குப்பை கிடங்கில் உடல் பாகங்கள்: துண்டுதுண்டாக கிடந்த பெண்அடையாளம் தெரிந்தது -கணவர் கைது
06 Feb,2019
பெருங்குடி குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது. கணவனே கொலை செய்து உடலை துண்டு துண்டாக்கி வீசிய கொடூரம்.
,
சென்னையை அடுத்த துரைப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் குப்பைக் கிடங்கு உள்ளது. இந்த குப்பைக் கிடங்கிற்கு கோடம்பாக்கம் பவர் அவுஸ் பகுதியில் இருந்து குப்பைகள் லாரியில் கொண்டு வந்து கொட்டப்பட்டது.
அப்போது கொட்டப்பட்ட குப்பையில், கை மற்றும் 2 கால்கள் இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.
பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று நடத்திய சோதனையில் அது ஒரு பெண்ணின் கை மற்றும் கால்கள் என கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், வலது கையில் டிராகன் படமும் வலது கை தோள் பட்டையில் சிவன், பார்வதி உருவமும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. காலில் பெண்கள் அணியும் மெட்டி போட்டதற்கான அடையாளம் இருந்தது.
இதையடுத்து கை, கால்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண்ணை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கை கால்கள் எந்தப்பெண்ணுடையது என்பதை கண்டறிந்துள்ளனர்.
வாரமாக போலீசார் விசாரித்து வந்ததில் வெட்டப்பட்ட பெண் சந்தியா என தெரிய வந்தது. சந்தியா கொலை தொடர்பாக அவரது கணவர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய பாலகிருஷ்ணன் திரைப்பட துணை இயக்குனர் ஆவார். கை, கால்கள் மட்டுமே கிடைத்த நிலையில் மற்ற பாகங்கள் எங்கே என பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடைபெறுகிறது.
விசாரணையில், கடந்த 2010-ம் ஆண்டு காதல் இலவசம் என்ற படத்தை பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். மேலும் மனைவி சந்தியா பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அந்த படத்தை பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
இந்த படம் ஓடாத காரணத்தினால் வாய்ப்புகள் இல்லாமல், நண்பர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சமயத்தில் தமது மனைவி வேறு ஒரு நபருடன் பழகுவதை அறிந்த பாலகிருஷ்ணன், சென்னை ஜாபர்கான்பேட்டையில் வைத்து சந்தியாவை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் சந்தியாவை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை வீசி எறிந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின் பேரில் ஜாபர்கான்பேட்டை பகுதியில் காசி திரையரங்கம் அருகே சந்தியாவின் மற்ற உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.