மாணவி சத்யபிரியா கொலை: கைதான சதீஷ்-க்கு அடி- உதை; சிறையில் அடைப்பு
15 Oct,2022
மாணவி சத்யபிரியா கொலை: கைதான சதீஷ்-க்கு அடி- உதை; சிறையில் அடைப்பு
கல்லூரி மாணவி ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளி சதீஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்தபோது வழக்கறிஞர்கள் அவரை அடிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெருவில் உள்ள காவல்துறையினர் குடியிருப்பில் வசித்து வருகிறார் மாணிக்கம். இவர் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், சத்யபிரியா மகளும் இருந்தனர்.
இந்நிலையில் இவருக்கு வீட்டுக்கு எதிரில் வசித்து வரும் ஓய்வுபெற்ற சப்- இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவர் மகன் சதீஷ் என்ற இளைஞருக்கும் சத்யப்பிரியாவுக்கு காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்த நிலையில், சதீஷ் வேலைக்கு எதுவும் செல்லாததால் சத்யபிரியா வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் காதலை முறித்துக்கொண்ட சத்யபிரியாவுக்கு சதீஷ் தினமும் தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனிடையே நேற்று பரிங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த சத்தியப்பிரியாவிடம் வழக்கம்போல் சதீஷ் பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்கு சத்யபிரியா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சதீஷ் அவரை ரயிலில் முன் தள்ளியுள்ளார்.
இதில் தண்டவாளத்தில் விழுந்த சத்யபிரியா தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சதீஷ் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. அவரது செல்போன் மூலம் அவர் இருக்கும் இடத்தை போலீசார் நெருங்கி வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னை துரைப்பாக்கத்தில் பதுங்கியிருந்த சதீஷை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது, நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் பலரும், சதீஷை தாக்க முயன்றுள்ளனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரை வரும் 28-ந் தேதி புழல் சிறைக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.