இந்தியாவின் ராணுவப் பயிற்சியில் தலையிட மூன்றாம் தரப்பினருக்கு அதிகாரம் இல்லை - சீனாவுக்கு இந்தியா பதில்!
02 Dec,2022
இந்தியா எந்த நாட்டுடன் ராணுவப் பயிற்சி நடத்துகிறது, என்பதை இந்தியாவின் உரிமை. புதுடெல்லி, உத்தரகாண்டில் உள்ள இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்து வரும் ராணுவப் பயிற்சி குறித்து சீனா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்த கூட்டு ராணுவப் பயிற்சியானது, இந்தியா மற்றும் சீனா இடையேயான தீர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக சீனா கூறியுள்ளது. இந்த நிலையில், சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:- இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும்
இடையே நடந்து வரும் ராணுவப் பயிற்சிக்கும் ஒப்பந்தத்துக்கும் எவ்வித தாக்கமும் இல்லை. சீனா ஏற்படுத்திய தனது 1993 மற்றும் 1996 ஆண்டு ஒப்பந்தத்தை மீறியுள்ளது. இந்தியா எந்த நாட்டுடன் ராணுவப் பயிற்சி நடத்துகிறது, யாருடன் ராணுவப் பயிற்சி நடத்தவில்லை என்பது இந்தியாவின் உரிமை. இதை எந்த மூன்றாம் தரப்பும் வீட்டோ செய்ய முடியாது. எங்கள் ராணுவப் பயிற்சியில் மூன்றாம் தரப்பினருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லடாக்கில் நிலவும் முட்டுக்கட்டை மற்றும் அமைதி முயற்சிகள் குறித்து பல நிலைகளில் முயற்சிகள் நடந்து வருகிறது. அது நல்ல பலனைத் தரும் என்று நம்புகிறோம்.