''முஸ்லிம்கள் பலதார மணம் புரிவது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி'' - எகிப்து இமாம்
05 Mar,2019
அல் - அசாரின் இமாம் ஷேக் அகமத் அல்- தயீப்
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணையோடு வாழும் வகையில் பலதார மணம் புரிவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என எகிப்தின் உயர் இஸ்லாமிய அமைப்பான அல்-அசாரின் இமாம் தெரிவித்துள்ளார்.
சன்னி இஸ்லாமியர்களின் உயர் தலைமையிலுள்ள ஷேக் அகமத் அல்-தயீப் இது குறித்து பேசுகையில், ''குரான் பற்றிய சரியான புரிதலின்மை காரணமாகவே பலதார மணம் புரியும் பழக்கம் வந்திருக்கிறது'' என்றார்.
தொலைக்காட்சியில் வார நிகழ்ச்சி ஒன்றில் அவர் இக்கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.
இமாமின் கருத்து பெரும் விவாதத்துக்குள்ளான நிலையில், அல்-அசார் தனது விளக்கத்தில், ''இமாம் பலதார மணத்துக்கு தடை கோரவில்லை'' என்கிறது.
ஒருவனுக்கு ஒருத்தி தான் விதி, பலதார மணம் என்பது விதிவிலக்கு என அவர் வலியுறுத்தினார்.
''சமூகத்தின் பாதியை பெண்களே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்கள் மீது கவனம் கொள்ளாமலிருப்பது ஒரு பாதத்தை மட்டும் வைத்துக்கொண்டு நடந்து செல்வது போன்றது'' என ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
இமாமின் கருத்துக்கு எகிப்தின் தேசிய பெண்கள் கவுன்சில் நேர்மறையான எதிர்வினையாற்றியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்லாமிய மதம் பெண்களுக்கு நீதியையும் குறிப்பிடத்தக்க உரிமைகளையும் பெற்றுத்தருகிறது என கவுன்சிலின் தலைவர் மாயா மோர்சி தெரிவித்துள்ளார்.