காச நோய் குழந்தையின்மையை உருவாக்குமாஸ ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
26 Mar,2019
காச நோய் நுரையீரலை மட்டுமன்றி கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாயையும் பாதிப்பதால் குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படும் ஆபத்து இருக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் காச நோய் தினத்தையொட்டி (மார்ச் 24) ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்
.
காச நோய் என்பது மைக்கோபாக்டீரியம் என்னும் கிருமியால் உருவாகும் தொற்றுநோய். இது உலக அளவில் மிகப் பெரும் தொற்று நோயாகவும் பார்க்கப்படுகிறது. உலக அளவில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 4,400 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது அந்த ஆய்வு.
காச நோய், முதலில் நுரையீரலை பாதிக்கும். அடுத்தகட்டமாக கருப்பையை பாதிக்கிறது. அதுமட்டுமன்றி ஃபலோபியன் குழாயையும் பாதிக்கிறது இதனால் குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படும் ஆபத்து இருக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மைக்கோபாக்டீரியம் கருப்பையை பாதிக்கும்போது அது பிறப்புறுப்புக் காச நோயாக மாறுகிறது. இதனால் குழந்தை கருப்பையில் தங்குவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் கரு இறந்துவிடும். பல மருத்துவர்கள் கரு இறப்பதற்கான காரணத்தைக் கண்டறியும்போதுதான் அதன் பிரச்னை தெரிய வரும் என ஆய்வில் கூறியுள்ளனர்.
”ஆண்களைக் காட்டிலும் பல பெண்கள் இந்த பிறப்புறுப்புக் காச நோயால் பாதிக்கப்படுகின்றனர். பத்தில் இரண்டு பெண்கள் குழந்தை பெற்றெடுப்பதற்கான தன்மையை இழக்கின்றனர். சிலருக்கு இதனால் கருப்பைக் குழாய் மிகவும் அடர்த்தியாக மாறி கருப்பையில் கருவை உட்செலுத்த முடியாமல் பாதியிலேயே நின்று இயற்கையாகவே கருகலைப்பு ஏற்பட்டுவிடும்“ என ஷ்வேதா கோஸ்வாமி கூறியுள்ளார். இவர் நோய்டாவைச் சேர்ந்த ஜெய்பீ மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக இருக்கிறார்.
இந்த மைக்கோபாக்டீரியம், இரத்தத்தில் கலந்து மற்ற உறுப்புகளையும் தாக்குகிறதாம். குறிப்பாக இனப்பெருக்கத்தை நிகழ்த்தக் கூடிய உறுப்புகளான ஃபெலோபியன் குழாய், கருப்பை ஆகிய இடங்களை பாதிக்கிறது என ஆய்வில் கூறுகின்றனர்.”ஒருவேளை பெண்களுக்கு காசநோய் தாக்கக் கூடிய அறிகுறிகள் தெரிந்தால் , குறைந்த அளவில் ஃபெலோபியன் குழாயை பாதித்திருந்தால் ஆரம்பத்திலேயே அதை நீக்க வேண்டும். இல்லையெனில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவகையில் சிக்கல்களை ஏற்படுத்திவிடும். பின் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தன்மையை ஏற்படுத்திவிடும் “ என எச்சரிக்கிறார் கோஸ்வாமி.
இதைக் கண்டறிய சீரற்ற மாதவிடாய், அதிகப்படியான அடி வயிறு வலி, அதிகப்படியான இரத்தப்போக்கு, அதிக துர்நாற்றம், உடலுறவிற்குப் பின் இரத்தப்போக்கு போன்ற பிரச்னைகள் இருப்பதும் இதன் அறிகுறிகளாகும்.
2018-ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் 50 சதவீத இந்தியப் பெண்கள் பிறப்புறுப்பு காச நோயால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தது. அதுவும் 2011 ஆண்டு 19 சதவீதம் 2015 ஆண்டு 30 சதவீதம் என ஏறுமுகமாகவே இருந்துள்ளது என்பதையும் அந்த ஆய்வு குறிப்பிட்டிருந்தது. அதில் 75 சதவீதம் பிறப்புறுப்பு காச நோயால் குழந்தையின்மை பிரச்னை இருப்பதும், குழந்தையின்மைப் பிரச்னை கொண்ட 50-60 சதவீதப் பெண்களுக்கு பிறப்புறுப்புக் காசநோய் இருந்ததும் கண்டறியப்பட்டதாக அந்த ஆய்வு அதிர்ச்சித் தகவல் அளித்தது.
”பிறப்புறுப்பு காசநோய் என்பது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் தீர்க்கக் கூடிய நோயே. இருப்பினும் சமூகக் காரணங்களால் தனக்கு காச நோய் இருப்பதை வெளியில் சொல்வதை பல பெண்கள் தவிர்க்கின்றனர்” என ஷோபா குப்தா கூறுகிறார். இவர் டெல்லியைச் சேர்ந்த மதர்ஸ் லேப் ஐவிஎஃப் மையத்தில் மருத்துவ இயக்குநராக இருக்கிறார்.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு ’உலக காச நோய் அறிக்கை 2018’ என ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் பத்து மில்லியன் மக்களில் 27 சதவீதம் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும் அது 2017 ஆம் ஆண்டை விட அதிகம் என குறிப்பிட்டிருந்தது. உலக அளவில் 32 சதவீதம் பேர் காச நோயால் இறந்துள்ளனர். அதில் 27 சதவீதம் பேர் காச நோயுடன் ஹெச்.ஐ.வி தொற்றும் இருந்தது கண்டறியப்பட்டது.
”இன்று எப்பேர்பட்ட நோயானாலும் அதைக் கண்டறியும் கருவிகள் இருக்கின்றன. அதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவர்களை அணுக வேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு ஆரோக்கியமான வாழை வாழ வைக்க வேண்டியதும் அவசியம் “ என ராஜ்குமார் குறிப்பிடுகிறார். இவர் டெல்லியைச் சேர்ந்த இந்திய முதுகெலும்பு காயங்கள் மையத்தில் உள் மருத்துவ ஆலோசகராக இருக்கிறார்.