ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை மிரட்டி கற்பழிக்க முயற்சி!
07 Jan,2019
தரமணி பறக்கும் ரெயில் நிலையத்தில் காதலனுடன் சென்ற இளம்பெண்ணை மிரட்டி கற்பழிக்க முயன்ற ரெயில்வே ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தரமணி பறக்கும் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 10 மணி அளவில் இளம்பெண் ஒருவர் வாலிபருடன் அமர்ந்திருந்தார். காதலர்களான இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது 3 பேர் அங்கு வந்து மிரட்டினர். உங்கள் இருவர் மீதும் சந்தேகமாக உள்ளது. இந்த நேரத்தில் இங்கு ஏன் ஜோடியாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இதற்காக இருவர் மீதும் வழக்கு போடவேண்டி இருக்கும்.
அதுபோன்று செய்யாமல் இருக்க வேண்டுமானால் ரூ.5 ஆயிரம் பணம் தரவேண்டும் என்று மிரட்டினர். இளம்பெண்ணுடன் இருந்த வாலிபரை மிரட்டி வெளியே விரட்டி விட்டனர்.
பின்னர் இளம்பெண்ணை மட்டும் முதல் மாடிக்கு வா, விசாரிக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றனர். அங்கு சென்றபின்னர் 3 பேரும் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து தவறாக நடந்தனர். செக்ஸ் தொல்லை கொடுத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சல் போட்டார். இருப்பினும் 3 பேரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக அவரை கற்பழிக்க முயற்சி செய்தனர். பின்னர் ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பி வந்த இளம்பெண் திருவான்மியூர் ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் எழும்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது. அவர் அளித்த தகவலின் பேரில் ரெயில்வே ஊழியர்கள் 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
தரமணி ரெயில் நிலையத்தில் லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வரும் லூக்காஸ், டிக்கெட் கவுண்டர் ஊழியர் லோகேஸ்வரன், மற்றும் ஸ்ரீராம் ஆகிய 3 பேரும் தான் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது 354 ஐ.பி.சி. (செக்ஸ் தொல்லை கொடுத்தல்),392 (வழிப்பறி), 506(1) (மிரட்டல்) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டமும் பாய்ந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் வெளியூரில் இருந்து வந்து சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். சென்னை மயிலாப்பூரில் தனியார் விடுதியில் அவர் தங்கி உள்ளார்.
இந்த நிலையில்தான் தனது காதலனுடன் வெளியில் சென்றுவிட்டு திரும்பிய அவர் துரதிருஷ்டவசமாக ரெயில்வே ஊழியர்களிடம் சிக்கி பாலியல் தொல்லையை அனுபவித்துள்ளார்.
பறக்கும் ரெயில் நிலையங்களில் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னர் இதே போன்று இளம்பெண் ஒருவரும் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி உள்ளார். கொலை ஒன்றும் நடந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் மின்சார ரெயிலில் பாலியல் தொல்லைக்கு உள்ளான இளம்பெண்ணை போலீஸ்காரர் ஒருவர் காப்பாற்றிய சம்பவமும் நடந்தது.
தரமணி சம்பவத்தை அடுத்து இரவு நேரங்களில் ரெயில் நிலையங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ச்சியாக செயல்படுத்த வேண்டும். பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு எப்போதும் உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இரவு நேரத்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ரெயில்வே ஊழியர்களே இளம்பெண்ணை மிரட்டி கற்பழிக்க முயன்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கைதான ரெயில் வே ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது.
இதுபோன்று மேலும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அந்நடவடிக்கை இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.