நள்ளிரவில் சிசிடிவியை திருப்பிய இளைஞர்கள்.. நேரில் அழைத்து இனிப்பு வழங்கிய கமிஷ்னர்!
01 Jan,2019
சென்னை போன்ற பெருநகரங்களில் நாளுக்கு நாள் பகல் இரவு பாராமல் குற்றங்கள் நடைபெறுவது என்பது இருந்து வருகிறது.
எனவே குற்றவாளிகள் பிடிபட வேண்டும் என்கிற நோக்கில்தான் ஆங்காங்கே குற்றங்களை கண்காணிக்க சிசிடிவி பொருத்தப்படுவது கட்டாயம் என்று போலீசார் வலியுறுத்துகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னாள் அவ்வாறு குற்றங்களை கண்காணிப்பதற்காக வைக்கப்பட்டு சிசிடிவி-செட்டப்பையே சிலர் திருடிச் சென்ற சம்பவங்கள் கூட நடந்துள்ளன.
இந்நிலையில் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் கடந்தவாரம் நள்ளிரவு நேரத்தில், தெருவில் போலீஸாரின் கண்காணிப்புக்கு உட்பட்ட சிசிடிவி கேமராவை இளைஞர்கள் சிலர் திருப்பி வைத்து மீண்டும் பழையபடி வைத்துள்ளனர்.
இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் அறிந்த போலீசார் அந்த இளைஞர்களை கண்டுபிடித்து விசாரித்துள்ளனர்.
அதற்கு அந்த இளைஞர்கள் நடுஇரவில் பைக் சாவியை தொலைத்துவிட்டு பைக்கை நகர்த்திக்கொண்டு வந்தபோது பைக்கை நிறுத்திவைத்துவிட்டு, அந்த பைக் காணாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் சிசிடிவியை பைக்குக்கு நேராக திருப்பி வைத்துவிட்டு சாவியை தேடச் சென்றுள்ளனர்.
ஆனால் மீண்டும் பயம் வந்ததானல் சிசிடிவியை பழையபடி திருப்பி வைத்துள்ளனர்.
அதற்குள் குறிப்பிட்ட சில செய்திகளில் இந்த தகவல் தவறாக வெளிவந்துவிட்டது.
இதனால் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அந்த 4 இளைஞர்களை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து அறிவுரை கூறியதோடு, அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை பறைசாற்றும் வகையில் அவர்களுக்கு இனிப்பும் வழங்கினார்.