சென்னையைச் சேர்ந்த இளம் கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ப்ரியாவின் குடும்பத்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், இழப்பீடாக ரூ.10லட்சத்தை வழங்கியுள்ளார். ப்ரியாவின் மரணத்தை அடுத்து, அரசு மருத்துவமனைகளில் இழைக்கப்படும் மோசமான சிகிச்சைகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெறும் பணியிடைநீக்கத்துடன் முடிவடைந்துவிடுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
ப்ரியாவின் மரணத்திற்கு முன்னதாக, அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக பாதிப்பை சந்தித்தவர்கள், தங்களது குடும்ப உறுப்பினரை இழந்தவர்கள் என்ன ஆனார்கள், அவர்களுக்கு இழப்பீடு கிடைத்ததா என்ற கோணத்தில் ஆராய்ந்தபோது, ஒரு சிலர் வழக்கு போட்டது பற்றியும், அதற்கான பல சிக்கல்களை சந்தித்ததாகவும் கூறுகின்றனர்.
மருத்துவ அலட்சியம் குறித்த வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் தண்டிக்கப்படுவது மிகவும் அரிது என்றும் கூறுகின்றனர்.
அரசு மருத்துவமனையால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?
நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக மனைவியை இழந்தவர் தேங்காய் வியாபாரி கணேசன்.
2011 மார்ச் மாதம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக நாகர்கோயில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ருக்மணி.
சிகிச்சை முடிந்து, ருக்மணியை காட்டவில்லை என்பதை உணர்ந்த கணேசன், “மருத்துவர்களிடம் பேசமுயன்றபோது சரியான பதில் கிடைக்கவில்லை. நெடுநேரத்திற்கு பின்னர், ருக்மணி சுயநினைவை இழந்துவிட்டார் என்றும் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தபோதுதான், தவறான சிகிச்சை அளித்ததை பற்றி அவருக்கு தெரியவந்தது” என்கிறார்.
''என் மனைவிக்கு சிகிச்சையின்போது, சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் கொடுப்பதற்கு பதிலாக நைட்ரஸ் ஆக்சைடு அளித்துவிட்டதாக சொன்னார்கள். அதனால் ருக்மணி கோமா நிலைக்கு சென்றுவிட்டார் என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மதுரை மருத்துவமனைக்கு போங்கள், காப்பாற்றும் வாய்ப்புள்ளது என்றார்கள், அதனால் அங்கிருந்து மதுரை சென்றேன். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல், என் மனைவி இறந்துபோனார். அந்த சமயத்தில் என் மகன் ஒன்பதாம் வகுப்பு, மகள் 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்கள். என் தேங்காய் கடையை மூடிவிட்டு, மருத்துவமனை வாசலில் பலநாள் இருந்தேன்,'' என்கிறார் கணேசன்.
மதுரையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் மற்றும் வழக்கறிஞர் அழகுமணி ஆகியோர், அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கான பல வழக்குகளை கையாண்டுள்ளனர். இவர்களின் உதவியுடன், வழக்கு தொடர்ந்த கணேசன், சுமார் எட்டு ஆண்டுகள் கழித்து ரூ.28 லட்சம் இழப்பீட்டை பெற்றுள்ளார்.
''நான் நூறு முறைக்கு மேல் நீதிமன்றம் சென்றிருப்பேன். சிலசமயம் பேருந்தில் செல்வதற்கு கூட காசில்லாமல் நடந்து சென்றேன். என் வழக்கை விசாரித்த நீதிபதிகள், என் நிலையை உணர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் தங்குவதற்கு இடம் ஒதுக்கவேண்டும் என்றார்கள். என் பிள்ளைகளை பிரிந்து, வாழ்வாதாரத்தை இழந்து, நம்பிக்கையுடன் காத்திருந்தேன். வழக்கு நடக்கும் நேரத்தில், எங்களை மருத்துவமனையில் மோசமாக நடத்தினார்கள் என்பதையும் நீதிமன்றத்தில் பதிவு செய்தேன். மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் மரணம் ஏற்பட்டது என்று தீர்ப்பு வந்தது, இழப்பீடு கொடுத்தார்கள், ஆனால் அந்த மருத்துவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை,''என்கிறார் கணேசன்.
வழக்கு நடக்கும் விதம்
குறிப்பாக அரசு மருத்துவமனையில் நடக்கும் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நெடிய சட்ட போராட்டத்தைச் சந்திக்கவேண்டும் என்கிறார் வழக்கறிஞர் அழகுமணி. ஒரு சிலர் மட்டும்தான் தொடர்ந்து வழக்கை நடத்தி, இழப்பீடு பெறுகிறார்கள் என்றும் அதிலும் மருத்துவர்கள் தண்டிக்கப் படுவது என்பது மிகவும் அரிதாகவே நடக்கிறது என்கிறார்.
தமிழிடம் பேசிய வழக்கறிஞர் அழகுமணி, ''மருத்துவமனைகளில் தவறான சிகிச்சை கொடுத்தால், முதலில் சிகிச்சையின்போது பின்பற்றப்படும் நடைமுறை என்ன, அதில் தவறு நேர்ந்துள்ளதா என்று நீதிபதிகள் விசாரிப்பார்கள். ஒரு சில, சம்பவங்களில், அறுவை சிகிச்சை அல்லது மிகவும் நுட்பமான மருத்துவ சிகிச்சை தொடர்பாக சந்தேகம் இருந்தால், மருத்துவ அறிக்கை ஒன்றை நீதிபதிகள் கேட்பார்கள். அந்த அறிக்கையை கொடுப்பதில் தாமதம் அரசு செய்யும் வாய்ப்புள்ளது. அரசு மருத்துவமனையை பொறுத்தவரை, துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தோம் என்றுகூறி, தவறு செய்தவர்களை பணியிடை நீக்கம் அல்லது பணியிட மாற்றம் செய்வார்கள்,'' என்கிறார்.
''சாதாரண அலட்சியம், திட்டமிடப்பட்ட குற்றவியல் அலட்சியம் என இரண்டு பிரிவுகள் உள்ளன. உள்நோக்கத்துடன் ஒரு மருத்துவர் ஒரு நோயாளிக்கு தவறான சிகிச்சை கொடுத்து, அதனால் அவர் பாதிக்கப்பட்டால் அது குற்றவியல் அலட்சியம் என்று சொல்லப்படுகிறது, மற்றவை சாதாரண அலட்சியம் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் பாதிக்கப்பட்டவருக்கு நேர்ந்த பாதிப்பின் அளவை பொறுத்தும் மருத்துவரின் பங்களிப்பைப் பொறுத்தும், எந்த பிரிவில் அது சேர்க்கப்படும் என்று ஒரு மருத்துவ குழுதான் முடிவு செய்யும். ஒருசில வழக்குகளில், இதுபோன்ற மருத்துவக் குழுவின் அறிக்கை கிடைப்பதற்கே நீண்ட நாட்கள் ஆகிவிடும் என்பதால், வழக்கு போட்டவர்கள் அதனை பின்தொடர முடியாமல் போய்விடும் என்கிறார்.
''கணேசனை போல ஒரு சிலர்தான் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வந்து, குறைந்தபட்சம் இழப்பீட்டை பெறுகிறார்கள். அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை, இலவசமாக மருத்துவம் பார்க்கிறார்கள் என்ற மனப்பான்மை, இறந்தவர்களுக்கு என்ன நீதி கிடைக்கும் என்ற மனப்பான்மை இருப்பதால், பலர் வழக்கை தொடர்ந்து நடத்துவதில்லை,''என்கிறார்.
அலட்சியமான சிகிச்சைக்கு தமிழக அரசின் பதில் என்ன?
கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணத்தில் அலட்சியம் நடந்ததை தமிழக அரசு மறைக்கவில்லை என்று கூறும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தவறு செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டவில்லை என்கிறார்.
''கவனகுறைவால் தவறு நேர்ந்தது உண்மை, முதல்கட்ட அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். அதேநேரம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் உதவியுள்ளோம். இறந்த மாணவி ப்ரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன, தவறு எங்கு நேர்ந்தது என்று ஆராய்ந்து நிபுணர் குழு அறிக்கை தரவேண்டும். அதனை கொண்டுதான் எந்தவிதத்தில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முடிவு செய்யமுடியும்,' 'என்கிறார் அமைச்சர்.
அரசு மருத்துவமனைகளில் அலட்சியத்தை குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து கேட்டபோது, ''மருத்துவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும், அவர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என அவர்களுக்கு உணர்த்தியுள்ளோம். முதல்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் முழுமையாக கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தருவதில் நாங்கள் தயக்கம் காட்டமாட்டோம்,''என்கிறார் அவர்.
சிகிச்சையில் அலட்சியத்தைத் தடுப்பது எப்படி?
அரசு மருத்துவமனையில் அலட்சியமாக சிகிச்சை கொடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சரிதான். ஆனால் அடிப்படையில், எத்தனை நோயாளிகளுக்கு அதுபோன்ற அனுபவம் நேர்கிறது என்பதை முதலில் பார்க்கவேண்டும், அவ்வாறு நேர்ந்த சமயத்தில் அந்த மருத்துவரோ, ஒரு மருத்துவக் குழுவோ ஏன் அவ்வாறு நடந்துகொண்டது என்பதையும் பார்க்கவேண்டும் என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர் ரவீந்திரநாத்.
அலட்சியத்தால் இதுபோன்ற மரணம் ஏற்படும்போது, அதனை சோதனை செய்யவும், அறிக்கை கொடுக்கவும் அந்த மருத்துவமனையின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களை தேர்வு செய்து நிபுணர் குழு அமைக்கவேண்டும். உதாரணமாக, பிரியா சம்பவத்தில், டெல்லி எய்ம்ஸ், சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவர்கள் என அந்த மருத்துவமனை தொடர்பில்லாத நபர்களை கொண்டுதான் விசாரணை செய்யவேண்டும் என்கிறார் ரவீந்திரநாத்.
தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடும்போது, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகம். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களின் வேலை நேரம், பணிச்சுமை என்பது மிகவும் அதிகம். அதேநேரம் மருத்துவர்கள், உதவியாளர்கள் ஆகிய பணிகளில் உள்ள பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்வதில்லை. இதுபோன்ற காரணங்களால் ஒரு சிலர் 14 மணி நேரம் கூட பணியாற்றவேண்டிய சூழல் அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றது என்கிறார் அவர்.
ப்ரியாவின் குடும்பத்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், இழப்பீடாக ரூ.10லட்சத்தை வழங்கியுள்ளார்.
ஊடக வெளிச்சத்திற்கு ஒரு விவகாரம் வந்துவிட்டால், அதற்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்வதுடன் நிறுத்திவதை விடுத்து, அரசு உடனடியாக காலி பணியிடங்களை நிரப்புவது, மருத்துவ பணியாளர்களின் நலனில் அக்கறை காட்டினால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கமுடியும் என்கிறார் ரவீந்திரநாத்.
மேலும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பான தொடர் கண்காணிப்புக்கு தேவையான பணியிடம் உருவாக்கப்படவேண்டும். மருத்துவர், செவிலியர், மேற்பார்வையாளர் என மூன்று பேரின் கவனமும் இருந்தால்தான் நோயாளிக்கு தரமான சிகிச்சை கிடைக்கும் என்கிறார் அவர்.
மருத்துவர்களின் மோசமான உதாரணங்கள் செய்தியாகின்றன, அதேநேரம், மருத்துவர்களின் அர்ப்பணிப்பு பற்றியும், குணமடைந்தவர்களின் நிலை பற்றிய விவரங்களும் வெளிச்சத்திற்கு வரவேண்டும். மருத்துவ உலகின் சாதனைகளை கொண்டாடுவது போல, குணமடைந்த நோயாளிகளின் அனுபவங்களை வெளிப்படுத்தவேண்டும் என்கிறார் அவர்.