தி.மு.க கூட்டணி கட்சியான வி.சி.க தலைவர் திருமாவளவன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், விடுதலையானவர்களை நிரபராதிகள் என்று அழைத்ததோடு, உண்மையான குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 6 பேர் நிரபராதிகள்ஸ உண்மையான குற்றவாளிகள் தப்பித்துவிட்டார்கள் – திருமாவளவன்
தி.மு.க கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், விடுதலையானவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றதோடு, அவர்களை நிரபராதிகள் என்று கூறினார். மேலும், உண்மையான குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் நவம்பர் 11-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வி.சி.க தலைவர் திருமாவளவன், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 6 பேரை அப்பாவிகள் என்று அழைத்ததோடு, அவர்களில் ஒருவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதியின் எம்.பி-யுமான திருமாவளவன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட தண்டனை கைதிகளில் ஒருவரான ஆர்.பி. ரவிச்சந்திரனை சென்னையில் சந்தித்தார். ஆர்.பி. ரவிச்சந்திரன், இந்த வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் கழித்தவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பல அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்களையும் சந்தித்தார்.
திருமாவளவன் தனது செயலை நியாயப்படுத்தவில்லை. 2022 மே மாதம் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஏ.ஜி. பேரறிவாளன் உட்பட ஏழு குற்றவாளிகள் நிரபராதிகள் என்றும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த உண்மையான கொலையாளிகள் சட்டத்திலிருந்து தப்பிவிட்டனர் என்றும் கூறினார்.
“சுப்ரீம் கோர்ட் தான் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரமான 142-வது பிரிவை செயல்படுத்துவதன் மூலம் ஏழு பேரையும் விடுவித்தது. மேலும், அவர்களை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை. நான் அவர்கள் நிரபராதிகள் என்று நம்புகிறேன்” என்று திருமாவளவன் கூறினார்.
திருமாவளவனின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “அப்படியானால் ராஜீவ் காந்தியை யாரும் கொல்லவில்லையா? இந்த கொடூரமான குற்றத்திற்கு நீதிமன்றங்கள் தண்டனை வழங்கியதில் தவறு இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? ஆதாரங்கள், வாதங்கள் மற்றும் தீர்ப்புகளை ஆய்வு செய்தீர்களா? உங்களிடம் ஆதாரம் இருந்தால், தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு கொலை வழக்குக்கும் நீங்கள் இதே மாதிரிதான் பேசுவீர்களா? ஏன் அப்படி பேசவில்லை? என்று திருமாவளவனிடம் கேள்வி எழுப்பினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்தவர்களுக்கு ஆதரவாக வி.சி.க களமிறங்குவது இது முதல் முறையல்ல. கடந்த வாரம், வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலையான நளினியை கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான வன்னி அரசு, இனிப்புகள் வழங்கி வரவேற்றார். அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இது தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி தெரிவித்தனர்.
ராஜீவ் காந்தி மற்றும் 15 பேரைக் கொன்ற பெல்ட் வெடிகுண்டை வெடிக்கச் செய்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தனுவுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நளினி, 31 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு, விடுதலையானார். நளினி விடுதலையாகி ஒரு நாள் கழித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, வன்னி அரசு அவர் அருகில் அமர்ந்திருந்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், மே 18, 2022-இல் சிறையில் இருந்து விடுதலையான பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தபோது கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனடனை அனுபவித்து வந்தவர்களை விடுதலை செய்ததை காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஸாலினின் நிலைப்பாடாக இருந்தது. நீதிமன்றம் அவர்களை விடுவிக்கவில்லை. ஆனால், சிறைவாசத்தின் போது நல்ல நடத்தை உட்பட பல்வேறு காரணங்களுக்காக அவர்களை விடுவித்ததாக இரு தரப்பினரும் கூறுகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் மிகவும் உணர்ச்சிகரமான பிரச்சினையாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜகவைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் 2018-ம் ஆண்டில் அ.தி.மு.க அரசு அவர்களை விடுவிக்கும் முடிவை எடுத்தன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991, மே 21-இல் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு முன்பு விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டார். 1998-ம் ஆண்டு பூந்தமல்லியில் உள்ள சிறப்பு பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான தடா சட்டம் மூலம் நீதிமன்றத்தால் ஏழு குற்றவாளிகளுக்கும் 19 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைத்து 19 பேரை விடுதலை செய்தது.