தெலுங்கானாவில் 3 பள்ளி மாணவிகளை கற்பழித்து கொன்ற வாலிபர்
02 May,2019
தெலுங்கானாவில் 3 பள்ளி மாணவிகளை கற்பழித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹாஜிபூர் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கடந்த 25-ந்தேதி மாயமானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் ஊருக்கு வெளியே உள்ள பாழடைந்த கிணற்றில் பிணமாக கிடந்தார்.
விசாரணையில் மாணவியை அந்த கிராமத்தை சேர்ந்த சீனிவாச ரெட்டி கற்பழித்து கொன்றது தெரிய வந்தது. ராவிர்யாரி கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சீனிவாச ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17 வயது மாணவியையும், 2015-ம் ஆண்டு 9-ம் வகுப்பு மாணவியையும் கற்பழித்து கொன்று உடலை பாழடைந்த கிணற்றுக்குள் புதைத்ததாக தெரிவித்தார்.
ஹாஜிபூர் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் மாணவிகள் நடந்துதான் செல்வார்கள். இதை பயன்படுத்தி கொண்ட சீனிவாசரெட்டி தனது மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுப்பதாக மாணவிகளை ஏற்றி கொண்டு சென்றுள்ளார்.
அப்போது பாழடைந்த கிணற்று பகுதிக்கு மாணவிகளை அழைத்து சென்று கற்பழித்து கொன்றுள்ளார். பின்னர் உடல்களை கிணற்றுக்குள் புதைத்துள்ளார்.
இதற்கிடையே கொல்லப்பட்ட மற்ற 2 மாணவிகளின் உடல்களையும் போலீசார் மீட்டனர். இச்சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.