-
சென்னை: “முன்கூட்டியே திட்டமிட்டால் எந்த வகையான பேரிடரையும் எதிர்கொள்ள முடியும் என்று இந்த அரசு செய்து காட்டியுள்ளது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மாண்டஸ் புயலைத் தொடர்ந்து சென்னை, காசிமேட்டில் உள்ள மீனவ பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.10) நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, "தென்காசி, மதுரையில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று சென்னை திரும்பினேன். நேற்று இரவோடு இரவாக சென்னை அவரச கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்தேன்.
இதனைத் தொடர்ந்து காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தினேன். இதனைத் தொடர்ந்து விடிய விடிய மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து தொடர்ந்து கேட்டு அறிந்து கொண்டு இருந்தேன். குறிப்பாக, மாமல்லபுரத்தில் புயல் கரையை கடக்கிறது என்பதால், அந்த மாவட்டத்தின் ஆட்சியரிடம் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை நிலைமையை கேட்டு அறிந்தேன்.
இன்று காலை தென் சென்னையில் பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டு தற்போது வட சென்னை பகுதியில் உள்ள காசிமேடு பகுதியில் பாதிப்புகளை ஆய்வு செய்து உள்ளேன். மிகப் பெரிய மாண்டஸ் புயல் பாதிப்பில் இருந்து தமிழகம், குறிப்பாக சென்னை மீண்டுள்ளது என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு காரணமாக மிகப் பெரிய சேதம் இல்லாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். மரங்களை அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரநிதிகள், மின்சார வாரியம், காவல் துறை, தூய்மைப் பணியாளர்கள் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். புயலை எதிர்கொள்ள அரசு முன்கூட்டி எல்லா நடவடிக்கை எடுத்தது. சென்னையில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெரிய அளவில் மழைப் பொழிவு இருந்தும், பெரிய சேதம் ஏற்படாமல் அரசு தடுத்துள்ளது. இதுவரை 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 198 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மற்ற சேதங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
சென்னையில் 25 ஆயிரம் ஊழியர்கள் களத்தில் உள்ளனர். 900 மேட்டார்களில் 300 மேட்டார்கள் மட்டுமே இயங்கி கொண்டுள்ளது. எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை.600 இடங்களில் மின் இணைப்பு நிறுத்தப்பட்டது. இதில் 300 இடங்களில் சீர் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள இடங்களில் மாலைக்குள் சீர் செய்யப்படும்.
சேதங்கள் கணக்கீடு செய்யப்பட்டு, விரைவில் உரிய நிவாரணம் வழங்கப்படும். முன்கூட்டியே திட்டமிட்டால் எந்த வகையான பேரிடர்களையும் எதிர்கொள்ள முடியும் என்று இந்த அரசு காட்டியுள்ளது. தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி கோரப்படும். தேவைப்பட்டால் மற்ற மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யப்படும். புயல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள், மீட்புப் பணிகளில் மக்கள் திருப்தியாக உள்ளனர்" இவ்வாறு முதல்வர் கூறினார்.