போலி போலீஸ்காரரை பிடிக்க தம்பதிகள் போல மாறுவேடத்தில் நடித்த நிஜ போலீஸ்காரர்கள்
21 Sep,2022
மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 3 இடங்களில் இரவு நேரத்தில் போலீசார் இளம்ஜோடி போல காத்திருந்தனர். சிவராமன் கத்தியை காட்டி மிரட்டி போலீசாரை தட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். மேலும் படிக்க சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் அணுகுசாலையில் கடந்த 16-ந்தேதி இரவு 8 மணியளவில் இளம்ஜோடி காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், அந்த ஜோடியிடம் தன்னை போலீஸ் என்று கூறி நீங்கள் சாலையில் தனியாக காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதை சி.சி.டிவி. மூலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்காணிக்கிறார். அதனால் உங்களிடம் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது என்று கூறி காரில் இருந்த ஜோடியிடம் இருந்து செல்போன் மற்றும் 4 பவுன் நகையை பறித்து சென்றார். இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே போல் கடந்த 17-ந் தேதி இரவு வெள்ளவேடு
அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிளில் பேசிக்கொண்டிருந்த இளம்ஜோடியிடம் அதே போன்று மர்ம நபர் தன்னை போலீஸ் என்று கூறி 6 பவுன் நகை-பணத்தை பறித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் பூந்தமல்லி உதவி போலீஸ் கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சிவராமன் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடிக்க தனிப்படையில் உள்ள போலீசார் இளம் தம்பதிகள்போல மாறுவேடத்தில் சென்று பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர். கடந்த 18 மற்றும் 19-ந்தேதிகளில் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 3
இடங்களில் இரவு நேரத்தில் போலீசார் இளம்ஜோடி போல காத்திருந்தனர். அப்போது வெள்ளவேடு டோல்கேட் அருகே காரில் மாறுவேடத்தில் அமர்ந்திருந்த போலீசாரிடம் கொள்ளையன் சிவராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கூப்பிடுகிறார். இறங்கி வாருங்கள் என்று அழைத்தார். போலீசார் காரில் இருந்து இறங்கி அவரை பிடிக்க முயன்றனர். அப்போது சிவராமன் கத்தியை காட்டி மிரட்டி போலீசாரை தட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். 400 அடி சாலையில்
இருபுறங்களிலும் சாதாரண உடையில் காத்திருந்த தனிப்படை போலீசார் பூந்தமல்லி பைபாஸ் சாலையில் சிவராமனை விரட்டி சென்றனர். 200 அடி ரோட்டில் உள்ள மதுரவாயல் டோல்கேட்டில் வைத்து சிவராமனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நகை, பணம் பறிப்பு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 45 கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.