சந்தியாவைக் கொலை செய்வதற்கு முன்
11 Feb,2019
சினிமா மோகத்தில் சென்னை வந்த சந்தியாவை வீட்டுக்கு வரவழைத்த சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் அவரைக் கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்தவதற்கு முன் பாலகிருஷ்ணனுக்கு ஒரு போன் அழைப்பு வந்ததாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கொலை செய்யப்பட்ட சந்தியா
சென்னை ஜாபர்கான், பாரிநகர், காந்தி தெருவில் குடியிருந்தவர் பாலகிருஷ்ணன். `காதல் இலவசம்’ என்ற சினிமா படத்தை இயக்கி, சந்தியா கிரியேஷனில் வெளியிட்டார்.
ஆனால், படம் எதிர்பார்த்தஅளவுக்கு ஓடவில்லை. இதனால், கடும் நிதிச்சுமையில் பாலகிருஷ்ணன் தவித்தார். இவரின் மனைவி, நாகர்கோவிலைச் சேர்ந்த சந்தியா.
பிளஸ் 2 படிக்கும் மகனும் 5ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சந்தியாவின் சில நடவடிக்கைகள் பாலகிருஷ்ணனுக்குப் பிடிக்கவில்லை.
இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் சந்தியா. இதனால் கடும் மனவேதனையில் இருந்தார் பாலகிருஷ்ணன்.
இந்தச் சமயத்தில்தான் பாலகிருஷ்ணனுக்கு சந்தியா குறித்த அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. சந்தியா, சென்னையில் உள்ள மகளிர்விடுதியில் தங்கியிருந்து சினிமா வாய்ப்புகளைத் தேடிவருவதாக பாலகிருஷ்ணனிடம் அவரது சினிமா நண்பர்கள் கூறினர்.
இதனால் சந்தியாவிடம் பேசினார் பாலகிருஷ்ணன். குழந்தைகளுக்காக நாம் இனிமேல் சேர்ந்து வாழ்வோம் என்று பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.
அதற்கு முதலில் சந்தியா சம்மதித்துள்ளார். இருவரும் ஜனவரி மாதத்தில் ஜாபர்கான்பேட்டை வீட்டில் ஒன்றாகத் தங்கியிருந்தனர்.
அதன்பிறகு சந்தியாவுக்கு வந்த போன் அழைப்பால் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு சந்தியா தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்றிய பாலகிருஷ்ணன், அதன்பிறகுதான் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.
கொலை செய்யப்பட்டசந்தியா
இதுகுறித்து பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார் கூறுகையில், “சந்தியாவின் கணவரிடம் விசாரணை நடத்தியபோது அவர், சில தகவல்களை எங்களிடம் கூறினார்.
தற்கொலைக்கு முயன்றபோது சந்தியாவைக் காப்பாற்றிய நீங்கள் (பாலகிருஷ்ணன்) அதன்பிறகு அவரை கொடூரமாகக் கொலை செய்யும் மனநிலைக்கு ஏன் தள்ளப்பட்டீர்கள் என்று கேட்டோம்.
அதற்கு அவர், சந்தியா தொடர்பாக எனக்கு வந்த போன் அழைப்பே காரணம் என்று கூறினார். அதுவும் ரத்த சொந்தத்திலிருந்துதான் அவருக்கு அந்த போன் அழைப்பு வந்துள்ளது.
போனில் பேசியவர் கூறிய தகவல்களைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார் பாலகிருஷ்ணன். இதனால் மனவேதனையில் இருந்த அவர், தனது நண்பர் ஒருவரிடம் பேசியுள்ளார்.
அப்போது, சினிமா எடுக்கப்போவதாக ஒரு க்ரைம் கதையைக் கூறி இருக்கிறார். பிறகு அந்தக் கதையில் கொலையில் இருந்து தப்பிக்கும் காட்சித் தொடர்பாக விவாதித்துள்ளார்.
இதையடுத்து கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டபோது, சந்தியா, `உங்களைத்தான் நான் விவாகரத்து செய்யப்போகிறேனே. அதன்பிறகு என்னுடைய சுதந்திரத்தில் தலையீட நீங்கள் யார்’ என்று கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் சந்தியாவை ஓங்கி அறைந்துள்ளார். அதில் மயங்கிய சந்தியாவை ஆத்திரத்தில் சுத்தியலால் பின்தலையில் அடித்துள்ளார்.
படுக்கையறையில் ரத்தம் சிதறியது. உயிருக்கு சந்தியா போராடியுள்ளார். அதன்பிறகு அவர் இறந்தபிறகு அன்றைய தினம் முழுவதும் சந்தியாவின் சடலத்துடனே தூங்கியிருக்கிறார் பாலகிருஷ்ணன்.
சந்தியாவின் உடலை அகற்றுவது குறித்து யோசித்துள்ளார். சைதாப்பேட்டைக்குச் சென்ற அவர், பட்டன் கத்தி ஒன்றை வாங்கியுள்ளார். அதை வைத்து சந்தியாவின் உடலைக் கூறுபோட்டுள்ளார்.
இரண்டு கால்களையும் வலது கையையும் துண்டாக வெட்டியெடுத்த அவர், 25 கிலோ அரிசி பையில் வைத்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார்.
இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதியைத் தூண்டாக வெட்டியெடுத்து அதை அடையாற்றின் கரையோரத்தில் வீசியுள்ளார். தலையைத் துண்டாக வெட்டிய அவர், இடது கையுடன் கூடிய இடுப்புக்கு மேல் பகுதியை சேர்த்து அரிசி பையில் வைத்து குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். அந்த உடல்பாகங்களைத்தான் பெருங்குடி குப்பைக் கிடங்கில் தேடிவருகிறோம்.
நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணனிடம் விசாரித்தபோது இன்னொரு முக்கிய தகவல் ஒன்றை கூறினார். அதாவது, தூத்துக்குடி டூவிபுரத்தில் மனைவியுடன் குடியிருந்த சமயங்களில் சந்தியா, எப்படியிருந்தார் என்ற விவரங்களையும் குறிப்பிட்டார்.
தேர்தலில் சந்தியா போட்டியிட்ட சமயத்தில் அவருக்காக ஓட்டுகேட்டு அதிகமான இளைஞர்கள் வந்தனர். அவர்களுடன் சந்தியா சகஜமாகப் பேசிப் பழகினார். அதை நான் தவறாகக் கருதவில்லை.
ஆனால் தேர்தல் முடிந்தபிறகும் சந்தியா குடும்பத்தைக் கவனிக்கவில்லை. இதனால்தான் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
சந்தியா கொலை செய்யப்படுவதற்கு முன்கூட அவளை மன்னித்துவிடலாம் என்ற மனநிலையில்தான் இருந்தேன். ஆனால், அவள் எனக்குச் செய்த துரோகத்தை என்னால் மறக்கவோ மன்னிக்கவோ முடியவில்லை.
மேலும் சந்தியாவைக் கொலை செய்துவிட்டு துண்டு துண்டாக அவரின் உடல்பாகங்களை வீசிவிட்டால் தப்பிவிடலாம் என்று கருதியுள்ளார்.
ஆனால், எங்களின் புலன் விசாரணையில் பாலகிருஷ்ணன் சிக்கிக் கொண்டார். கொலை நடந்த இடத்திலிருந்து எங்களுக்குக் கிடைத்த தடயங்கள், சந்தியாவின் உடல்பாகங்களிலிருந்து எடுக்கப்படவுள்ள டி.என்.ஏ ரிப்போர்ட் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளோம்.
சந்தியாவின் வலது கை, இரண்டு கால்கள் குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பிறகும் ஒவ்வொரு நாளும் பாலகிருஷ்ணன் செய்திகளைப் பார்த்துள்ளார்.
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கும் சென்ற பாலகிருஷ்ணன், தன்னுடைய அனுபவத்தை வைத்து புதிய சினிமா கதை ஒன்றை எழுத ஆசைப்பட்டுள்ளார்” என்றனர்.