முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (18, மே, 2022) உத்தரவிட்டது.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய மாநில அரசு 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவு செய்து மாநில ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பிய நிலையில், அந்த பரிந்துரையை ஆளுநர் இரண்டரை ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தார்.
அப்படி அனுப்பியது அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகும் நடவடிக்கை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்து, நீதியரசர்கள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு:
"மாநில அமைச்சரவையின் அறிவுரைக்கு கட்டுப்பட்டே, மாநில ஆளுநர், அரசமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்கீழ் தனது அதிகாரத்தை செயல்படுத்த முடியும் என்பது முன்பு இந்த நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளின் மூலம் நன்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு சிறைவாசியை விடுதலை செய்ய மாநில அமைச்சரவை முடிவெடுத்து அதனை பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பிய பிறகு, 161வது பிரிவின் கீழ் ஆளுநர் தனது அதிகாரத்தை செயல்படுத்தாமல் இருப்பது அல்லது அப்படி செயல்படுத்துவதில் விவரிக்க முடியாத தாமதத்தை ஏற்படுத்துவது நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உரியது.
மாநில அமைச்சரவையின் பரிந்துரையை இரண்டரை ஆண்டு காலம் கழித்து குடியரசுத் தலைவருக்கு மாநில ஆளுநர் அனுப்பியிருக்கும் செயலை அரசமைப்புச் சட்டம் ஆதரிக்கவில்லை; அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டுக்கும் அது விரோதமாக இருக்கிறது. இதன் மூலம் மாநில அரசின் கருத்தை ஆளுநர் பிரதிபலிக்கவில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.
வேறு ஒரு வழக்கில் இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இந்திய தண்டனை சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் தண்டனை குறைப்பு வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தவறானது. அரசமைப்புச் சட்டமோ, இந்திய தண்டனைச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேறு சட்டங்களோ அப்படி தண்டனை குறைக்கும் வெளிப்படையான நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கவில்லை.
குறிப்பாக அப்படி மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படாத நிலையில், இ.த.ச. 302ன் கீழ் மாநில அரசுக்கே நிர்வாக அதிகாரம் உள்ளது.
மனுதாரரின் (பேரறிவாளனின்) நீண்ட கால சிறைவாசத்தையும், சிறையிலும், சிறை விடுப்பிலும் அவரது திருப்தி அளிக்கும் நடத்தையையும், நாள்பட்ட உடல் நலக் கோளாறுகளையும், சிறைவாசத்தில் அவர் பெற்ற கல்வித் தகுதிகளையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்தக் கோரிக்கையை மீண்டும் ஆளுநரின் பரிசீலனைக்கே அனுப்புவது பொருத்தமற்றது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் 142 பிரிவின் கீழ் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மனுதாரர் 1991ம் ஆண்டு பதிவான குற்ற எண் 329ன் கீழ் தண்டனையை அனுபவித்துவிட்டதாக கருதப்படவேண்டும் என்று உத்தரவிடுகிறோம். ஏற்கெனவே பிணையில் உள்ள பேரறிவாளன் விடுதலை செய்யப்படுகிறார்" என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.