கடந்த ஆண்டு குர்கானில் நடந்த பிசிஓடி மாநாட்டில் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமான அந்தத் தகவலைக் கேள்விப்பட்டேன். அதில் பேசிய மகப்பேறு மருத்துவர்கள் பலரும் தாம் மருத்துவக் கல்லூரியில் படித்தபோது இந்தப் பிரச்னையைப் பற்றிக் கேள்வியே பட்டதில்லை என்று சொன்னார்கள். கடந்த சில ஆண்டுகளில்தான் இது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
நான் 13 ஆண்டுகளாக பிசிஓடி பிரச்னைக் கான பிரத்யேக டயட் பரிந்துரைகளில் தீவிரமாக இயங்கி வருகிறேன். பிசிஓடிஸ அதாவது, பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் – சினைப்பை நீர்க்கட்டிஸ குணப்படுத்த முடியாவிட்டாலும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகளைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். அது மட்டுமே போதாது. உணவியல் முறையில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும். கூடவே உடற்பயிற்சியிலும் வாழ்வியல் முறைகளிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் பிசிஓடி பாதிப்பின் பிடியிலிருந்து மீளலாம்.
எடை குறைப்புக்காக வருகிறவர் களில் பிசிஓடி பிரச்னையால் பாதிக்கப் பட்டிருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமிருப்பதைப் பார்க்கிறேன். ‘எனக்கு பிசிஓடி இருக்கு. அதனால கல்யாணமே வேண்டாம்னு இருக்கேன்’ என்று சொல்கிறவர்களையும் பார்க்கிறேன். பிசிஓடி இருப்பதால் கருத்தரிக்க முடியாமல் போகலாம். அது, அநாவசியமாக ஓர் ஆணின் வாழ்க்கையை பாதிக்குமாம்!
பிசிஓடியைக் கட்டுப்படுத்துவதில் உணவுக்கே முதலிடம்!
பிசிஓடியால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
● `சர்க்கரை விஷத்துக்குச் சமம்’ என்பதால் அதை அறவே தவிர்ப்பது சிறந்தது. சர்க்கரை தான் வில்லன் என்கிற நினைப்பில் வெல்லம், பனங்கற்கண்டு, தேன், பழச்சாறுஸ இப்படி இனிப்பாக இருக்கும் மற்ற எல்லாம் ஓகே என அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்.
●பதப்படுத்தப்பட்ட மற்றும் ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட உணவுகள் வேண்டாம். மைதா, பேக்கரி உணவுகள், கலர் சேர்க்கப்பட்ட உணவுகள், உப்பு அதிகம் சேர்த்த நொறுக்குத்தீனிகள் வேண்டவே வேண்டாம்.
● டீப் ஃப்ரை செய்யப்பட்ட உணவுகள், கலோரி அதிகமான கெட்டியான லஸ்ஸி, மில்க் ஷேக், கோல்டு காபி, இனிப்பு சேர்த்த, சேர்க்காத ஜூஸ் வகைகளும் வேண்டாமே.
● ஒருமுறை உபயோகித்து, மீண்டும் சூடுபடுத்தப்படும் எண்ணெயும், சரியாக மூடப்படாத நிலையிலிருக்கும் எண்ணெயும் சீக்கிரமே ஆக்ஸிடைஸ் ஆகும். அதனால், எண்ணெயை எப்போதும் காற்றுப் புகாத பாட்டில்களில் நிரப்பிவைக்க வேண்டும். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தவிட்டு எண்ணெய், மிகக் குறைந்த அளவு நெய் மற்றும் உப்பு சேர்க்காத வெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
● உணவைத் தவிர்த்துவிட்டு பெரிய கிண்ணம் முழுக்க பழங்கள் சாப்பிடுவது பிசிஓடி பிரச்னைக்கு உதவாது. பழங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, ரத்தச் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது ஆற்றலை எல்லாம் கொழுப்பாக மாற்றக்கூடிய, (குறிப்பாக வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றிலும்) இன்சுலின் ஹார்மோன் வெளியேற்றத்தைத் தூண்டும்.
● தானியங்கள், பால், பருப்பு, சர்க்கரை, பழங்கள், காய்கறிகள், கொண்டைக்கடலை, ராஜ்மா, காராமணி, மொச்சை, பட்டர் பீன்ஸ், டபுள் பீன்ஸ் என எல்லாவற்றிலும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. பெரும்பாலான பருப்பு வகைகளில் 50 முதல் 55 சதவிகித ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உள்ளது. சிலருக்கு இவை இன்சுலின் ஹார்மோன் சுரப்பைத் தூண்டி, அதன் விளைவாக ஆற்றல் எல்லாம் கொழுப்பாக மாறக் காரணமாவதுண்டு என்பதால், அவர்கள் தவிர்க்கலாம். கார்போஹைட்ரேட் உணவுகள் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் மதிய உணவுக்கோ, இரவு உணவுக்கோ முழுத்தானியங்களையும், சிறுதானியங்களையும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு மிகக் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டைக் கூட உடல் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அவர்கள் அதைத் தவிர்த்துவிட்டு பழங்கள், காய்கறிகள் மற்றும் மஞ்சள் நிற பருப்புகளை மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்.
● புரதம் நிறைந்த உணவுகள் பசியைக் கட்டுப்படுத்துபவை. உணவுத் தேடலைக் குறைப்பவை. தசை வளர்ச்சிக்கு உதவுவதுடன், ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியவை. சரியான புரத உணவுகள் உட்கொள்ளப்படும்போது, ரத்தச் சர்க்கரையின் அளவில் ஏற்படும் தாறுமாறான ஏற்ற, இறக்கங்கள் சமநிலைக்கு வரும். மனநிலையில் ஏற்படும் அதிரடி மாற்றங்களும் மாறும். இனிப்பின் மீதான தேடல் குறையும். அடிக்கடி ஏற்படுகிற பசி உணர்வும் குறையும். ஒரே வாரத்தில் இந்த மாற்றங்கள் நிகழும். மீன், சிக்கன் அல்லது மட்டன் எதுவானாலும் குறைந்த அளவு எண்ணெயில் சமைத்தோ, பிரஷர் குக் செய்தோ வீட்டிலேயே சமைத்து உண்பதுதான் சிறந்தது,
● குளூட்டன் உள்ள கோதுமை, பார்லி போன்றவற்றையும் பால், பனீர், சீஸ், கேக், மில்க் ஷேக், கோல்டு காபி, கேரமல் ஃப்ளேவர்டு பானங்கள், லஸ்ஸி, மில்க் ஸ்வீட்ஸ் போன்றவற்றையும் தவிர்க்கும்போது ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை உணரலாம்.
வாழ்வியல் மாற்றங்கள்
● இரவில் 10 மணிக்குத் தூக்கம்.
● காலை வெயில் உடலில் படும்படி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி.
● தினமும் சில நிமிடங்கள் யோகாசனப் பயிற்சி (யோகா செய்வது ஸ்ட்ரெஸ்ஸுக்குக் காரணமான கார்டிசால் ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்தும்).
● தினமும் ஏதேனும் ஓர் உடற்பயிற்சி.
● நாள் முழுவதும் ஆக்டிவாக இருப்பது.
– நம்மால் முடியும்
பிசிஓடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சாம்பிள் மெனு பிளான்
இது எல்லோருக்கும் பொதுவான மெனு அல்ல. ரத்தப்பரிசோதனை முடிவுகள் மற்றும் காப்போஹைட்ரேட்டை ஏற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே ஒவ்வொருவருக்குமான டயட் திட்டமிடப்படும்.
காலையில் எழுந்ததும்
● வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை பட்டைத்தூளும், அரை எலுமிச்சைப்பழத்தின் சாறும் கலந்தது ஒரு டம்ளர்.
காலை உணவுக்கு
● அடை அல்லது பெசரட்டு ஒன்று, தொட்டுக்கொள்ள இஞ்சி அல்லது கொத்தமல்லியும் புதினாவும் சேர்த்தரைத்த சட்னி, ஒரு டம்ளர் மோர் அல்லது ஒரு முட்டையுடன் வெங்காயம், குடமிளகாய், கீரை சேர்த்த ஆம்லட் அல்லது முட்டை பொடிமாஸ், கூடவே சிட்ரஸ் பழம் ஒன்று, ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸ் – (இரண்டில் ஒன்று).
முன்பகலில்
● நீர்மோர் 500 மி.லி அல்லது உப்பு சேர்த்த எலுமிச்சைப்பழ ஜூஸ் 500 மி.லி அல்லது எலுமிச்சைப்பழச்சாறு சேர்த்த கிரீன் டீ அல்லது பிளாக் டீ (தேன், சர்க்கரை போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்).
● ஜூஸ், இளநீர், லஸ்ஸி, பிஸ்கட், ரஸ்க், குக்கீஸ், கேக், வறுத்த, பொரித்த உணவுகள், கேரட் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
மதிய உணவுக்குஸ.
● அரை கப் சாதம் அல்லது சிறுதானியத்துடன் ஒரு கப் கூட்டு, ஒரு கப் சாலட், அரை கப் கிரேவி (காரக்குழம்பு, வத்தக்குழம்பு, குருமா, தேங்காய் சேர்த்த கறி போன்றவை வேண்டாம்) அல்லது குறைந்த எண்ணெயில் வீட்டிலேயே சமைத்த அசைவ உணவுடன், ஒரு கப் பொரியல். பழுப்பு அரிசி அல்லது சிறுதானியம் ஒரு கப், சாம்பார் அல்லது ரசம் அல்லது துவையல் அல்லது மோர்க்குழம்பு அல்லது தக்காளிக் கறி அல்லது தக்காளிக் கூட்டு அல்லது கீரை.
● மாவுச்சத்து நிறைந்த காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு. சேனைக்கிழங்கு, வாழைக்காய், சன்னா, ராஜ்மா, காராமணி, பட்டர் பீன்ஸ், டபுள் பீன்ஸ் போன்றவை வேண்டாம்.
மாலையில்
● டீ அல்லது காபி (பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல்).
● கொறிக்கஸ கைப்பிடியளவு பொட்டுக்கடலை, ஒரு பழம் அல்லது ஒரு முட்டை அல்லது ஒரு பழம் (ஜூஸாகவோ, மில்க் ஷேக்காகவோ வேண்டாம்) அல்லது கேரட், பீட்ரூட் தவிர்த்த சாலட் ஒரு கப்.
இரவு உணவுக்கு
● ஒரு கப் சூப், சிறுதானிய தோசை 2, சாம்பார் அல்லது சட்னி அல்லது அசைவ கறி. அல்லது பொரியல் ஒரு கப், சிவப்பரிசி இட்லி அல்லது தோசை அல்லது இடியாப்பம் அல்லது சிறுதானிய இட்லி அல்லது தோசை 2, கிரேவியுடன்.
● இரவு உணவுடனும் காய்கறிகள் எடுத்துக்கொள்ளுங்கள். நார்ச்சத்து நிறைந்த, மாவுச்சத்து குறைவான காய்கறிகள் 250 கிராம் அளவு எடுத்துக்கொள்ளலாம் (வாழைப்பூ, வாழைத்தண்டு, கீரை, புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், பாகற்காய், பீன்ஸ், முட்டைகோஸ், வெள்ளைப் பூசணி, முருங்கைக்காய், கத்திரி, குடமிளகாய், வெண்டைக்காய், புதினா, கொத்தமல்லி, சௌசௌ, நூல்கோல், கோவைக்காய், கொத்தவரங்காய், சுண்டைக்காய், அத்திகாய், பப்பாளிக்காய், மஞ்சள் வெள்ளரி போன்றவை).
அவசியம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு உணவுகள்
● ஆளிவிதை பவுடர் 3 டீஸ்பூன் தினமும் (திரவ உணவுகள், சூப், சாலட் என எல்லாவற்றிலும் தூவிச் சாப்பிடலாம்)
● பாதாம், வால்நட்ஸ், உப்பு சேர்க்காத பிஸ்தா, முந்திரி
● ஆப்பிள் சிடர் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு
● பட்டைத்தூள்
● மக்னீசியம் (உணவின் மூலம் அல்லது சப்ளிமென்ட்டாக)
இந்தப் பழங்கள் மட்டும் ஓ.கே!
● கொய்யா, பேரிக்காய், கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி, சிம்லா ஆப்பிள் (சிறியது), கிவி, ஸ்ட்ராபெர்ரி, நாவல்பழம், நெல்லிக்காய், இலந்தைப்பழம் – 100 கிராம் அல்லது ஒரு முழுப்பழம்.
● இங்கே குறிப்பிடாத பழங்களைத் தவிர்க்கவும்.