கள்ளக்காதல் கைகூடாததால் ஆத்திரம் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்ற
28 Apr,2019
கள்ளக்காதல் கைகூடாததால் ஆத்திரம் அடைந்த வியாபாரி, மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்று தானும் உடல் சிதறி செத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டு வெடித்தது
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள நாய்கட்டி பகுதியை சேர்ந்தவர் நாசர். இவருடைய மனைவி அமினா (வயது 37). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நாசர் அதே பகுதியில் கணினி மையம் வைத்துள்ளார். அதன் அருகில் பென்னி (47) என்பவர் பர்னிச்சர் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் அங்குள்ள பள்ளிவாசலுக்கு நாசர் தொழுகைக்காக சென்று விட்டார். அப்போது அவரது வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
உடனே அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பென்னி மற்றும் அமினா ஆகியோர் உடல் சிதறி இறந்து கிடப்பது தெரியவந்தது.
வெடிகுண்டு நிபுணர்கள்
போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
அதன்பின்னர் சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். நாசரின் மனைவி அமினா மீது பென்னிக்கு காதல் மலர்ந்துள்ளது. இதை அவர் பலமுறை அமினாவிடம் கூறி உள்ளார். ஆனால் அமினா அவரது காதலை ஏற்கவில்லை.
கள்ளக்காதலை ஏற்கவில்லை
இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட பென்னி அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார். நேற்று மதியம் நாசர் பள்ளி வாசலுக்கு சென்றுவிட்டார்.
இதனை பயன்படுத்தி வீட்டில் தனியாக இருந்த அமினாவை சந்திக்க வெடிகுண்டுடன் பென்னி சென்றார். அப்போது தனது கள்ளக் காதலை வெளிப்படுத்தியும் அவர் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
உடனே தனது உடலில் தயாராக கட்டி வைத்திருந்த வெடிகுண்டை பென்னி வெடிக்க செய்துள்ளார். இதில் 2 பேரும் உடல் சிதறி பலியாகி உள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.