பிரபல போதை மருந்து கடத்தல் மன்னனின் காதல் கதை:
15 Feb,2019
100 பாதுகாப்பு வீரர்களுடன் சென்று காதலை தெரிவித்தார்
மெக்சிகோ நாட்டின் பிரபல போதை மருந்து கடத்தல் மன்னன் எல் சாப்போ என பரவலாக அறியப்படும் ஜோவாக் குஸ்மான் கடந்த 2007 ஆம் ஆண்டு அப்போதைய மெக்சிகோ அழகியான எம்மா கரோனல் என்பவரை தமது 4-வது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். தமது காதலை எம்மாவிடம் தெரிவிக்கும் போது எம்மாவின் வயது 17. அப்போது அவர் மெக்சிகோ அழகியாக பட்டம் பெற்ற நாள்.
துப்பாக்கி ஏந்திய 100 வீரர்களுடன் எம்மாவின் அறைக்கு சென்ற எல் சாப்போ, அவரிடம் தமது காதலை வெளிப்படுத்தியதுடன், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளார். சில மாதங்கள் கடந்த நிலையில், எம்மா தனது 18-வது பிறந்த நாள் அன்று 50 வயதான எல் சாப்போவின் 4-வது மனைவியானார். அப்போது முதல் 14 ஆண்டுகள் போலீசாருக்கு தண்ணி காட்டி, இறுதியில் 2016 ஆம் ஆண்டு எல் சாப்போ கைதான போதும் எம்மா தமது கணவருக்கு ஆதரவாகவே பேசியுள்ளார்.
தற்போது 29 வயதாகும் எம்மா தொடர்ந்து தமது கணவர் எல் சாப்போவுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொண்டு வருகிறார். எல் சாப்போவை உலகம் எவ்வாறு பார்க்கிறது என எனக்கு கவலை இல்லை, ஆனால் அவர் போன்ற ஒரு மனிதரை வாழ்நாளில் இதுவரை சந்தித்ததில்லை என எம்மா தெரிவித்துள்ளார். எல் சாப்போவின் பாதுகாப்பு வீரர்களில் முக்கியமானவர் எம்மாவின் தந்தை. இதனாலேயே எல் சாப்போ ஆசைப்பட்டதால் தனது மகளை திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதுமட்டுமின்றி மெக்சிகோவில் நடைபெற்ற அழகி போட்டிகளில் எம்மா வெற்றிபெற எல் சாப்போ லஞ்சம் அளித்தும் வந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு நிறைமாத கர்ப்பிணியான எம்மா அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு சென்று இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். எல் சாப்போவுக்கு எம்மா உள்ளிட்ட 4 மனைவிகளுக்கும் மொத்தமாக 19 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.