ஈஸ்டர் பண்டிகையின் போது பாகிஸ்தான், எகிப்து, நைஜீரியா, யேமன் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள்
23 Apr,2019
ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்களில் இதுவரை 290 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
ஈஸ்டர் பண்டிகையின் போது நடக்கும் முதல் தாக்குதல் இதுவல்ல. இதற்கு முன்பே, ஈஸ்டர் பண்டிகையை குறி வைத்து பல்வேறு நாடுகளில், அதாவது பாகிஸ்தான் முதல் யேமன் வரை தாக்குதல்கள் நடந்துள்ளன.
அவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
லாகூர்
படத்தின் காப்புரிமை Getty Images
லாகூரில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈஸ்டரின் போது நடந்த தாக்குதலில் எழுபதுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.
இந்த தாக்குதலுக்கு ஜமாத் உல் அக்ரர் அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலில் இறந்தவர்கள் கணிசமானவர்கள் இஸ்லாமியர்கள்.
எகிப்து
படத்தின் காப்புரிமை Reuters
எகிப்தில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பாக காப்டிக் தேவாலயத்தில் நடந்த தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதலில் 48 பேர் பலியானார்கள். இதனை அடுத்து தேவாலயத்தில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இரண்டு குண்டுதாரிகள் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. அதில் ஒருவர் பெயர் மஹமூத் ஹசன் முபாரக் அப்துல்லா.
2016 மார்ச் மாதம் கைரோவில் நடந்த தேவாலய தாக்குதலிலும் இவருக்கு தொடர்புள்ளதாக அப்போது அந்நாட்டு அரசு கூறியது.
நைஜீரியா
நைஜீரியாவில் 2012 ஆம் ஆண்டு கடுனா நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 38 பேர் பலியானார்கள்.
காரில் குண்டுகள் நிரப்பப்பட்டு இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பாக போகோ ஹராம் அமைப்பு குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த சமயத்தில் இஸ்லாம் கிறிஸ்தவ மோதல்கள் கடுனா பகுதியில் தொடர்ந்து நடந்துவந்தன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானார்கள்.
யேமன்
2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தெற்கு யேமனில் துப்பாக்கிதாரி சுட்டதில் கன்னியாஸ்திரிகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அங்கு மதர் தெரீசா ஏற்படுத்திய மிஷனில் ஊழியம் செய்தவர்கள்.
இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் அமைப்பு மீது இந்த தாக்குதலுக்காக குற்றஞ்சாட்டப்பட்டது.