கொச்சிக்கடை தற்கொலை தாக்குதல் –
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவர் கிங்ஸ்பெரி ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவரின் வாகனத்தில் தேவாலயத்திற்கு வந்தார் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் தங்கள் விசாரணைகள் குறித்த விபரங்களை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்
இதன்போதே கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதலை மேற்கொண்டவர் அந்த இடத்திற்கு எவ்வாறு வந்தார் என்ற விபரத்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தவேளை தாக்குதலிற்கு மறுநாள் கொச்சிக்கடையில் தேவாலயத்திற்கு அருகில் வெடித்த வாகனத்திலேயே முதல்நாள் தற்கொலை குண்டுதாரி வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர்
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் அதிக வெளிநாட்டவர்களை பலியெடுத்த, சங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் இரு தற்கொலைக் குண்டுகள் வெடித்துள்ளதுடன் அதில் முதல் குண்டை தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் பயங்கரவாத குழுவுக்கு தலைமை வகித்த மொஹம்மட் காசிம் மொஹம்மட் சஹ்ரான் அல்லது சஹ்ரான் ஹாசிம் அல்லது அஷ்ஷெய்க் சஹ்ரான் ஹாஷிம் என்பவரே நடத்தியுள்ளமையை சி.ஐ.டி. விசாரணைகளில் கண்டறிந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை 8.54 மணிக்கு இந்த குண்டை அவர் வெடிக்கச் செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நிதிக் குற்ற விசாரணை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தரவின் கையெழுத்துடன் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே அன்றைய தினம் காலை 8.55 மணிக்கு இரண்டாவது குண்டை மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் என்பவர் வெடிக்கச் செய்துள்ளதாக சி.ஐ.டி.யின் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரிகளான இல்ஹாம் மற்றும் சஹ்ரான் ஆகியோரின் தலைப் பகுதிகள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பில் டி.என்.ஏ. பரிசோதனைகளை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சஹ்ரானின் தங்கையான மொஹம்மட் காசிம் பாத்திமா மதனியா என்பவர் தற்போது மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரை கொழும்புக்கு அழைத்து வந்து டி.என்.ஏ. கூறுகளைப் பெற்று உறுதி செய்யவும் நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு அனுமதி வழங்கியுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் ஆலோசனையில் பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர தலைமையிலான குழுவினர் முன்னெடுக்கும் விசாரணைகளில், ஷங்ரில்லா தாக்குதல் தொடர்பில் முழுமையான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஏபரல் 21 ஆம் திகதி ஷெங்ரில்லா ஹோட்டலில் முதல் குண்டு 8.54 மணிக்கு டேபிள் வன் எனும் உணவகத்தில் வெடித்துள்ளதுடன் இரண்டாம் குண்டு அந்த உணவகம் உள்ள மூன்றாம் மாடியின் மின் தூக்கி மற்றும் படிகள் அமைந்துள்ள வெளியேறல் பிரிவில் வெடிக்க செய்யப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு இடம்பெறும் போது குறித்த ஹோட்டலில் 16 அறைகளில் 34 இலங்கையர்களும், 192 அறைகளில் 327 வெளிநாட்டவ்ர்களும் தங்கியிருந்துள்ளனர்.
குண்டுவெடிப்பில் 12 இலங்கையர்கள், 24 வெளிநாட்டவர்கள் என 36 பேர் ஷங்ரில்லா ஹோட்டலில் மட்டும் பலியாகியுள்ளனர். இதனைவிட 22 வெளிநாட்டவர்கள் 12 உள்நாட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
அந்த ஹோட்டலில் இருந்த ஷிர்க் பிரகாஷ் (ஷிர்க் ப்ரகஷ்) மற்றும் ஷான் மயூர் கொவின்தி ( ஷன் மயுர் கொவின்தி) ஆகிய இந்தியர்கள் காணாமல் போயுள்ளதுடன், அந்த உணவகத்தில் சேவையாற்றிய ஒருவரும் காணாமல் போயுள்ளார்.
ஷெங்ரில்லா ஹோட்டலில் கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி மொஹம்மட் எனும் பெயரில் முன்னிலையான ஒருவர் தனது இரு நண்பர்களுக்கு என அறை ஒன்றினை பதிவு செய்துள்ளார். 393380 எனும் அடையாள இலக்கமுடைய பதிவினையே அவர் செய்துள்ளார்.
அன்றைய தினம் அவ்வாறு அறையை பதிவு செய்யவந்தவர், உயிர்த்த ஞாயிறன்று சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடாத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட் எனும் 831260645 எனும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் ஏபரல் 20 ஆம் திகதி 862442067 எனும் அடையாள அட்டை இலக்கத்தை உடைய மொஹம்மட் இப்ரஹீம் இல்ஹாம் அஹமட் என்பவரும் 873340312 எனும் அடையாள அட்டை இலக்கத்தை உடைய மொஹம்மட் அசாமும் ஷங்ரில்லா ஹோட்டலுக்கு இரவு 8.00 மணியளவில் வந்துள்ளனர். அவர்கள் அங்கு 616 ஆம் இலக்க அறையில் தங்கியிருந்துள்ளனர்.
தற்கொலை குண்டுதாரிகளில் இருவராக அடையாளம் காணப்பட்ட அந்த அறையில் இருந்த மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட்டின் தந்தையான மொஹம்மட் யூசுப் இப்ராஹீம் மற்றும் அவரது தாயாரான கதீஜா உம்மா உள்ளிட்டோர் தற்போது சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் ஊடாகவும் இல்ஹாமின் சகோதரர்கள் ஊடாகவும் அங்கு இரண்டாவது குண்டை வெடிக்கச் செய்தவர் இல்ஹாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறிப்பாக சி.ஐ.டி. நீதிமன்றுக்கு கொடுத்த தகவல்கள் பிரகாரம் குறித்த ஹோட்டலில் 616 ஆம் இலக்க அறையில் தங்கியிருந்ததாக கூறப்படும் மொஹம்மட் அசாம் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.
கொழும்பு 12 ஐச் சேர்ந்த மொஹம்மட் அசாமின் மனைவி ஆய்ஷா சித்திகா மொஹம்மட் பசீர், அசாமின் பெற்றோரான சேகு மொஹம்மட் முபாரக் மற்றும் தாய் மொஹம்மட் ஹனீபா மெஹ்ருன் நிஸா ஆகியோரின் வாக்கு மூலங்களின் பிரகாரமும், சி.சி.ரி.வி. காணொளி பிரகாரமும் கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஷங்ரில்லா ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய மற்றைய தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் என சி.ஐ.டி. விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
862014685 எனும் அடையாள அட்டை இலக்கத்தை உடைய சஹ்ரான் ஹாசிம், அஷ்ஹேய்க் சஹ்ரான் ஹாசிம் எனவும் அறியப்படுவதாக கூறும் சி.ஐ.டி. , குருணாகல் கெக்குணுகொல்லையைச் சேர்ந்த 955944666 எனும் அடையாள அட்டை இலக்கத்தை உடைய அப்துல்காதர் பாத்திமா ஹாதியா மற்றும் அவரது 4 வயது மகள் பாத்திமா ருகையா ஆகியோரே கடந்த 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் என நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த தற்கொலை குண்டுவெடிப்பில் சஹ்ரானின் தந்தையான மொஹம்மட் காசிம், 883093984 எனும் அடையாள அட்டையை உடைய சின்ன மெளலவி என அரியப்படும் மொஹம்மட் சைனி, 903432624 எனும் அடையாள அட்டை இலக்கத்தை உடைய மொஹம்மட் ரில்வான் ஆகிய சஹ்ரானின் சகோதரர்களும் கொல்லப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. கோட்டை நீதிவானுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
ஷங்ரில்லா தாக்குதலில் தற்கொலைதாரியாக சஹ்ரான் இருந்தார் என்பதை மேலும் உறுதி செய்ய மீட்கப்பட்ட சஹ்ரானின் தலைப் பகுதியில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ. மூலக் கூருகளுடன் அவரது சகோதரியான மொஹம்மட் காசிம் மதனியாவின் டி.என்.ஏ. கூருகளை ஒப்பீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மட்டக்களப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமரியலில் உள்ள அவரை இன்றைய தினத்துக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கும் இடையில் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முற்படுத்தி டி.என்.ஏ. சோதனைகளுக்கு ஏற்பாடுச் செய்யுமாறு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க மட்டக்களப்பு சிறைச்சாலைகள் அத்தியட்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஷங்ரில்லா ஹோட்டல் சி.சி.ரி. காணொளிகள் பிரகாரம் 6 ஆம் மாடியில் இருந்து வரும் குண்டுதாரிகள், மூன்றாம் மாடியில் கைலாகு கொடுத்து பிரிவதும் அதில் ஒருவர் டேபிள் வன் உணவகத்தில் உணவு எடுக்கும் பகுதியில் குண்டை வெடிக்கச் செய்வதும் மற்றையவர் மின் தூக்கி மற்றும் படிகளுக்கு அருகே வெடிக்கச் செய்வதும் சி.சி.ரி.வி. காணொளிகள் ஊடாக தெரிவதாக சி.ஐ.டி. நீதிமன்ருக்கு கொடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைவிட இந்த தற்கொலைதாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் 7 வாடகை வாகனங்கள் குறித்தும் சி.ஐ.டி. விசாரித்து வருவதாக நீதிமன்றுக்கு தெரியப்படுத்தப்ப்ட்டுள்ளது.
இரு முச்சக்கர வண்டிகள், 2 வெகன் ஆர் ரக மோட்டார் வாகங்கள், ஒரு ஹொண்டா வாகனம் மற்றும் இரு சுசுகி எல்டோ வாகனங்கள் தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இந்த வாகனங்களில் வெடிபொருட்கள் கொன்டுவரப்பட்டதா எனவும் ஏனைய விடயங்களை கண்டறியவும் அவற்றை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்கொலை குன்டுதாரிகள், கல்கிசை, கொழும்பு 3, தெமட்டகொடை, கொச்சிக்கடை, படல்கும்பர மற்றும் மதகம பகுதிகளில் 6 இரகசிய இல்லங்களை பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த வீடுகளையும் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தி உயிரியல் கூருகள் ஏதும் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சி.ஐ.டி. மன்றுக்கு அறிவித்து அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ளது.
தற்கொலை குன்டுதாரி ஒருவரின் தெமட்டகொடை மஹவில கார்ட்டுன் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள், மாணிக்கக் கற்களை பெறுமதி மதிப்பீட்டுக்காக மாணிக்கக் கல் மற்று ஆபரணங்கள் அதிகார சபைக்கு அனுப்பவும் அனுமதி பெறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் ஈ, உ, 3 ஆம் அத்தியாயம் தண்டனை சட்டக் கோவையின் 296,300,315,317,408 ஆகிய அத்தியாயங்களின் கீழும் 1996 ஆம் ஆண்டின் அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் கீழும் குற்றம் ஒன்றை புரிந்துள்ளதாக கருதி விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அத்துடன் 2011 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்டம் மற்றும் 2013 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க திருத்தச் சட்டம் அகையவற்றின் ஊடாக திருத்தப்பட்ட 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்கர்வாதிகளுக்கு நிதி உதவி அளிப்பதை தடைசெய்யும் இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் கீழும் விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது குறித்த வழக்கு இன்று மீள விசாரணைக்கு வரவுள்ளது.