தொலைவில் பேராபத்து - என்ன செய்யப்போகிறது இந்தியா.!
11 Dec,2022
அண்மையில் இந்தோனேசியாவில் இடம்பெற்ற ஜீ - 20 மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் கனேடிய அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவும் பகிரங்கமாக முரன்பட்டுக்கொண்ட காட்சி உலக ஊடகப் பரப்புக்களிலும், சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
கனடாவில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் வெற்றியை மாற்றும் வகையிலான சதி நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டிருந்ததாக கனடாவில் வெளியாகியிருந்த குற்றச்சாட்டுக்களே இந்த முரண்பாடுகளுக்கு காரணம்.
அது மாத்திரமல்ல, கனடா தேசத்தில் சீனா இரகசியமாக பல சீனக் காவல்நிலையங்களை இயக்கி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதற்கான ஆதாரங்களையும் கனடாவின் புலனாய்வு அமைப்பு கனேடிய அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.
கனடா என்பது சீனாவில் இருந்து கிட்டத்தட்ட 9400 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு நாடு. சீனாவுடன் கனடாவுக்கு எந்தவிதமான எல்லைப் பிரச்சினையோ, பொருளாதாரப் பிரச்சினையோ, வாய்க்கால் - வரம்புச் சண்டைகளோ கிடையாது.
அப்படியிருந்தும் கனடாவின் அரசியலிலும், கனடாவின் சட்ட ஒழுங்கிலும் சீனா நேரடியாகத் தலையிட்டு சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றதென்றால், சீனாவுடன் ஏராளமான எல்லைத் தகராறுகளையும், எண்ணிலடங்காத வரலாற்று முரண்பாடுகளையும் தனதாகக்கொண்டுள்ள இந்திவை விட்டுவைக்குமா?
அதுவும் இந்தியாவின் ஒரு முழு மாநிலத்தையே தன்னுடையது என்று உரிமைகொண்டாடி வருகின்ற சீனா, இந்தியாவுடன் கிட்டத்தட்ட 3500 மி.மீ. நீளமான எல்லையை கொண்டுள்ளதும், நாளாந்தம் ஏதோ ஒரு எல்லையில் இந்தியாவுடன் நேருக்கு நேராக மோதி வருகின்றதுமான சீனா எந்த எல்லைக்கும் சென்று இந்தியாவை சிதைப்பதற்கான சதிகளைச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
என்ன செய்யப்போகிறது இந்தியா
1962ஆம் ஆண்டு இந்தியாவுடன் நடைபெற்ற யுத்தத்தில் இந்தியாவுக்குச் சொந்தமான 33 ஆயிரம் சதுரக் கி.மீ. நிலப்பரப்பை கையகப்படுத்தி வைத்திருக்கும் சீனா, அந்த நிலப்பரப்பை தக்கவைப்பதற்காகவென்று தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டுக்கொண்டியிருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
அப்படியானால் இந்தியாவைக் குறிவைத்து சீனா எப்படியான சதிகளைச் செய்துகொண்டிருக்கின்றது? தனக்கெதிராக சீனா மேற்கொண்டுவருகின்ற சதிகளை இந்தியா எப்படி எதிர்கொள்கின்றது? எப்படிக் கையாளுகின்றது.? எப்படி முறியடிக்கின்றது? இந்தியா மாத்திரமல்ல ஜனநாயகவாதிகள் அனைவரும் மிக மிகக் கவனமாக ஆராயவேண்டிய முக்கியமான ஒரு விடயம் இது.