தமிழகத்தை தனிநாடாக்குவதே இறுதி இலக்கு - அதிரடி கருத்து
17 Nov,2022
தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்த “திருமாவின் சிந்தனை கோட்பாடுகள்” எனும் தலைப்பில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் ஜெ. பாரத் என்பவர் எழுதிய நூல் இன்று வெளியிட்டுவைக்கப்பட்டது.
சென்னை அசோக் நகரில் உள்ள வி.சி.க தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவின் பின்னர் கருத்து வெளியிட்ட தொல் திருமாவளவன், அரசியல் என்பது பதவிக்காக, அதிகாரத்திற்காக, பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பு என்கிற உணர்வு இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மிக மிகக் குறைந்த நபர்களே கொள்கை கோட்பாடுகள் குறித்து ஆர்வம் காட்டி விவாதிக்கிறார்கள் எனவும் அனைத்துக் கட்சியிலும் இந்த நபர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அப்படிப்பட்டவர்களே முக்கிய பொறுப்புகளை பெற்று கட்சியை வழி நடத்துகிறார்கள் எனக் கூறியுள்ள திருமாவளவன், தமிழ் தேசிய இயக்கத்தில் வி.சி.கவின் பங்களிப்பு மகத்தானது எனவும், பெரிய பெரிய கட்சிகள் செய்ய முடியாததை வி.சி.க செய்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகிய மூன்றுமே உழைக்கும் மக்களுக்கு பகையானது எனவும் சாதி, முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், குடும்பம் என அவை எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.