காதலர் தினம் எப்படி வந்தது தெரியுமா?...
காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் நாள் அனைவராலும் சந்தோஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே அந்த தினம் யாருடைய நினைவாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொண்டால், அந்த தினத்தின் உண்மையான அர்த்தம் புரியும் உங்களுக்கு..
நாம் இன்று கொண்டாடுவது போல், மகிழ்ச்சியான நாளாக அந்த நாள் இல்லை. ஆம். அது ஒரு காதல் ஜோடியின் பிரிவில் உருவான கதை.
வாலண்டைன் என்னும் பாதிரியார் கல்லால் அடித்துக் கொல்லபட்ட நாளைத்தான் நாம் காதலர் தினமாகக் கொண்டாடுகிறோம்.
கி.பி. 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் தான் அந்த நிகழ்வு நடைபெற்றது.
கொடூரமாக ஆட்சிபுரிந்து வந்த ரோமானியச் சக்ரவர்த்தி கிளாடி என்பவர் அவ்வப்போது வெளியிடும் முட்டாள்தனமான கட்டளைகளால் அவரைவிட்டு அவருடைய ராணுவ வீரர்கள் பிரிந்து போய்விட்டார்கள். புதிய ராணுவ வீரர்களையும் அவரால் படையில் சேர்க்க முடியவில்லை.
ஒரு நாள் தனது அந்தரங்கக் காதலியுடன் சல்லாபமாக இருந்தார். அப்போது ஏற்பட்ட சின்ன சண்டையால் எரிச்சலடைந்த கிளாடியின் மனதில் ஒரு முட்டாள்தனமான எண்ணம் உதித்தது.
திருமணமானவர்கள் தனது அன்பு மனைவியை விட்டுவிட்டு வரமுடியாமலும் திருமணமாகாதவர்கள் காதலியைப் பிரிய மனமில்லாமலும் இருக்கிறார்கள். அதனாலேயே ராணுவத்தில் சேர முன்வரவில்லை என்று நினைத்துக்கொண்டு, முட்டாள்தனமாக ஒரு கட்டளை விடுக்கிறார்.
இனி ரோமாபுரி நாட்டில் யாரும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். யாராவது இதை மீறினால் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ந்து மக்கள் சோகத்தில் மூழ்கியிருந்த சமயத்தில், அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று பொங்கிய வாலண்டைன் என்னும் பாதிரியார் அரசக் கட்டளையை மீறி பல ரகசியத் திருமணங்களை நடத்தி வைத்தார்.
இந்த செய்தி அரசனுக்கு எட்டிவிட, பாதிரியார் இருட்டுச்சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
அவ்வாறு அவர் சிறை வைக்கப்பட்ட காலத்தில் சிறைக்காவல் தலைவனின் கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியாருக்கும் இடையே காதல் என்னும் அன்பு மலரத் தொடங்கியது.
சிறையிலிருக்கும் வாலண்டைனை எப்படியாவது மீட்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியஸை வீட்டுச் சிறையில் அடைத்தான். தனக்கு மீண்டும் கண் வந்தது போல் உணர்ந்த அஸ்டோரியஸ் மீண்டும் கவலையில் ஆழ்ந்து போனாள்.
இதற்கிடையில், வாலண்டைனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அப்போது, தன்னுடைய காதலி அஸ்டோரியசுக்காக ஒரு காகித அட்டையை வரைந்து அதில் கவிதை ஒன்றை எழுதி அனுப்பிவிட்டு, மரண தண்டனையையை ஏற்றார் வாலண்டைன்.
இந்த நிகழ்வு நடந்து ஏறத்தாழ 200 வருடங்களுக்குப் பின், இந்த பிப்ரவரி 14 ஆம் தேதி போப்பாண்டவரால் வாலண்டைன் புனிதராக அறிவிக்கப்பட்டு, வாலண்டைன்ஸ் டே கொண்டாடப்பட்டது. இதுவே காதலர் தினம் உருவான கதை.