விடுதலையான 14 இந்திய மீனவர்கள் சென்னையை சென்றடைந்தனர்
06 Dec,2022
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று சென்னையை சென்றடைந்தனர்.
அவர்களை, மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி தமிழகத்தின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 14 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட மீனவர்களை உடனே மீட்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து, மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 14 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதையடுத்து, அவர்களை இந்தியாவுக்கு அழைத்துச்செல்ல தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. அதன்படி, அவர்கள் இலங்கையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் இன்று (டிச.6ம் திகதி ) அதிகாலை 4.15 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
அவர்களை, தமிழக அரசின் சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அத்துடன், தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த 14 மீனவர்களில், 10 மீனவர்கள் காரைக்கால் பகுதியையும், 3 மீனவர்கள் புதுக்கோட்டை பகுதியையும், ஒரு மீனவர் நாகப்பட்டினம் பகுதியையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.