மக்கள் இறைச்சி உண்வதை குறைத்தோ அல்லது முற்றிலும் தவிர்ப்பது அதிகமாகி வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
உடல் நலத்திற்காக, அல்லது இயற்கையை பாதுகாக்க அல்லது விலங்கினங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இறைச்சியை தவிர்ப்பவர்களாக இருக்கிறார்கள்.
மேலும், பால் பொருட்களைக் கூடத் தவிர்க்கும் வீகனாகவும் பலர் மாறியிருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்ன?
அதிகரிக்கும் வருவாய்
உலகளவில் இறைச்சி உண்பது கடந்த 50 ஆண்டுகளில் வேகமாக உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
1960களில் இருந்ததைவிட இறைச்சி உற்பத்தி, உலக அளவில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 70 மில்லியன் டன்களில் இருந்து, 2017ல் 330 மில்லியன் டன்களாக இறைச்சி உற்பத்தி அதிகரித்திருக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம், மக்கள்தொகை உயர்ந்திருக்கிறது. சொல்லப்போனால் இருமடங்கு உயர்ந்துள்ளது. 1960களில் சுமார் மூன்று பில்லியனாக இருந்த மக்கள்தொகை, இன்று கிட்டத்தட்ட 7.6 பில்லியனாக உள்ளது.
இது ஒரு காரணமாக இருந்தாலும், இது மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது.
மற்றொரு முக்கிய காரணம் வருவாய் உயர்வு. உலகம் முழுவதிலும் மக்களின் வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டில், உலக சராசரி வருமானம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
அதிக பணக்காரராக இருப்பவர்கள், அதிக இறைச்சி உண்கிறார்கள்.
உலகில் அதிக மக்கள்தொகை இருக்கிறது. அதில் பெரும்பாலான மக்களால் இறைச்சியை வாங்க முடிகிறது.
யார் அதிக இறைச்சி எடுத்துக் கொள்கிறார்கள்?
பணம் படைத்தவர்கள், இறைச்சி உண்கிறார்கள் என்ற நிலையை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது.
வருடாந்திர இறைச்சி உண்ணுபவர்களின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன. இதைத்தவிர, நியூசிலாந்து மற்றும் அர்ஜெண்டினா நாடுகளில் சராசரியாக ஒரு நபர், ஆண்டுக்கு 100 கிலோவுக்கு மேல் இறைச்சி எடுத்துக் கொள்கிறார். இது சுமார் 50 சிக்கன்களுக்கு சமமாகும்.
மேலும், மேற்கிலும் அதிகளவிலான இறைச்சி எடுத்துக் கொள்வதை காண முடிகிறது. மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் பெரும்பாலான நாடுகளில் நபருக்கு, சுமார் 80 - 90 கிலோ இறைச்சி எடுத்துக் கொள்கிறார்கள்.
மறுபக்கத்தில், உலகின் ஏழ்மையான நாடுகளில் மக்கள், மிகக் குறைந்தளவிலான இறைச்சியையே உட்கொள்கிறார்கள்.
சராசரியாக எத்தியோப்பியா நாட்டு நபர் ஒருவர் ஏழு கிலோ இறைச்சியும், ருவாண்டாவில் எட்டு கிலோவும் மற்றும் நைஜீரியாவில் ஒன்பது கிலோ இறைச்சியும் எடுத்துக் கொள்கின்றனர். இது சராசரியாக ஐரோப்பியர் ஒருவர் எடுத்துக் கொள்ளும் இறைச்சி அளவைவிட 10 மடங்கு குறைந்ததாகும்.
தனிநபர் வருமானம் குறைவாக இருக்கும் நாடுகளில், இறைச்சி என்பது ஆடம்பர பொருளாகவே உள்ளது.
நடுத்தர வருமானமுள்ள நாடுகளின் இறைச்சி தேவை
பணக்கார நாடுகள் அதிக இறைச்சி உட்கொள்வதும், குறைந்த வருமானமுள்ள நாடுகள் குறைந்தளவு இறைச்சி உட்கொள்வதும் நமக்கு தெளிவாக தெரிகிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலை மாறவில்லை. ஆனால், நடுத்தர மற்றும் வளரும் நாடுகளில் என்ன நடக்கிறது?
சீனா, பிரேசில் போன்று வேகமாக வளர்ந்துவரும் நாடுகள் கடந்த சில தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை கண்டதோடு, இறைச்சி உட்கொள்ளுபவர்களின் எண்ணிக்கையும் பெரிதளவில் உயர்ந்துள்ளது.
1960களில் சீனாவில் சராசரியாக ஒரு நபர் ஆண்டுக்கு ஐந்து கிலோவுக்கும் குறைவான இறைச்சியை எடுத்துக்கொண்டனர். 1980களின் இறுதியில் அது 20 கிலோவாக உயர்ந்தது. ஆனால், கடந்த சில தசாப்தங்களில் இந்தளவு மூன்று மடங்காக உயர்ந்து, தற்போது 60 கிலோவாக உள்ளது.
இதேதான் பிரேசிலிலும். இதில் இந்தியா மட்டும் விதிவிலக்காக உள்ளன.
நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் இறைச்சி உட்கொள்வது மும்மடங்கு பெருகியுள்ள நிலையில், இந்தியாவில் அப்படியில்லை.
பெரும்பாலான இந்தியர்கள் சைவ உணவு உண்பவர்கள் என்ற தவறான பார்வை உள்ளது. தேசிய அளவிலான கணக்கெடுப்புப் படி, மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள், ஏதேனும் ஒரு இறைச்சி வகையை எடுத்துக்கொள்கின்றனர்.
எனினும், இந்தியாவில் இறைச்சி எடுத்துக் கொள்ளும் அளவு குறைவாகவே இருக்கிறது. ஒரு நபருக்கு சராசரியாக நான்கு கிலோவுக்கும் குறைவான அளவிலே இங்கு இறைச்சி உட்கொள்ளப்படுகிறது. உலகிலேயே இதுதான் குறைவான அளவு. கலாசார காரணங்களால் இப்படி இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. மத காரணங்களுக்காக சில விதமான இறைச்சிகள் இங்கு தவிர்க்கப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளில் இறைச்சி உட்கொள்வது குறைந்து வருகிறதா?
ஐரோப்பியா மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் உள்ள பலரும், இறைச்சி எடுத்துக் கொள்வதை தவிர்க்க முயற்சித்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், அது உண்மையா?
இல்லை, என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளில் இறைச்சி எடுத்துக்கொள்வது உயர்ந்துள்ளதாக அமெரிக்க விவசாயத்துறையின் சமீபத்திய தரவுகள் பரிந்துரைக்கின்றன.
இதேபோன்ற நிலைதான் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் இறைச்சி எடுத்துக் கொள்வது நிலையாகவோ அல்லது சற்று உயர்ந்தோ இருக்க, எந்த விதமான இறைச்சியை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இறைச்சியின் தாக்கங்கள்
சில சூழல்களில், இறைச்சி உண்ணுவது நல்லதே. சரியான அளவிலான இறைச்சி மற்றும் பால் பொருட்களை எடுத்துக்கொள்வது, மக்களின் உடல்நலத்தை மேம்படுத்தலாம். குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், பல பொருட்கள் கிடைக்காமல் இருக்கும் சூழலில், இறைச்சியை எடுத்துக் கொள்வது உடல்நலத்திற்கு நல்லது தரலாம்.
ஆனால், பல நாடுகளில் அதிகப்படியான இறைச்சி எடுத்துக் கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகளவில் எடுத்துக் கொண்டால், இதயநோய், பக்கவாதம் மற்றும் சில வகையான புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிக்கனுக்கு பதிலாக மாட்டு இறைச்சி அல்லது பன்றி இறைச்சியை எடுத்துக்கொள்ளலாம். இது சுற்றுச்சூழலுக்கும் நல்லது.
எதிர்காலத்தில் இறைச்சி உட்கொள்வது, நிலையாக மற்றும் சீராக இருக்க வேண்டும் என்றால் அதற்கு பல மாற்றங்கள் தேவைப்படுகிறது.
அப்படி என்றால், எந்த வகையான இறைச்சியை எடுத்துக் கொள்கிறோம் என்று மட்டுமல்லாமல் எவ்வளவு எடுத்துக் கொள்கிறோம் என்பதையும் பார்க்க வேண்டும்.
அதற்கு இறைச்சி மீண்டும் ஓர் ஆடம்பர உணவாக மாறவேண்டும்.