திரும்பிச் சென்றது - ஒரு மரணம்
27 Dec,2018
இருள் கலந்த சாலையில்
ஒரு சிறு வளைவில்
எனக்கான மரணம்
இன்று
காத்திருந்தது
ஒரு கணப் பொழுதில்
தீர்மானம் மாற்றி
இன்னொரு நாளை
குறித்து விட்டு
திரும்பிச் சென்றது
பனியில் பெய்த மழையில்
வீதியின் ஓரத்தில்
மரணம் காத்திருந்ததையும்
என்னை பார்த்து புன்னகைத்ததையும்
பின் மனம் மாறி
திரும்பிச் சென்றதையும்
நானும் பார்த்திருந்தேன்
தூரத்தில் ஒலி எழுப்பும்
வாகனம் ஒன்றில் அது
ஏறி சென்றதையும்
ஏறிச் செல்ல முன்
தலை திருப்பி
மீண்டும் என்னை பார்த்ததையும்
நான் கண்டிருந்தேன்
எல்லாக் காலங்களிலும்
ஏதோ ஒரு புள்ளியில்
நானும் அதுவும் அடிக்கடி
சந்திக்க முயல்வதும்
பின்
சந்திக்காது பிரிவதும்
அதன் பின் இன்னொரு
சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக
வாழ்வு நீள்கின்றது