உடலும் மனதும் உற்சாகமாக இருக்க உறக்கம் அவசியம். சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்தில் உறங்கினால் உடல் ஆரோக்கியம் மேம்படும். `சராசரியாக நாளொன்றுக்கு, ஏழு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்’ என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், பலரும் இன்று தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். அன்றாடத் தூக்கத்துக்கும் உணவுப் பழக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. தூக்கத்தை வரவழைக்கவும், தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வைப் போக்கவும் சில உணவுகள் உதவும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம், மக்னீசியம் சத்துகள் இதய ரத்தநாளங்களின் ஆரோக்கியத்திலும், அறிவுத்திறன் செயல்பாட்டிலும் முக்கியப் பங்குவகிக்கின்றன. இவை இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால், உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.
Report this ad
மூலிகை டீ
சீமைச்சாமந்தி டீ, லாவண்டர் டீ போன்ற மூலிகைத் தேநீரை அருந்தினால் இயற்கையாகவே நல்ல தூக்கம் வரும். `மூலிகை டீ தயாரிக்கும்போது உருவாகும் வாசனைக்கு மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது’ என்று நம்பப்படுகிறது. கிரீன் டீக்கு தூக்கத்தை வரவழைக்கும் தன்மை உண்டு.
மாம்பழம்
உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை அதிகரிப்பதுடன், நல்ல தூக்கத்தைத் தரும் திறன்கொண்டது மாம்பழம்.
செர்ரி பழங்கள்
உயிரியல் கடிகாரத்தைக் கட்டுப்படுத்தும் மெலட்டோனின் ஹார்மோன்கள் செர்ரி பழங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆழ்ந்த தூக்கத்துக்கும், அதிக நேரம் தூங்குவதற்கும் மெலட்டோனின் உதவும்.
நட்ஸ்
முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளில் அதிகமாகக் காணப்படும் `ட்ரிப்டோபன்’ (Tryptophan) என்கிற அமினோ அமிலம், தூக்கத்தை வாரி வழங்கும் தன்மைகொண்டது. உயிரியல் கடிகாரத்தின் இயக்கத்துக்கும், தூக்க முறைகளை நிர்வகிக்கவும் உதவும் மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களின் சுரப்பை நட்ஸ் அதிகரிக்கும்.
மீன்
ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் பி6 ஆகிய சத்துகள் நிறைந்த மத்தி, சூரை போன்ற மீன்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வகை மீன்கள் தூக்கத்தைத் தூண்டக்கூடியவை.
புளூ பெர்ரி பழங்கள்
தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் நொறுக்குத்தீனியாக புளூ பெர்ரி பழங்களைச் சாப்பிடலாம். அவை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்வகித்து, மனதுக்கு முழு நிறைவு தரும் ‘லெப்டின்’ என்ற ஹார்மோனை நிலைப்படுத்தும். மனதில் முழு நிறைவு பெற்ற எண்ணம் தோன்றினால், தூக்கம் தானாக உங்கள் கண்களைத் தழுவும்.
பால்
தூங்குவதற்கு முன்னர் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் அருந்துவது தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும். பாலில் ஒரு சிட்டிகை லவங்கப்பட்டைத் தூள் சேர்த்துப் பருகினால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். பாலிலுள்ள `ட்ரிப்டோபன்’ தூக்கத்தைத் தூண்டும்.