இந்திய மாநிலத்தில் சைபர் மோசடியில் ஈடுபட்ட இரு சீனர்கள் கைது!
18 Oct,2022
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சைபர் மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு சீனர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரும் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு செயலியை வெளியிட்டனர். இந்த செயலியின் மூலம் ஆன்லைனில் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் எனக்கூறி இந்தியர்களை ஈர்த்துள்ளனர். இருவர் மீதும் மோசடி, போலி ஆவணங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
"கைது செய்யப்பட்ட நபர்கள் பெங் சென்ஜின் மற்றும் ஹுவாங் குவான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 150 க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், இரண்டு மடிக்கணினிகள், ரூ. 30,000 ரொக்கம், 110 சீன யுவான், மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. சிறைக்கு அனுப்பப்பட்ட இருவரிடமிருந்தும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.