டீயில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை" - ஆச்சர்யமளிக்கும் ஆய்வு முடிவு
01 May,2019
பெரும்பாலான டீ பிரியர்கள் சர்க்கரை இல்லாமல் டீ குடிக்கமாட்டார்கள். ஆனால், டீயில் சர்க்கரையை கலந்து குடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது, டீ பிரியர் ஒருவர் நீண்டகால அடிப்படையில் முயற்சிக்கும்போது, எவ்வித பிரச்னையுமின்றி, சர்க்கரையோடு டீ குடித்தபோது இருந்த உற்சாகத்துக்கு குறைவின்றி, சர்க்கரை இல்லாமலே இருக்க முடியுமென்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஒரேயடியாகவும் மற்றும் படிப்படியாகவும் டீயில் சர்க்கரையின் தேவையை குறைப்பது இதற்கான முயற்சியில் குறிப்பிடத்தக்க பலனை தருமென்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், தங்களது ஆய்வு முடிவுகளை முழுக்க உறுதி செய்வதற்கு பெரியளவிலான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக சர்க்கரை கலந்து டீ குடிக்கும் 64 ஆண்களை ஒரு மாத காலத்துக்கு இதுதொடர்பான ஆய்வுக்கு லண்டன் மற்றும் லீட்ஸ் பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உட்படுத்தினர்.
ஒரு மாதகால ஆய்வுக்கு பின்னர், டீயில் சர்க்கரையின் அளவைக் குறைத்த குழுவினர்கள், எவ்வித மாற்றமும் இன்றி டீயை தொடர்ந்து விரும்பி குடிப்பது தெரியவந்துள்ளது.
அதாவது, ஆராய்ச்சியின் முடிவில், படிப்படியாக சர்க்கரையை குறைத்து பயிற்சி செய்த குழுவை சேர்ந்தவர்களில் 42 சதவீதத்தினர் நிரந்தரமாக சர்க்கரையை நிறுத்தினர். அதேபோன்று, ஒரேயடியாக சர்க்கரையை நிறுத்தி பயிற்சி செய்தவர்களில் 36 சதவீத்தினர் நிரந்தரமாக சர்க்கரையை கைவிட்டனர்.
ஆச்சர்யமளிக்கும் வகையில், தொடர்த்து ஒருமாத காலம் டீயில் சர்க்கரை கலந்து குடித்து வந்தவர்களில் ஆறு சதவீதத்தினரும் அதை ஒதுக்கினர்.
இதே போன்று மற்ற வகை பானங்களிலும் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு மக்கள் முயற்சிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்கின்றனர்.