வேலையே கதி என்று இருப்பவரா நீங்கள்?
22 May,2019
எந்தவொரு வேலையையும் செவ்வனே சீரும் சிறப்புமாக செய்து முடித்து அதில் வெற்றி காண நினைப்பது எல்லாம் சரிதான். ஆனால் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அவசரமாகவோ அல்லது அவசியமாகவோ உங்கள் உதவி தேவைப்படலாம், அப்போதும் நீங்கள் வேலை, வேலை என்று இருந்தால் அது நன்றாக இருக்காது. மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் அத்தனைக்கும் போதிய நேரம் ஒதுக்க வேண்டும். ஒரு நாளைக்கு 24 மணிநேரத்தில் 8 முதல் 10 மணிநேரம் மட்டுமே வேலைக்கு முன்னுரிமை கொடுங்கள். மீத முள்ள நேரத்தில் உங்களுக்காகவும் உங்கள் நட்புக்காகவும், உறவுகளுக்காகவும் செலவிட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சமநிலையில் இருந்து சிறப்பாக வாழ முடியும்.
ஒரு ஆய்வின்படி, ஸ்பெயினில் உள்ள 12% பேரும் இந்தியாவில் கிட்டத்தட்ட 13% பேர் வேலையே கதி என்று இருக்கிறார்களாம்.
வேலை கதி என்று இருப்பவர்களின் விநோதங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன்.
1) வேலையே கதி என்று இருப்பவர்களை வேடிக்கை விநோத உயிரினங்களாக பிறரால் பார்க்கப்படுவர்.
2) வேலையே கதி என்று இருப்பதுகூட ஒருவிதத்தில் மன நோய்தான் இதனை ஆங்கிலத்தில் ஒர்க்கஹாலிக் (workaholic) என்று வேடிக்கையாகச் சொல்வார்களாம். இன்னும் சொல்லப்போனால் அலுவலக அடிமைகள் (ஆபிஸ் ஸ்லேவ்) என்று கூட சொல்லவார்களாம்
3) வாழ்க்கையில் தான் பட்ட துன்பங்ளாலும், அவமானங்களாலும் மன விரக்தியின் உச்சத்திற்கு சென்று அதில் இருந்து மீண்டு சமுதாயத்தில் நாம் உயர்ந்த ஸ்தானத்தில் வாழ வேண்டும் அதற்கு தேவை பணம் அதனை சம்பாதிக்க சிலர் வைராக்கியத்துடன் வேலை செய்வதுண்டு.
4) முக்கியத்துவம் இல்லாத வேலையாக இருந்தாலும் அதனைத் தொடங்கி விட்டால் அதனை முடிக்காமல் வேறு வேலைகளையோ அல்லது பிற நட்புக்களையோ அல்லது உறவுகளையோ திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.
5) குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தால், அங்கு நிம்மதி கிட்டுவதில்லை. அதனால் அவர்கள், வேலைக்கு சென்று அதிலேயே மூழ்கி விடுகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைப்பதாக நினைக்கிறார்கள். உண்மையில் மன அழுத்தம் தன் அவர்களுக்கு ஏற்படும் என்று சொல்கிறார்கள்.
6) தான் பார்க்கும் வேலை மிகவும் பிடித்தமான வேலை என்பதாலும், அதில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடும் இருப்பவர்களும் வேலையே கதி என்று இருப்பார்கள்.
7) வேலையே கதி என்று இருப்பவர்கள், ஜப்பானில் ஆண்டுக்கு 1000 பேர் அதிகமான வேலையால் மரணமடைகிறார்கள் என்றும் சொல்கிறது.
8) எந்நேரமும் வேலையே கதி என்று இருந்தால், கண்டிப்பாக அவர்களின் உடல்நிலையும் மனநிலையும் மிக கடுமையாக பாதிக்கப்படும் .
9) இவர்களின் குழந்தைகள் அன்புக்கு ஏங்குபவர்களாக இருப்பார்கள், குழந்தையாக இருக்கும் போது தனக்கு கிடைக்காத அன்பு, வளர்ந்த பிறகு தன்னிடம் அன்பு காட்டாத தனக்காக நேரம் செலவிடாத அம்மா அல்லது அப்பாவிடம் அன்பு காட்ட மறுப்பார்கள்.
10) அலுவலத்தில் தேவையில்லாத போட்டியும் பொறாமையும் உண்டாகும். சக ஊழியர்களிடம் கெட்ட பெயர் ஏற்படும்.
11) ஒரு அலுவலகத்தில் நாம், வேலையே கதி என்று இருந்து, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுப்பட்டாலும், அவர்களுக்கு நாம் தேவையில்லை என்று நினைக்கும்போது நம்மை தூக்கி எறிந்திடவும் தயங்க மாட்டார்கள்.