உள்நாட்டு முனையம், சர்வதேச முனையம் இரண்டுக்குமே ஒரே டோக்கன் தான். அதன் பின்பு அவர்கள் கிழக்கு, மேற்கு பகுதிகளில் பிரிந்து நிறுத்திக் கொள்ள வேண்டும். வாகனங்கள் உள்ளே நுழையும்போது நேரத்தை குறிப்பிட்டு கொடுக்கும் டோக்கனை வாகன ஓட்டிகள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆலந்தூர்: சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் நவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கார் பார்க்கிங் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த கார் பார்க்கிங்கில் 2,150 கார்கள்,
400 பைக்குகள் நிறுத்த முடியும். இந்த கார் பார்க்கிங் கிழக்கு, மேற்கு என்று இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு பகுதியில் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். மேற்கு பகுதியில் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். இந்த கார் பார்க்கிங்கில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய 5 பாயிண்டுகள் உள்ளன. மேலும் இங்கு மாற்று திறனாளிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த கார் பார்க்கிங்கிற்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும், தரை தளத்தில் உள்ள பிரதான வழியாக தான் நுழைய வேண்டும். வாகனங்கள் உள்ளே நுழையும்போது, வாகனம் வந்த நேரத்தை கம்ப்யூட்டரில் பதிவு செய்து டோக்கன் வழங்கப்படுகிறது. உள்நாட்டு முனையம், சர்வதேச முனையம் இரண்டுக்குமே ஒரே டோக்கன் தான்.
அதன் பின்பு அவர்கள் கிழக்கு, மேற்கு பகுதிகளில் பிரிந்து நிறுத்திக் கொள்ள வேண்டும். வாகனங்கள் உள்ளே நுழையும்போது நேரத்தை குறிப்பிட்டு கொடுக்கும் டோக்கனை வாகன ஓட்டிகள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். டோக்கன்களை தவறவிட்டால், இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.150, கார் போன்ற பெரிய வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
இந்த புதிய கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வந்தாலும், ஏற்கனவே பயணிகளை ஏற்றி இறக்கி வரும் வாகனங்களுக்கு
10 நிமிடங்கள் இலவச நேரம் உள்ளது. அந்த இலவச நேரம் தொடரும். விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோரின் வாகனங்கள், தற்போதைய கார் பார்க்கிங்கில் இலவசமாக நிறுத்தப்படுகின்றன. ஆனால் இந்த புதிய கார் பார்க்கிங்கில் அவர்களுக்கு 100 கார்கள், 100 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இலவசமாக நிறுத்த முடியும். அதற்கு மேலான வாகனங்களுக்கு சலுகை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு விமான நிலையத்தில் ஒப்பந்த பணியாளர்களாக
சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் இருசக்கர வாகனங்களுக்கு தற்போது மாதாந்திர கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படுகிறது.
அந்தக் கட்டணம் அதிகரிக்கப்படுமா அல்லது அதே கட்டணம் வசூலிக்கப்படுமா என்பதை இந்த புதிய கார் பார்க்கிங்கை நிர்வகிக்கும் ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்வார்கள்.
மேலும் சென்னை விமான நிலையத்திற்குள் நிரந்தரமாக இயங்கி வரும் பிரீபெய்ட் டாக்சிகள், பார்க்கிங் கட்டணம் குறித்து, அதையும் ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக வரும் வாகனங்களில் சொந்த வாகனங்களில் வருபவர்கள் விமான நிலைய போர்டிகோ வரையில், ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலை தொடரும்.
ஆனால் வாடகை கார்களில் வருபவர்கள், போர்டிகோ வரையில் வருவதற்கு, உள்ளே நுழையும் போதே ரூ.40 டோக்கன் வாங்கி விட்டு வர வேண்டும். அந்த வாகனங்கள் 10 நிமிடங்களில் சென்று விட்டால், அதற்கு மேலான கட்டணம் கிடையாது. அதையும் தாண்டி தாமதமாக சென்றால், அவர்கள் 30 நிமிடம் பார்க்கிங் கட்டணமான ரூ.75 செலுத்த வேண்டியது வரும். இந்த கார் பார்க்கிங்கில் 2,150 கார்கள் நிறுத்தலாம். அதில் 700 கார்கள் உள்நாட்டு முனையத்திற்கான கிழக்கு பகுதியிலும், 1,450 கார்கள் சர்வதேச முனையத்திற்கான மேற்குப் பகுதிகளிலும் நிறுத்த வேண்டும். அதை போல் இருசக்கர வாகனங்கள் உள்நாட்டு முனையும் கிழக்குப் பகுதியில் நிறுத்திக் கொள்ளலாம். இந்த புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து,
பழைய கார் பார்க்கிங் பகுதி முழுவதுமாக மூடப்படுகிறது. இனிமேல் அங்கு எந்தவிதமான வாகனங்களும் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. அந்த பகுதியை முழுவதும் புல் தரைகளாக மாற்றி, பூங்காக்கள் திட்டங்களை இந்திய விமான நிலைய ஆணையம் செயல்படுத்த உள்ளது. விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றி செல்வதற்காக வரும் வெள்ளை போர்டுகளுடன் கூடிய சொந்த வாகனங்கள் போர்டிகோ பகுதி வரையில் வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு,
10 நிமிடத்திற்குள் இலவசமாக சென்று விடலாம். ஆனால் வாடகைகார்கள் போர்டிகோ பகுதிக்கு வர முடியாது. வாடகை கார்கள் பிக்கப் பாய்ண்டிலிருந்து தான் பயணிகளை ஏற்றி செல்ல முடியும். கார்களை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு பயணிகள் உள்நாட்டு முனையம் மற்றும் சர்வதேச முனையத்திற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலம் வழியாக நடந்து செல்லலாம். அந்த நடை மேம்பாலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.