அடுத்து உருவாகவுள்ள புயலுக்கு மொக்கா (Cyclone Mocha) என்று பெயர் வைக்க உள்ளார்கள். ஏமன் நாட்டு மொழியில் இந்த பெயர் அழைக்கப்படவுள்ளது. இதுபற்றிய சுவாரசிய தகவல்களைப் பார்க்கலாம்.
வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு இந்த பகுதியில் அமைந்துள்ள இந்தியா, வங்கதேசம், ஏமன், கத்தார் உள்பட 13 நாடுகளின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. இந்த ஒவ்வொரு நாடுகளும் ஆண்டுக்கு 13 பெயர்களை பரிந்துரைக்கும். அந்த வகையில் ஆண்டுக்கு 169 பெயர்கள் புயல்களுக்கு சூட்டுவதற்காக பட்டியலிடப்பட்டிருக்கும்.
அந்த வகையில் வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய நாடுகள் ஆங்கில எழுத்துக்களின் அடிப்படையில் இவ்வாறு அட்டவணைப்படுத்தப்பட்டு உள்ளன.
தற்போது உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களை மிரட்டி வருகிறது. இந்தப் பெயர் ஐக்கிய அரபு அமீரக நாடு பரிந்துரைத்திருக்கிறது. அந்நாட்டு மொழியில் மாண்டஸ் என்பதற்கு, புதையல் பெட்டி என்று பொருள்.
அடுத்து உருவாகும் புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்துள்ள ‘மொக்கா’ (mocha)என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. ஏமனின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரத்திற்கு மொக்கா என்று பெயர்.
இதற்கு பின்னர் வரும் புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்துள்ள பிபர்ஜார் என்று பெயர் சூட்டப்படவுள்ளது. இதற்கு வங்க மொழியில் பேரழிவு என்று அர்த்தமாம்.
இதற்கிடையே, வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1.சென்னை 2. செங்கல்பட்டு 3. விழுப்புரம் 4.கடலூர் 5. திருவள்ளூர் 6. காஞ்சிபுரம் 7. வேலூர் 8. ராணிப்பேட்டை 9.தர்மபுரி 10. கிருஷ்ணகிரி 11. கள்ளக்குறிச்சி 12. நீலகிரி 13. திருவண்ணாமலை 14. சேலம் 15. திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது வரை நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.