ஆசிரமத்தை 'அந்தப்புரமாக' மாற்றிய நபர்.. கதறிய சிறுமிகள்.. நாசிக்கில் கொடூரம்
27 Nov,2022
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் நகரத்தில் இயங்கி வரும் ஆசிரமத்தில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ஆசிரமத்தின் இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த சிறுமியை தான் பராமரிப்பதாக கூறி அச்சிறுமியை ஆசிரமத்தின் இயக்குநரே பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சிறுமியின் உறவினர்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், தற்போது மேலும் 5 சிறுமிகள் ஆசிரம இயக்குநர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.
ஆசிரமம் நாசிக் பகுதியில் உள்ள கூலித் தொழிலாளி ஒருவரின் குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அருகில் உள்ள ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்கையில் சிறுமியை காண உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது சிறுமி அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த துயரத்தை அவர்களிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த உறவினர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மேலும் 5 சிறுமிகள் இயக்குநர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்திருக்கின்றனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலாத்காரம் இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியுள்ளதாவது,
"ஆசிரமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த சிறுமிகள் இங்கு தங்க வைக்கப்படுகின்றனர். இவ்வாறு இருக்கையில், கடந்த வாரம் சிறுமி ஒருவர் எங்களிடம் புகார் கொடுத்திருந்தார். அதில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கையில் மேலும் 5 சிறுமிகள் புகார் அளித்திருக்கிறார்கள். அதாவது ஆசிரமத்தில் பணியாளர்கள் இல்லாதபோது ஏதோ சிறு சிறு வேலை இருப்பதாக கூறி அவரது அறைக்கு இயக்குநர் அழைத்துள்ளார். சிறுமிகளும் அவர் சொல்லும் வேலையை செய்து கொடுத்திருக்கிறார்கள்.
14-17 வயது சிறுமிகள் ஆனால் வேலையெல்லாம் முடிந்த பின்னரும் அவர் சிறுமிகளை வெளியில் செல்ல விடவில்லை. இப்படியாக அவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெளியில் தெரிந்தால் கொன்றுவிடுவதாகவும் சிறுமிகளை மிரட்டியுள்ளார். எனவே, சிறுமிகளால் இதனை தைரியமாக வெளியில் சொல்ல முடியவில்லை. இவ்வாறு அடிக்கடி நடப்பதையும் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே தற்போது புகார் கொடுத்திருக்கிறார்கள். இதிலிருந்து தங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று சிறுமிகள் புகாரில் கூறியுள்ளனர். இவர்கள் அனைவருமே
14-17 வயதுக்குட்பட்டவர்கள்தான். விசாரணை இதேபோல மொத்தம் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். டிசம்பர் 3ம் தேதிவரை குற்றம் சாட்டப்பட்ட நபர் எங்கள் கஸ்டடியில் இருப்பார். அதன் பின்னர் நாங்கள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவோம். சிறுமிகள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆசிரமத்தில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று மகளை அனுப்பியதாகவும், ஆனால் அந்த இடத்திலேயே இதுபோன்ற கொடுமைகள் நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருப்பதாகவும் பெற்றோர்கள் கதறியுள்ளனர்.
நாட்டின் நிலை நாடு முழுவதும் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் சுமார் 1,49,404 வழக்குகள் சிறார்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 53,874 வழக்குகள் போக்சோ வழக்குகளாகும். அதாவது, நாளொன்றுக்கு சராசரியாக 147 சிறார்கள் பாலியல் சார்ந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 6 சிறார்கள் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது தேசிய குற்ற ஆவண காப்பகம். சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டாலும், குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையை மாற்ற பெண்களை போகப் பொருளாக காட்சிப்படுத்தும் கண்ணோட்டம் தகர்க்கப்பட வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.