உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டரான பிரசண்டாவின் முதல் தொகுப்பு, திங்கள்கிழமையன்று இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் 'light combat helicopter' (எல்.சி.ஹெச்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.
இந்த இரண்டு என்ஜின்கள் கொண்ட ஹெலிகாப்டர் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் உள்ள, 'தனுஷ்' என்று அழைக்கப்படும் '143 ஹெலிகாப்டர் யூனிட்'-இல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் செளத்ரி, உலகளவில் கிடைக்கும் போர் ஹெலிகாப்டர்களை ஒப்பிடும்போது இந்த ஹெலிகாப்டர்கள் அவற்றுக்கு நிகரானவை அல்லது மேம்பட்டவை என்று கூறினார்.
recommended by
COSTA CAR TRADER
Rowan Atkinson's Car Collection Is Unrivalled
LEARN MORE
ஹெலிகாப்டரின் விரைவான இயக்கத்தை உறுதி செய்வதற்காக தொழில்முறை திறன் அடிப்படையில், 'தனுஷ்' யூனிட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
ராணுவம் மற்றும் விமானப்படையின் தேவைகளை இந்த ஹெலிகாப்டர் முழுமையாக பூர்த்தி செய்யும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
1999 கார்கில் போருக்குப் பிறகு இந்த ஹெலிகாப்டரை தயாரிப்பது பற்றிய யோசனை முன்வைக்கப்பட்டது. உயரமான மற்றும் கடினமான நிலப்பரப்பில் பயனுள்ளதாக இருக்கும் இலகுரக போர் ஹெலிகாப்டர் தன்னிடம் இல்லாததை இந்திய ராணுவம் அப்போது உணர்ந்தது.
இந்த இலகுரகபோர் ஹெலிகாப்டர் தொடர்பான சில சிறப்பு விஷயங்களை தெரிந்து கொள்வோம்:
1. இந்த இலகுரக போர் ஹெலிகாப்டரின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு உள் நாட்டிலேயே செய்யப்பட்டுள்ளது. இதை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது, இந்த ஹெலிகாப்டரில் சுமார் 45 சதவிகித உள்நாட்டு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது எதிர்காலத்தில் 55 சதவிகிதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், உலகின் சிறந்த பறக்கும் போர் இயந்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய ஆயுதப் படைகளின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஆயுதம் மற்றும் எரிபொருளுடன் 5000 மீ (சுமார் 16,400 அடி) உயரத்தில் தரையிறங்கி, டேக்-ஆஃப் செய்யக்கூடிய உலகின் ஒரே தாக்குதல் ஹெலிகாப்டர் எல்.சி.ஹெச் ஆகும்.
ராஜ்நாத் சிங்
பட மூலாதாரம், ANI
3. 2022 மார்ச் மாதம், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு, 3,887 கோடி ரூபாய் செலவில் எல்.சி.ஹெச்-இன் 15 'லிமிடெட் சீரிஸ்' உற்பத்தி வகைகளை வாங்கவும், 377 கோடி ரூபாய் உள்கட்டமைப்புச் செலவிற்கும் ஒப்புதல் அளித்தது. இந்த 15 ஹெலிகாப்டர்களில் 10 இந்திய விமானப் படைக்கும், 5 இந்திய ராணுவத்துக்கும் அளிக்கப்படும்.
4. கடல் மட்டத்திலிருந்து சியாச்சின் மலைத் தொடரின் உயரம் வரை பல்வேறு பகுதிகளிலும் உயரங்களிலும் பிரசண்டா எல்.சி.ஹெச்-இன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்த ஹெலிகாப்டர்கள், கடும் வெப்பம் , கடும் குளிர் மற்றும் பாலைவன சூழ்நிலையிலும் சோதனை செய்யப்பட்டன. இந்த ஹெலிகாப்டரின் நான்கு முன்மாதிரிகள் இதுவரை 234 முறை பறந்துள்ளன. அவை மொத்தமாக 1500 மணி நேரங்கள் பறந்துள்ளன.
5. எல்.சி.ஹெச் ரக ஹெலிகாப்டர் உற்பத்தியில் உள்நாட்டுமயமாக்கல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள 70 விற்பனையாளர்கள் தவிர, துணை செயல்முறைகள் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தியில் 250க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
6. 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள் மேலும் ஆறு எல்.சி.ஹெச் ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்படும்.
7. பிரசண்டா எல்.சி.ஹெச் ஹெலிகாப்டர் என்பது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட முதல் உள்நாட்டுப் போர் ஹெலிகாப்டர் ஆகும்.
8. பிரசண்டா சக்திவாய்ந்த தரை தாக்குதல் மற்றும் வான்தாக்குதல் திறன் கொண்டது. இந்த ஹெலிகாப்டர்கள் வேகமாக பறக்கக்கூடியது. விரிவாக்கப்பட்ட தாக்குதல் பரப்பளவு, அதிக உயரத்தில் செயல்திறன் ஆகியவற்றைக்கொண்டுள்ளது.
9. பிரசண்டா எல்.சி.ஹெச் ரக ஹெலிகாப்டர் 24 மணிநேரமும் போர், தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளை செய்யக்கூடியது. எதிரி வான் பாதுகாப்பை அழித்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் எல்லா வானிலைகளிலும் ஈடுபடக்கூடிய திறன் பெற்றது.
10. மெதுவாக நகரும் விமானம் மற்றும் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களை எதிர்த்துப் போரிடும் திறன் கொண்டது பிரசண்டா. இது தவிர, உயரமான இடத்தில் உள்ள பதுங்கு குழிகளைத் தகர்க்கும் நடவடிக்கைகளில் பயனுள்ளதாக இருக்கும்.
11. பிரசண்டா ஹெலிகாப்டர், காடு மற்றும் நகர்ப்புற சூழல்களில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தரைப்படைகளுக்கு உதவும் ஒரு சக்திவாய்ந்த சாதனமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
12. இந்த ஹெலிகாப்டர் எதிரிகளிடம் இருந்து தன்னை மறைத்துக்கொண்டு பறக்கும் திறன் கொண்டது. காரிருளில் கூட அவை பயனுள்ளதாக இருக்கும்.
13. பிரசண்டாவில், மேம்பட்ட வழிகாட்டி அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் சக்திவாய்ந்த வானில் இருந்து வான் இலக்கைத்தாக்கவல்ல ஏவுகணைகள் அதன் வலுவை பல மடங்கு அதிகரிக்கின்றன.
14. இந்த ஹெலிகாப்டரை உயரமான பகுதிகளில் இயக்கமுடியும். இது அதிக உயரத்தில் அமைந்துள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கவல்லது.
15. இலகுரக போர் ஹெலிகாப்டரின் முதல் முன்மாதிரி 2010 மார்ச் 29 அன்று தனது முதல் முறை பறந்தது. அதன்பிறகு தொடர்ந்து பணிகள் நடைபெற்று, சோதனைகள் நடத்தப்பட்டன. பிரசண்டா 20 மிமீ நோஸ் கன், 70 மிமீ ராக்கெட், பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை 'துருவாஸ்த்ரா' மற்றும் MBDAவின் வானில் இருந்து வான் இலக்கை தாக்கவல்ல ஏவுகணை 'மிஸ்ட்ரல்-2' ஆகியவற்றைக் கொண்டுள்ளது.