஏற்பட்ட அதே அளவுகடந்த சீற்றம், பாபாவிடமும் தோன்றிவிட்டது. அதனால் தான் அந்த கர்ஜனை! பக்தர்கள் பாபாவின் பாதங்களில் விழுந்து பணிந்தார்கள்.
அவர் சீற்றம் தணிய வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். மெல்ல மெல்ல பாபா அமைதியானார். ஒரு விஷயம் அங்கிருந்த பக்தர்களில் சிலருக்குத் தெளிவாகப் புரிந்தது. ராவணன் என்பதென்ன? காமம் குரோதம் முதலிய பகை உணர்வுகளின் ஒட்டுமொத்த உருவகம் தானே! பாபா ராமனாக மாறிச் சீற்றம் கொண்டதன் மூலம் பக்தர்களின் மனத்தில் உள்ளே பதுங்கியிருந்த ராவண உணர்வுகளை வதம் செய்துவிட்டார். தங்கள் மனம் தீய நினைவுகளை அகற்றித் தூய நினைவுகளில் தோய்வதை உணர்ந்து அவர்கள் நெக்குருகினார்கள். பாபாவின் அருளாவேசத்தால் ராவண உணர்வுகளின் ஆதிக்கம் ஷிர்டியை விட்டு விரட்டப்பட்டு, அது புனிதத் திருத்தலமாக மாறியிருப்பதை உணர்ந்தார்கள். ஆக, அங்கே கொண்டாடப்பட்ட உருஸ் மற்றும் ராம நவமி விழா மூலம் சொர்க்கத்தின் பவித்திர உணர்வலைகள் ஷிர்டியில் நிலைகொண்டன. பாபாவின் பக்தர்களின் மனங்களிலெல்லாம் சாந்தியும், இன்னதென்று அறியாத ஆனந்த உணர்வும் நிலவத் தொடங்கின. ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆஞ்சநேய உபாசனை நிகழ்த்தியதைப் பற்றி பரமஹம்சர் குறித்த வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதுகிறார், அவரது நேரடிச் சீடரான சாரதானந்தர். அந்தக் காலங்களில் பரமஹம்சர் மரங்களின் மேலேயே வசித்ததாகவும் தேங்காயையே சாப்பிட்டதாகவும், மரத்தின் மேலிருந்தே சிறுநீர் கழித்ததாகவும் எழுதும் அவர் சொல்லும் ஒரு தகவல் விந்தையானது. பாபாவின் உணர்வோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியது.
பரமஹம்சர் ஆஞ்சநேய உபாசனை முடிந்து மரத்தை விட்டு இறங்கி வந்தபின், அவரது முதுகுத் தண்டின் கீழே வால்போல் ஒரு பகுதி வளர்ந்திருந்ததாகவும் பின்னர் நாள்பட நாள்பட அது மறைந்ததாகவும் எழுதுகிறார் சாரதானந்தர். கடவுள் சக்தியைத் தங்களில் இறக்கிக் கொண்டு கடவுளாகவே வாழும் மகான்களின் உணர்வுநிலையின் உச்சம் அத்தகையது. அத்தகைய உணர்வின் உச்ச நிலையைத் தான், ஷிர்டி பாபாவின் மன நிலையும் பிரதிபலித்தது. பாபா ஷிர்டியில் உள்ள எல்லா ஆலயங்களையும் பழுதுபார்க்கச் செய்தார். பிள்ளையார் கோயில், சிவன் கோயில், கிராம தேவதைக்கான கோயில், மாருதி கோயில் என எல்லாக் கோயில் மேலும் அக்கறை செலுத்தினார். தாத்யா பாடீல் என்ற அன்பர் மூலமாக, பழுதுபார்க்கும் பணிகளை நிர்வகித்தார். பாபா, பக்தர்களிடம் தட்சணை கேட்பதுண்டு. தட்சணை காலணா அரையணாவாகக் கூட இருக்கும். ஆனால், கேட்டு வாங்கிப் பெற்றுக் கொள்வார். ஒருவேளை தட்சணை மூலமாக அடியவர்களின் முன்வினைகளைத் தாம் வாங்கி, அழிக்கிறாரோ என்னவோ? அப்படிப் பெற்ற தட்சணைத் தொகையை பாபா தாம் வைத்துக் கொள்வதில்லை.
பதினைந்து ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய் என மற்றவர்களுக்கு வினியோகித்து விடுவார். சிலரிடம், அவர் அதட்டி தட்சணை வாங்கியதும் மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காகவே! தம் அடியவர்கள் யாரும் எந்தக் கஷ்டமும் படக் கூடாது என்பதில் பாபா தீவிரமாக இருந்தார். அவரைச் சரணடைந்தவர்கள் அன்றும் சரி, இன்றும் சரி, எந்தத் துன்பத்தையும் அடைந்ததில்லை. பாபாவின் அருள் ஒரு கவசமாய் அவரின் அடியவர்களைத் துயரம் தாக்காதவாறு காத்துக் கொண்டிருக்கிறது. ஒருமுறை ஒரு பிரமுகர் பாபாவை தரிசிப்பதற்காக, அதிகாலையில் மசூதிக்குச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரைத் திக்பிரமை அடையச் செய்தது. இறைவா, இதைக் காணவா எனக்குக் கண்கொடுத்தாய்? என்று அவர் மனம் பதறியது. மசூதியில் பாபாவின் தலை ஒருபுறமும், கை கால்கள், உடல் ஆகியவை வேறுபுறங்களிலும் தனித்தனியே சிதறிக் கிடந்தன. பாபாவை இப்படிச் செய்யுமளவு அவருக்கு விரோதிகள் யாருமில்லையே? பக்தரின் விழிகளில் கரகரவெனக் கண்ணீர் பெருகியது. அவர் பெரும் பீதியடைந்தார். உடன் இத்தகவலை ஷிர்டி கிராம அதிகாரிகளிடம் சென்று தெரிவிக்க வேண்டும். ஆனால், அப்படித் தெரிவித்தால் அது தன் தரப்பில் நல்லதாக இருக்குமா? முதலில் பார்த்தவன் என்பதால், அந்தச் சம்பவத்திற்கான பொறுப்பு தன்மேல் சுமத்தப்பட்டு விடுமோ? அவர் அச்சத்தோடும் குழப்பத்தோடும் தம் வீடுநோக்கி நடந்தார். பயத்தில் அவர் கைகால்கள் கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருந்தன.