ஷிர்டி சாய் பாபா
கலியுகத்தில் கேட்டவர்க்கு கேட்டவரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் ஷீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும். ஷீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.
பாபாவின் உருவம் ஓர் அற்புதம்: கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சிதரும் பாபாவின் உருவ அமைப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக அவரது பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது. அவர் தமது வலது காலை, இடது முழங்கால் மீது போட்டு தனது இடது கையினை வலது கால் பாதத்தின் மீது படரவிட்டுள்ளார். பாபாவின் இடது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே உள்ள வலது கால் பெருவிரலை இரண்டு மரக்கிளைக்கு நடுவே சூரியனைப் பார்ப்பது போல தரிசித்து பாபாவின் ஒளியைப் பெறலாம்.
மேலும் பாபாவின் பாதங்களை நமது கண்ணீரால் கழுவுவதாக மனதளவில் நினைத்தால் இதயம் தூய்மை அடையும் என்றும், அன்பை சந்தனமாக பூசச் சொல்லியும், நமது நம்பிக்கையை பாபாவின் மேலாடையாகவும் கருதச் சொல்கிறார். நமது சிரசை பாபாவின் பாதத்தில் வைத்து வணங்கிய பின்னர், நமது பக்தியை சாமரமாகக் கொண்டு வீசி, பாபாவின் வெப்பத்தைத் தணிக்க வேண்டும். அதுவே சிறந்த பாபா வழிபாடு.
உதியே மருந்து!
ஷீரடி நாதனின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார். பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார். அதைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்து விட்டனர். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், பாபா, தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று! என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார். பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது உதியைத் தடவினார். கொஞ்சம் உதியை அவரது வாயில் இட்டார். இது நடந்த ஐந்து நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது. அந்தப் பெண் சீராக கவாசிக்கத் தொடங்கினாள். சாயிநாதன் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவரது உதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.
ராமரும் ஸாயியே!
மண்மாடு என்னும் ஊரிலிருந்த ஒருவரைக் காண அவரது நண்பர் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருந்தார். வந்தவர், தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற டாக்டர். அவரை ஷீரடி சென்று பாபாவை தரிசித்து வரலாம் என்று நண்பர் அழைத்தார். வந்திருந்த டாக்டரோ தீவிரமான ராமபக்தர். ஆதலால் நான் ராமனைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் தரிசிப்பதில்லை. என்னால் பாபாவை தரிசிக்க வர இயலாது என்று மறுத்தார்.
அந்த நண்பர் விடவில்லை. எனக்காக தாங்கள் கட்டாயம் வரவேண்டும் நாம் காரிலேயே போகலாம். அங்கு உங்களுக்கு வர விருப்பமில்லை என்றால் காரிலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். நான் மட்டும் உள்ளே சென்று சாயிநாதனை தரிசித்து விட்டு வருகிறேன். வழித்துணையாக மட்டும் என்னுடன் வந்தால் போதும் என்றார். டாக்டரும் ஒப்புக்கொண்டார். ஷீரடியில் பாபா இருந்த மசூதி வாசலில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார் பக்தர். டாக்டர் நண்பர் காரிலேயே இருந்தார். கொஞ்சநேரம் சென்றதும் நண்பர் வருகிறாரா என அறிய, காரில் இருந்தபடியே மசூதியின் உள்ளே பார்த்த டாக்டர், அங்கே சாட்சாத் ராமனே அமர்ந்திருந்ததைக் கண்டார். கண்களை கசக்கி மீண்டும் பார்க்க, அதே காட்சி, உடனே காரிலிருந்து இறங்கி ஓடி, பாபாவின் காலில் விழுந்து ஹே சாய்ராம் என்று கதறி வணங்கினார். எல்லா தெய்வமும் நானே என்று பாபா சொல்வது உண்மையே என்பதை உணர்ந்து வணங்கி ஆசி பெற்றுத் திரும்பினார்.
ஷீரடி சாய்பாபாவின் உபதேசங்கள்!
ஷீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் முடிவுக்கு வந்துவிடும். அவன் அதன் பின்னர் பூரண சவுகரியத்தை அடைகிறான்.
பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
இவ்வுலகை விட்ட பிறகும் நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
என்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
என்னுடைய பூத உடல் என் சமாதியிலிருந்து பேசும்.
என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இருப்பேன்.
என்னிடம் வருபவர்களுக்கும், என்னை தஞ்சம் அடைந்தவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாட்சிக்கிறேன்.
நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன். என்னுடைய பக்தர்கள் வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது.
பாபாவின் மூல மந்திரம்!
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே
ஸர்வலோக ஹிதங்கராய, ஸர்வதுக்க வாரகாய
ஸர்வாபீஷ்ட பலப்ரதாயினே சமர்த்த சத்குரு சாயிநாத்
ஸ்வாமினே வரவ-ரத ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹாசாயிபாபாவின் பன்னிரு திருப்பெயர்கள்!
லோகத்ரய குரவே நமஹ, ஸர்வ பூஜிதாய நமஹ, ஸர்வஜிதே நமஹ, நீதிகர்த்தரே நமஹ, ஸர்வேசாய நமஹ, தயாவதே நமஹ, விச்வாத்மனே நமஹ, மகாபலாய நமஹ, சுபலக்ஷணாய நமஹ, மதிமதே நமஹ, ஸர்வாபீஷ்டதாய நமஹ, பரமகுருவே நமஹ
ஷீரடி சாயிபாபாவின் இந்தப் பன்னிரு நாமாக்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிவர, மனதில் நிம்மதி நிறையும்.
ஷீரடியில் உள்ள சாயிபாபா பளிங்கு சிலை உருவான விதம்!
1918- ம் வருடம் விஜயதசமி அன்று, சாயிபாபா மஹாசமாதியடைந்தார். நாக்பூரை சேர்ந்த செல்வந்தரும், பாபாவின் அடியவருமான ஸ்ரீமான்புட்டி அவர்களால் கட்டப்பட்ட வாதாவில், முரளி கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக அமைக்கப்பட்ட மேடையில் பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, நான்கு கால ஆரத்தியுடன் நித்திய பூஜைகள், கிரமமாக நடந்து வந்தன. விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும், அன்ன தானங்களும் விமரிசையாக நடந்தன.
முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இந்த விஷயம், ஷீர்டி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. உடனே அதை ஏலத்தில் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஷீர்டி சாயிபாபா சிலை செய்வதற்காக ஏலம் எடுக்கப்படுவதை அறிந்து, பலரும் போட்டியிலிருந்து விலகினார்கள். சாயி சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து பாபாவின் சிலையை செய்யச் சொன்னார்கள்.
சிலை செய்ய மாதிரியாக, பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படமே சாயி சமஸ்தான் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது. .அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் சிலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அப்பொழுது பாபா சிற்பியின் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல், அனைவரும் திருப்தியுறும் வண்ணம் சிலையை மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார். பின்னர் அந்த சிலை 1954-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7-ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலையே இன்றளவும் தினமும் பல லட்ஷக்கணக்கான பக்தர்களால் அன்புடனும், பக்தியுடனும் வழிபடபட்டு வருகின்றது. ‘ எனது பக்தன் எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கப்பால் இருந்த போதும், காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவி இழுக்கப்படுவதைப்போன்று அவன் ஷீர்டிக்கு இழுக்கப்படுவான். ‘ ‘ஷீர்டி மண்ணை எவனொருவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பங்கள் முடிவுற்று மிகுதியான ஆனந்தத்தை அடைகிறான்.‘ – பாபா அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ ஸ.. ஜெய்.
ஷிர்டி சாய் பாபா பகுதி – 1
உண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அதிகாலையில், ஷிர்டி பாபா வசிக்கும் மசூதிக்குச் சென்ற யாரோ ஒரு பெண்தான், முதன்முதலில் அந்த விந்தையான காட்சியைக் கண்டிருக்கிறாள். உடனே ஓடோடி வந்து, பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்ல, விறுவிறுவென்று செய்தி பரவிவிட்டது. எல்லோரும் அவசர அவசரமாக பாபா வாழும் மசூதியை நோக்கி ஓடலானார்கள். பலருக்கு வேகமாக ஓட முடியாத நிலைஸ காலராவால் அவர்கள் உடல் மிகவும் தளர்ந்திருந்தது. சில நாட்களாகவே காலரா அந்த கிராமத்தில் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. 1910ம் ஆண்டல்லவா அது! அப்போது காலராவிலிருந்து மக்களைக் காப்பாற்றும் மருத்துவ வழி முறைகள் பிரபலமாகவில்லை. ஷிர்டி மக்கள், தங்கள் கிராமத்தில் வாழும் பாபாவையே சரணடைந்து வாழ்ந்தார்கள். தெய்வசக்தி, இந்த மண்ணில் பாபா என்ற மனித உடலில் இறங்கிப் பல திருவிளையாடல்களைப் புரிந்து வருகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நேற்றிரவு ஏராளமான பேர் அவர் வசிக்கும் மசூதிக்குச் சென்று தங்களைக் காலராவில் இருந்து காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்தார்கள். பிறவிப் பிணியிலிருந்தே மக்களைக் காப்பாற்றக் கூடியவர், உடல் பிணியிலிருந்து காப்பாற்ற மாட்டாரா? பாபா தெய்வீகப் புன்முறுவலோடு பேசலானார்: நீங்களெல்லாம் என் குழந்தைகள் இல்லையா! உங்களைக் காப்பாற்றத் தானே உலகிற்கு வந்திருக்கிறேன்!
படைத்தல், காத்தல், அழித்தல் என்று நான் செய்யும் முத்தொழிலில் காத்தல் தொழிலை நான் நிகழ்த்துவதற்கான காலம் அல்லவா இது! குழந்தைகளே! தீய சக்திகள் தான் உலகில் நோயைப் பரப்புகின்றன. நோய்க்கு மருந்து சாப்பிட்டால் மட்டும் போதாது. கிளையை வெட்டினாலும் மரம் மீண்டும் வளரும். மரத்தை அழிக்க மரத்தின் வேரை அழிக்க வேண்டும். நீங்கள் நோய்க்கு உங்களால் இயன்ற மருந்து சாப்பிடுங்கள். அது கிளையை வெட்டும் வேலை. ஆனால், நோயை உண்டுபண்ணும் பகைச் சக்தி என்ற மரத்தின் வேரை அல்லவா வெட்ட வேண்டுமல்லவா! அந்தச் செயலை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் மனத்தில் உள்ள காமம், குரோதம் முதலிய பகைச் சக்திகளை நீங்கள் வெட்டிச் சாய்த்துவிட்டால் உடல் பிணி மட்டுமல்ல, பிறவிப் பிணியே குணமாகிவிடும்,. அமிர்தத் துளிகள் போல் பாபா பேசிய பேச்சைக் கேட்டு மக்கள் நிம்மதியோடு வீடு திரும்பினார்கள். இதெல்லாம் நேற்றின் கதை. ஆனால், இன்று அதிகாலை பாபாவைப் பற்றி விந்தையான அந்தச் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறாள் அவரைக் காலையில் தரிசித்த பெண்மணி. அடியவர் கூட்டம் பாபா முன் குழுமியது. அவர் மாவரைக்கும் கல் இயந்திரத்தின் முன்னால் கால்நீட்டி அமர்ந்திருந்தார். பக்கத்தில் முறத்தில் கோதுமை குவிக்கப்பட்டிருந்தது.
அவர் ஒரு சாக்கைத் தரையில் விரித்து, அதன் மேல் திருகையை வைத்திருந்தார். இந்த யந்திரம், இந்தச் சாக்கு, இந்தக் கோதுமை எல்லாம் எங்கிருந்து தான் வந்ததோ! அவர் காற்றிலிருந்து கூட எதையும் வரவழைக்கும் ஆற்றல் உள்ளவர் அல்லவா! தன் நீண்ட அங்கியின் கைப்புறத்தை மடித்துவிட்டுக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக கோதுமையை எடுத்துத் திருகையின் மேலிருந்த குழியில் போட்டார் பாபா. பின் கோதுமையை மாவாக அரைக்கலானார். அரைபட்ட மாவு வழிந்து கீழே கொட்டத் தொடங்கியது. பாபாவின் முகத்தில் சீற்றம். அவர் அழுத்தி அழுத்தி திருகையின் மரக் கைப்பிடியைப் பிடித்துச் சுற்றிக் கொண்டே கோதுமையோடு பேசத் தொடங்கினார்.ம்! ஓடு! இந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விடு! என் குழந்தைகளையா துன்புறுத்துகிறாய்? என்ன தைரியம் உனக்கு? இவர்கள் பக்கம் நீ கையை நீட்டினால், நீதான் அரைபட்டுச் சாகவேண்டும். புரிகிறதா? இப்போது மன்னிப்புக் கேட்டு என்ன செய்வது? முதலிலேயே அல்லவா புத்தி வந்திருக்க வேண்டும்? இந்த எல்லைக்குள் இனி வரக்கூடாது. சத்தியம் செய்துகொடு. ம். ஓடியே போய்விடு! – பாபா இப்படி ஏதேதோ சொன்னவாறே, அந்த யந்திரத்தின் கைப்பிடியைப் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தார். அரைபட்ட கோதுமை மாவு சரசரவெனக் கீழே கொட்டியது.
பாபா கைவலிக்க மாவரைப்பதைப் பார்த்துக் கூட்டத்திலிருந்த சில பெண்மணிகள் ஓடோடி வந்தார்கள். பாபா! இந்த வேலை எல்லாம் உங்களுக்குப் பழக்கமில்லை. உங்களுக்குக் கைவலிக்கும். சற்றுத் தள்ளிக்கொள்ளுங்கள். நாங்கள் அரைக்கிறோம். அவர்கள் அன்பால் விளைந்த உரிமையோடு பாபாவின் கையைப் பிடித்து நகர்த்தி விட்டு, திருகையின் மரப்பிடியைப் பிடித்து அரைக்கலானார்கள். பாபா சிரித்தவாறே அவர்கள் மாவரைக்க அனுமதி அளித்துவிட்டு அமைதியாக அமர்ந்துகொண்டார். பாபா சிரிக்காமல் என்ன செய்வார்? அண்ட சராசரங்களையும் படைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருளுக்கு மாவரைக்கும்போது கைவலிக்கும் என்று பதறுகிறார்களே இந்தப் பெண்கள்! ஆனால், அந்தப் பெண்கள் தன்மேல் செலுத்திய பக்தி, பாபாவின் மனத்தில் கல்கண்டாய்த் தித்தித்தது. பாபா அடியவர்களிடமிருந்து பக்தியை மட்டும் தானே எதிர்பார்க்கிறார்! எத்தனையோ அடியவர்கள் அவருக்கு என்னென்ன பொருட்களையோ காணிக்கையாய்க் கொண்டு வருகிறார்கள். ஜகஜ்ஜோதியாய் அகில உலகையும் தன் பிரகாசத்தால் துலங்கச் செய்யும் சூரியனுக்கு, கற்பூர ஆரத்தி காண்பிப்பது மாதிரி! அடேய். நான் கேட்பது உன் தீய குணங்களை.
அதைக் கொண்டுவந்து என் காலடியில் போடு. இனித் தீய நினைவுகளில் கூட ஆழமாட்டேன் என்று எனக்கு வாக்குறுதி கொடு!- பாபாவின் கண் பார்வை பக்தர்களை அதட்டுகிறதுஸ. எல்லா கோதுமையும் அரைபட்டதும் மாவை என்ன செய்யவேண்டும் எனப் பணிவோடு கேட்கிறார்கள் பெண்கள். மாவை நான்கு கூறாகப் பிரியுங்கள். ஷிர்டி கிராமத்தின் நான்கு எல்லைகளிலும், இந்த மாவை வேலி போல் தூவிவிட்டு வாருங்கள். உடனடியாக இதைச் செய்யுங்கள்! வந்த கூட்டம் மொத்தமுமே நான்காகப் பிரிந்தது. அந்த மாவு பயபக்தியோடு கிராமத்தின் நான்கு எல்லைகளிலும் வேலிபோல் தூவப்பட்டது. மறுகணம் காலரா அந்த எல்லையைத் தாண்டி வெளியேறிவிட்டது. காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆரோக்கியம் அடைந்தார்கள். பாபாவின் பாதங்களில் பணிந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள். பாபா அரைத்தது கோதுமையை அல்ல. காலராவைத் தூண்டிய தீய சக்தியை! இப்படி ஷிர்டி பாபா செய்த அற்புதங்கள் எத்தனையோஸபாபாவின் புனிதத் திருச்சரிதமே அற்புதமானது. சுந்தரகாண்டம் போல், நாராயணீயம்போல் ஷிர்டி பாபாவின் சரித்திரமும் பாராயணம் செய்வதற்கு உரியது. அந்தச் சரிதத்தைப் படிக்கும் அனைவருக்கும் எல்லா மங்கலங்களையும் தரக் கூடியது. கடவுளே மனித வடிவெடுத்த அந்த மகானின் புனிதத் திருச்சரிதம் இனிஸ
பகுதி – 2
ஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, பாபாவடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தது, அந்த ஊர் மக்கள் செய்த அதிர்ஷ்டம். நல்லவர்கள் அதிகமுள்ள இடத்தை இறைவன் விரும்புவது இயற்கைதானே! ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய வேப்பமரம். அதிகாலையில் காலாற நடந்துசென்று அந்த வேப்பமரக் குச்சியை ஒடித்து, பலர் ஒருவருக்கொருவர் பேசியவாறே பல் துலக்குவது உண்டு. அப்படியான ஓர் அதிகாலைஸ வேப்ப மரத்தடிக்கு வந்த சிலர் வியப்போடு மரத்தடியை வைத்த கண் வாங்காமல் பார்க்கலானார்கள். காலையில் சூரியன் தோன்றும். ஆனால், இன்று அங்கே ஒரு வெண்ணிலவல்லவா தோன்றியிருக்கிறது! பளீரென்று பிரகாசமாக ஓர் இளைஞன் மர நிழலில் சாந்தி தவழும் முகத்தோடு அமர்ந்திருந்தான். மானிடனாஸ இல்லை தேவனாஸ இத்தனை பேரழகை மனிதர்களிடம் பார்க்க முடியுமா! கண்ணும் மூக்கும் பிற அங்கங்களும் சேர்ந்து யாரோ சிற்பி சர்வ லட்சணமான ஒரு சிற்பத்தைச் செய்து அங்கே கொண்டுவைத்த மாதிரியல்லவா இருக்கிறது!
அவனைப் பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது. பார்த்த கண்கள் தித்தித்தன. அந்த வாலிபன் முகத்தில் தென்பட்ட தூய்மையும் குழந்தைத்தனமும் பார்ப்பவர் நெஞ்சங்களை அள்ளிச் சாப்பிட்டன. அப்படியொருவன் அங்கே அமர்ந்திருக்கிறான் என்ற செய்தி விறுவிறுவென அந்தச் சிற்றூரில் எங்கும் பரவியது. எல்லோரும் வேப்ப மரத்தடியில் ஒன்றுகூடி விட்டார்கள். இந்த அழகான பெரிய பொம்மை பேசுமா? வியப்போடு சில குழந்தைகள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதுவரை எங்கிருந்தான்? இப்போது திடீரென்று எங்கிருந்து இங்கு வந்தான்? இவன் யார்? மனத்தை மயக்குகிறதே இவன் தோற்றம்? வயது பதினைந்து அல்லது பதினாறு இருக்குமா? இப்போது இவன் இங்கே வந்திருப்பதன் நோக்கமென்ன?நேரம் கடந்து கொண்டிருந்தது. வெய்யில் ஏறத் தொடங்கிவிட்டது. அவன் எல்லோரையும் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தவாறே அமர்ந்திருந்தான். யாரப்பா நீ? என்று யாராவது விசாரிக்க வேண்டாமோ? யாருக்கும் என்ன கேட்பதென்றே தோன்றவில்லை. திகட்டத் திகட்ட அவனது அருள்பொங்கும் முகத்தைப் பார்த்துக்கொண்டே நின்றார்கள் அனைவரும். அவர்களிடையே கணபதிராவ் கோட்டி படேல் என்பவரும் அவரது மனைவி பாய்ஜா பாயியும் நின்றிருந்தார்கள்.
திடீரென பாய்ஜா பாயி பதட்டம் அடைந்தாள். அவனைப் பார்க்கும்போது குழந்தைஇல்லாத அவள் மனத்தில் தாயன்பு பொங்கியது. இந்தப் பிள்ளை சாப்பிட்டானோ! இல்லையோ! பசிக்குமே இவனுக்கு! அவள் தன் கணவரிடம், ஒருநிமிஷம், இதோ வந்துவிட்டேன்! என்றவாறே வீட்டுக்கு ஓடினாள். அவசர அவசரமாக நான்கைந்து சப்பாத்திகளைத் தயார் செய்தாள். தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் சப்ஜியும் தயாரித்தாள். அவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, ஒரு லோட்டாவில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு மீண்டும் வேப்பமரத்தடிக்கு ஓடி வந்தாள். கூட்டத்தின் நடுவே புகுந்து இளைஞன் அரு@க வந்து சேர்ந்தாள். வியர்வை வழிந்த முகத்தை முந்தானையால் ஒற்றிக்கொண்ட அவள், மகனே! நீ எப்போது சாப்பிட்டாயோ.. என்னவோ? கொஞ்சம் சப்பாத்தி எடுத்துக்கொள் அப்பா! என்றவாறே பாத்திரத்தைத் திறந்து அவன்முன் வைத்தாள். அவன் அவளையே பாசம் பொங்கப் பார்த்தவாறிருந்தான். முன்பின் அறிமுகமில்லாத மனிதர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களின் பசியைப் போக்க வேண்டும் என்று நினைக்கிறாளே! இவளின் இந்த உணர்வில் அல்லவா இறைவன் குடியிருக்கிறான்! அவன் தேனை விட இனிமையான தெய்வீகக் குரலில் பேசலானான்: பாய்ஜாபாயி! நீ செய்த சப்பாத்தியைச் சாப்பிடக் கசக்குமா? உன்னைப்போல் சமைக்க இந்த ஊரில் யாருண்டு? என்றவாறே சப்பாத்திப் பாத்திரத்தைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டான்.
பாய்ஜாபாயிக்கு மட்டுமல்ல, கூட்டத்தினர் அனைவருக்குமே மயக்கம் வரும்போல் இருந்தது. பாய்ஜாபாயியின் பெயர் இவனுக்கு எப்படித் தெரிந்தது! அகில உலகங்கள் அனைத்தையும் படைத்து ரட்சிக்கும் ஆண்டவனுக்குத் தன் குழந்தைகள் ஒவ்வொருவர் பெயரும் தெரியாமலா இருக்கும்! இளைஞன் தொடர்ந்து பேசலானான்: அம்மா! உன் சப்பாத்தியை எனக்கும் முன்னால், என் அண்ணா சாப்பிட வேண்டாமா? அவனுக்கும் பசிக்குமே? அவனுக்குக் கொடுத்துவிட்டு மீதியை நான் சாப்பிடுகிறேன்! இவனுக்கு ஓர் அண்ணாவா? யார் அந்த அண்ணா? கூட்டம் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தபோது, இளைஞன் ஊரை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியை நோக்கிக் கூவினான்:அண்ணா! ஓடிவா. வந்து சாப்பிட்டு விட்டுப் போ! அடுத்த கணம் வெள்ளைவெளேர் என்ற ஒரு பன்றி காட்டுக்குள்ளிருந்து பாய்ந்து ஓடிவந்தது. கூட்டம் விலகி வழிவிட்டது. அவ்வளவு அழகான பன்றியை யாரும் அதற்குமுன் பார்த்ததே கிடையாது. இது பன்றியா! இல்லை வராக அவதாரமே தானா! வாலைக் குழைத்துக்கொண்டு நின்ற பன்றி, இளைஞன் தூக்கிப்போட்ட இரண்டு சப்பாத்திகளைத் தாவிப் பிடித்துத் தின்றது. பின் ஒரே ஓட்டமாகக்காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டது! இந்த இளைஞன் யார்? கடவுளே தானா? அப்படியானால் இந்தச் சம்பவத்தின் மூலம் கடவுள் எதை உணர்த்த விரும்புகிறார்? மனிதர்கள் மட்டுமல்ல, ஜீவராசிகள் அனைத்துமே தன் குழந்தைகள் தான் என்கிறாரா? விலங்குகளிடமும் நீங்கள் அன்பாயிருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறாரா? எஞ்சியிருந்த சப்பாத்திகளைச் சாப்பிட்ட இளைஞன் லோட்டாவில் இருந்த நீரால் கைகழுவினான்.
பின் மிகுந்த சொந்தத்தோடு சிரித்தவாறே, பாய்ஜாபாயியின் சேலை முந்தானையில் ஈரக் கையைத் துடைத்துக் கொண்டான். அந்த முந்தானை பெற்ற பாக்கியமே பாக்கியம். அந்தக் காட்சியைப் பார்த்த பிற பெண்கள், பாய்ஜா பாயியைப் போல் தங்களுக்கு சப்பாத்தி எடுத்துவரத் தோன்றவில்லையே என ஏங்கினார்கள். அங்கிருந்த அத்தனை பெண்மணிகளும் கோகுலத்தில் குழந்தைக் கண்ணனைக் கண்ட தாய்மார்களின் மனநிலையை அடைந்தார்கள். வந்திருப்பது யார்? கண்ணனே தானா? ஆனால், கையில் குழலைக் காணோமே? கையில் இல்லாத குழல் அவன் குரலில் இருந்ததுபோல் தோன்றியது. அவ்வளவு இனிமையாக அவன் பேசலானான்: பாய்ஜா பாயி! இவ்வளவு ருசியான சப்பாத்தியை நாள்தோறும் சாப்பிடும் உன் கணவர் கணபதிராவ் கொடுத்துவைத்தவர்தான்! அடடே. கணபதிராவ் பெயரும் இவனுக்குத் தெரிந்திருக்கிறதே? அடுத்த கணம் அங்கே வந்து கூட்டத்தோடு நின்றிருந்த அவ்வூர்க் கோயில் பூஜாரிமேல் அருளாவேசம் வந்தது. மக்கள் படபடவென்று கன்னத்தில் போட்டுக் கொண்டே பூஜாரியைப் பார்த்தார்கள். பூஜாரி முழங்கினார். இந்த இளைஞன் யார் என்று தெரிந்துகொள்ள, இவன் அமர்ந்திருக்கும் இந்த வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டிப் பாருங்கள்! இதைக் கேட்ட இளைஞன் கலகலவென்று நகைத்தான். அப்படியே ஆகட்டும். தோண்டுங்கள்! என்றவாறே வேப்பமரத்தை விட்டுச் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். சிலர் ஓடோடிப்போய் கடப்பாரையை எடுத்துவந்து வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்ட எத்தனித்தார்கள். அப்போது யாரோ பெருமூச்சோடும் கோபத்தோடும் சீறும் ஒலி கேட்டது. கடப்பாரையைத் தூக்கியவர்கள் திகைத்துப் பின்வாங்கினார்கள்ஸ
பகுதி – 3
ஷிர்டி கிராமத்துக் கோயில் பூஜாரி சொன்னபடி கடப்பாரையால் வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டத் தொடங்கினார்களே சிலர்! அப்போதுதான் யாரோ சீற்றத்தோடு பெருமூச்சு விடும் ஒலி கேட்டதுஸ வேப்பமரத்தின் அருகாக இருந்த பாம்புப் புற்றிலிருந்து ஒரு ராஜநாகம் பெருமூச்சோடு உர்ரென்று தலையைத் தூக்கிச் சீறியது. அத்தனை பெரிய நாகப்பாம்பை யாரும் அதுவரை பார்த்ததில்லை. அதன் குடைபோல் விரிந்தபடத்தையும் பளபளவென மின்னும் வழவழப்பான வசீகரத் தோற்றத்தையும் வியந்து பார்த்த மக்கள், நாகராஜா! எங்களைக் காப்பாற்று! என்று முணுமுணுத்தவாறே கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். வேப்ப மரத்தடியிலிருந்து இப்போது சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த இளைஞன், நாகராஜாவைக் கனிவோடு பார்த்தான். சரி.. சரிஸ நான் சொல்லித்தான் இவர்கள் தோண்டுகிறார்கள்.
நீ கோபம் கொள்ள வேண்டாம்! அமைதியாக இரு! என்று நாகப்பாம்பிடம் சொன்னான்! பாம்போடு பேச முடியுமா? அவன் பேசினானே! அந்தப் பாம்பும் அவன் பேச்சைப் புரிந்துகொண்டதே! புற்றைவிட்டு மெல்ல ஊர்ந்து வெளிப்பட்ட ராஜநாகம், இளைஞன் அமர்ந்திருந்த இடத்தை ஒரு சுற்றுச் சுற்றி வலம் வந்தது. பின் அவன் பாதங்களில் தலைவைத்து நமஸ்கரித்தது. பிறகு மறுபடி அதே புற்றுக்குள் போய் மறைந்துவிட்டது! இந்த விந்தையான காட்சியைப் பார்த்த பெண்மணிகள் கன்னத்தில் கைவைத்து, என்னடியம்மா இது! அதிசயமாக இருக்கிறது! என்று வியப்பில் ஆழ்ந்தார்கள். இளைஞன் கலகலவெனச் சிரித்துக் கொண்டே நடக்கட்டும்! வேப்ப மரத்தின் வேரை வெட்டிவிடாதீர்கள். அது இந்த ஊரின் காவல் மரம்! என்று எச்சரித்து, தோண்டுகிறவர்களுக்கு உத்தரவு கொடுத்தான். மணிநாதம் போன்ற இளைஞனின் சிரிப்பில் மயங்கிய அவர்கள், பின் சுதாரித்துக் கொண்டு மறுபடி தோண்டத் தொடங்கினார்கள். மண்ணுக்குள்ளே அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மண்ணை மெல்ல மெல்லத் தள்ளிவிட்டுப் பார்த்தபோது, உள்ளே தென்பட்டது ஒரு குகை. அந்த அழகிய குகையில் நான்கு மாடங்கள் இருந்தன. நான்கு மாடங்களிலும் நான்கு தனித்தனி அகல் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன.
அதை விட ஆச்சரியம்! அந்த விளக்குகள் ஒவ்வொன்றும் அப்போதுதான் ஏற்றி வைக்கப்பட்டதுபோல் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தன. மூடிய குகைக்குள் விளக்கை ஏற்றிவைத்தது யார்? மண்மூடிய குகைக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது எப்படி? குகை நடுவே ஒரு மரப் பலகை வைக்கப் பட்டிருந்தது. மிகச் சில கணங்கள் முன்னால் வரை, யாரோ ஒரு ரிஷி அதில் அமர்ந்து தவம் செய்திருக்க வேண்டும். அந்த ரிஷி யார்? இப்போது அவர் எங்கே போனார்? அன்றலர்ந்த மலர்களால் அந்தப் பலகை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பலகையின் மேலே ஒரு ஜபமாலை. அந்த ரிஷி பயன்படுத்திய ஜபமாலையாக இருக்கலாம். குகை முழுவதும் கமகமவென ஒரு மனோகரமான நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. மண்ணால் மூடியிருந்த குகை இப்போது திறக்கப்பட்டதால் அந்த மணம் வெளியேயும் பரவி, கிராமம் முழுவதையும் வாசனை நிறைந்ததாக மாற்றியது. மண்ணைத் தோண்டி குகையைக் கண்டு பிடித்தவர்கள் மேலே ஏறி வெளியே வந்து தாங்கள் கண்ட அதிசயக் காட்சியை இளைஞனிடமும் மக்களிடமும் சொன்னார்கள். ஏற்கனவே தெரிந்த விஷயத்தைக் கேட்பதுமாதிரி, அவர்கள் சொன்னவற்றைச் சிரித்துக் கொண்டே கேட்டான் இளைஞன். சரிஸ. பூஜாரி சொன்னபடி மண்ணைத் தோண்டிப் பார்த்தாயிற்று அல்லவா? இனி அந்த இடத்தை முன்போல் மண்போட்டு மூடிவிடுங்கள்! இனி எக்காரணம் கொண்டும் இந்த இடத்தைத் திறக்காதீர்கள்! ஒரே ஒருமுறை திறந்து பார்க்க மட்டும்தான் உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது! அவன் எச்சரிப்பதுபோல் கூறினான்.
குகை மிகுந்த கவனத்தோடு மறுபடி மண்போட்டு மூடப்பட்டது. மக்களின் முகங்களில் தென்பட்ட கேள்விக்குறியைப் பார்த்து, இளைஞன் விளக்கம் தருவதுபோல் பேசலானான்: உள்ளே இருக்கும் குகை, குருநாதர் தவம் செய்யும் குகை. உலக ர்க்ஷமத்திற்காக அவர் எப்போதும் தவத்தில் ஆழ்ந்திருக்கிறார். அடிக்கடி மண்ணைத் திறந்து குருநாதர் தவத்தைக் கலைக்கலாகாது. இந்த வேப்ப மரத்தின் வெளியில் நாள்தோறும் விளக்கேற்றி வையுங்கள். வியாழக்கிழமை மறக்காமல் ஊதுபத்தி ஏற்றி வழிபடுங்கள். இச் செயல்கள் காரணமாக கிராமத்திற்கு மங்கலங்கள் பெருகும். அனைவரும் சுபிட்சமாக வாழ்வீர்கள். சரிஸ நீங்கள் எல்லோரும் இப்போது வீட்டுக்குச் செல்லலாம். நாளை அதிகாலை வரை யாரும் மறுபடி இங்கு வரவேண்டாம்! இளைஞனின் கண்டிப்பான குரலைக் கேட்டும், அந்தக் குகை பற்றிய வியப்பில் தோய்ந்தும் மக்கள் மெல்ல மெல்லக் கலைந்தார்கள். இளைஞன் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து நிர்ச்சலனமான தியானத்தில் ஆழ்ந்தான். மக்கள் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றார்கள். குகையில் குருநாதர் தவம் செய்வதாய்ச் சொன்னானே? யார் அந்த குருநாதர்? இவனே தானா? நினைத்தாலே சாந்தி தரும் அவன் திருமுகத்தை மனத்தில் தேக்கியவர்களாய் அனைவரும் மனமில்லாமல் தங்கள் இல்லம் நோக்கி நடந்தார்கள். அந்த இளைஞனுக்குச் சாப்பிடச் சப்பாத்தி கொடுத்த பாய்ஜா மாயி, இரவில் தன்னந்தனியே இவன் இங்கே தியானத்தில் ஆழ்ந்திருக்கப் போகிறான் போலிருக்கிறதே? பாம்புப் புற்று வேறு அருகில் இருக்கிறதே! இறைவா! எந்த ஆபத்தும் வராமல் இவனைக் காப்பாற்று! என்று உளமார வேண்டிக்கொண்டாள்.
இறைவனைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடமே வேண்டிக் கொள்ளும் அவளின் வெகுளித்தனத்தை என்னென்பது! மறுநாள் அதிகாலை எழுந்தவுடன், இளைஞனை மீண்டும் தரிசிக்கும் ஆவலில் ஓடோடி வந்தாள் பாய்ஜாமாயி. ஊர்மக்கள் அனைவரும் அவளைத் தொடர்ந்து வந்து அதே வேப்பமரத்தடியில் மறுபடி கூடினார்கள். ஆனால், அந்த இளைஞன் அங்கே இல்லை. அதுமட்டுமல்ல, அவன் நேற்று அங்கே இருந்ததற்கான சுவடு கூட இல்லை. ஏன்ஸ நேற்று வேப்ப மரத்தடியில் தோண்டிப் பார்த்து பின் புதுமண்ணைப் போட்டு மூடினார்களே? வேப்ப மரத்தடி பழையபடி தான் இருந்ததே தவிர, தோண்டிப் பார்த்து மறுபடி மூடியதற்கான அறிகுறி எதுவுமே அங்கு தென்படவில்லை! அப்படியானால் நேற்று நடந்ததுதான் என்ன? அது உண்மையாஸ இல்லை.. மாயத் தோற்றமா? ஏராளமான மக்கள் ஒன்று சேர்ந்து பார்த்தது மாயத் தோற்றமாக இருக்குமா? ஆனால், இப்போது நினைத்துப் பார்த்தால், இந்த உலகமே மாயத் தோற்றம் என்றும், அந்த இளைஞன் ஒருவன் மட்டும் தான் உண்மை என்றும் அல்லவா தோன்றுகிறது? இந்த வேப்பமரத்தடியை மீண்டும் தோண்டிப் பார்த்தால் என்ன? அந்த இளைஞன் மரத்தடியை மறுபடி தோண்டக் கூடாது என்றல்லவா உத்தரவு போல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்? அந்த தெய்வீக இளைஞன் மறுபடி வருவானா? ஷிர்டி மக்கள் அனைவரும் அவன் மறுபடி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யலானார்கள். நாள்தோறும் அவன் சொன்னபடி அந்த வேப்பமரத்தடியில் விளக்கேற்றி வைத்து அவனது தரிசனத்திற்காக ஏங்கிக் காத்திருந்தார்கள். அந்த இளைஞன் வந்தானா?